காப்பீடு இல்லையா.? அப்போ பெட்ரோல் கிடைக்காது! - உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இந்திய சாலைகளில் இயங்கும் 56% வாகனங்களுக்கு காப்பீடு இல்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
வாகன காப்பீடு
Insurance
Updated on

நாட்டில் சாலை விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. சாலை விதிகளை முறையாக கடைபிடிப்பது முதல் காப்பீடு எடுப்பது வரை வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய சாலைகளில் இயங்கும் 56% வாகனங்களுக்கு காப்பீடே இல்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

இதன் காரணமாக காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தி உச்ச நீதிமன்றம், மத்திய அரசுக்கு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் நேற்று (ஆகஸ்ட் 4) சாலை விபத்துக் காப்பீடு தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை செய்தது. விசாரணையின் முடிவில் மத்தய அரசுக்கு காப்பீடு தொடர்பான முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

இதையும் படியுங்கள்:
தனியார் துறை ஊழியர்களுக்கு வேலை இழப்புக் காப்பீடு எப்படி நிதி பாதுகாப்பு தருகிறது?
வாகன காப்பீடு

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறுகையில், “மோட்டார் வாகனச் சட்டத்தின் படி அனைத்து வாகனங்களுக்கும் 3-ம் நபர் காப்பீடு கட்டாயமாகும். ஆனால் இந்த விதியை பெரும்பாலான வாகன ஓட்டிகள் பின்பற்றவில்லை. நாடாளுமன்ற நிலைக் குழு அளித்த அறிக்கையின் படி, இந்திய சாலைகளில் இயங்கும் வாகனங்களில் சுமார் 56% வாகனங்கள் காப்பீடு இன்றி இயங்குவது அதிர்ச்சி அளிக்கிறது.

காப்பீட்டின் அவசியத்தை உணர்த்த வேண்டுமெனில் ஒரு புதிய முன்னோடி திட்டம் தேவை. ஆகையால், காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களை வழங்கக் கூடாது என்ற முன்னோடி திட்டத்தை மத்திய அரசு தொடங்க வேண்டும். இந்தத் திட்டம் தொடங்கப்பட்டால், இரு விதமான பலன்கள் கிடைக்கும்.

ஒன்று, காப்பீடு இல்லாத வாகனங்களை எளிதாக கண்டுபிடித்து விடலாம். மற்றொன்று காப்பீட்டின் அவசியத்தை உணர்ந்து வாகன ஓட்டிகள் காப்பீடு எடுப்பர்.

மாநில காவல் துறை அதிகாரிகளிடம் வாகனங்களின் காப்பீட்டு நிலையை சரிபார்ப்பதற்கான எந்தவொரு சரியான அமைப்பும் இல்லை. காப்பீட்டு நிலையை சரிபார்க்க காவல் துறையினருக்க கையடக்க கருவிகள் அல்லது புதிய மொபைல் செயலிகளை மத்திய அரசு உருவாக்க வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

வாகன காப்பீடு
Insurance
இதையும் படியுங்கள்:
செல்லாத ஓட்டுநர் உரிமம்: காப்பீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
வாகன காப்பீடு

மோட்டார் வாகனச் சட்டத்தின் படி காப்பீடு எடுக்க வேண்டியது கட்டாயம். ஆனால் நாட்டில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட வாகனங்கள் காப்பீடு இல்லாமல் இயங்குவது சரியானதல்ல.

விபத்து காலங்களில் வாகன ஓட்டிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க காப்பீடு தான் முக்கிய ஆதாரமாக இருக்கிறது. மேலும் காப்பீடு எடுத்தவர்கள், காலாவதி தேதிக்கு முன்னரே புதுப்பிக்க வேண்டியதும் அவசியம். ஏனெனில் காலாவதியான ஓட்டுநர் உரிமம் மற்றும் காப்பீட்டிற்கு விபத்து நிவாரணம் வழங்க முடியாது என கடந்த வாரம் தான் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

இதனால் காப்பீடு மட்டுமல்ல, அது செயலில் இருக்க வேண்டியதும் அவசியம். உச்ச நீதிமன்றத்தின் இந்த எச்சரிக்கையை வாகன ஓட்டிகள் சாதாரணமாக கடந்து விடாமல், காப்பீடு எடுத்துக் கொள்வது தான் சிறந்தத் தீர்வாக இருக்கும்.

உச்ச நீதிமன்றம் உத்தரவை ஏற்று மத்திய அரசு புதிய திட்டத்தை செயல்படுத்தினால், இனி வாகற ஓட்டிகள் கட்டாயம் காப்பீட்டை எடுக்க வேண்டியிருக்கும். இல்லையெனில் வாகனங்களை இயக்கவே முடியாது.

logo
Kalki Online
kalkionline.com