

பூமியைச் சுற்றும் பாதையில் பயணிக்கும் '2024 YR4' எனக் குறிக்கப்படும் ஒரு சிறிய விண்கல், விரைவில் நிலவின் மீது மோதக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
பூமிக்கு அருகில் அல்லது தொலைவில் விண்வெளியில் பயணிக்கும் விண்கற்கள் ஃப்ளை-பைஸ் (fly-bys) என்று அழைக்கப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலான விண்கற்களால் ஆபத்து இல்லை. இருப்பினும், பிரபஞ்சத்தில் மனிதனால் தீர்க்கப்படாத பல மர்மங்களை அவை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளன. அவை விண்வெளி குறித்த நிறைய அறிவையும் தகவல்களையும் வழங்குகின்றன.
இந்தக் கற்கள் சில நேரங்களில் சிறிய கோள்களாகவும் அடையாளம் காணப்படுகின்றன. மேலும், அவை 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நமது சூரிய மண்டலம் உருவாக்கப்பட்டபோது உருவான எச்சங்கள் எனவும் கூறப்படுகின்றன.
இந்த விண்கல் துண்டுகள் கோள்களின் ஈர்ப்பு விசைக்கு உட்பட்டவை மற்றும் பூமிக்கு நெருக்கமாகச் சுற்றி வரக்கூடியவை. இப்போது வரை, ஒரு பெரிய விண்கல் பூமிக்கு எவ்வளவு அருகில் வரும், அது எவ்வளவு கடினமாகத் தாக்கும் என்பதை மனிதர்களால் சரியாக அறிய முடியவில்லை.
இந்நிலையில் பூமியைச் சுற்றும் பாதையில் பயணிக்கும் '2024 YR4' எனக் குறிக்கப்படும் சுமார் 60 மீட்டர் அகலமுள்ள ஒரு சிறிய விண்கல், விரைவில் நிலவின் மீது மோதக்கூடும் என்றும் அப்படி நடக்கும் பட்சத்தில் தீப்பிழம்புகள் பூமியை நோக்கி வீசும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
‘2024 YR4’ என்ற இந்த விண்கல் கடந்தாண்டு ஆரம்பத்தில் சிலியில் உள்ள ஒரு பாலைவனத்தில் தொலைநோக்கி மூலம் விண்வெளியைக் கவனித்துக் கொண்டிருந்தபோது கண்டுபிடிக்கப்பட்டது. இது 2013-ம் ஆண்டு ஒரு சிறிய விண்கல் மோதியதை விட இது 6 மடங்கு அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அப்படி ‘2024 YR4’ விண்கல் மோதுவதற்கான வாய்ப்பு சுமார் 4% மட்டுமே என நிபுணர்கள் கணித்திருந்தாலும், அது பூஜ்ஜியம் அல்ல என்பதுதான் விஞ்ஞானிகளின் கவலையாகும். கடந்தாண்டு ‘2024 YR4’ விண்கல் நிலவைத் தாக்க ஒரு சதவீதம் வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் அறிவியலின் இந்த அரிய நிகழ்வை வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே நேரடியாகக் காணக்கிடைக்கும் என்பதால், விஞ்ஞானிகள் மத்தியில் உற்சாகமும் அதிகரித்திருக்கிறது.
விண்கல் நிலவில் மோதினால், அதன் சக்தி நடுத்தர அளவிலான அணுகுண்டு வெடிப்புக்கு இணையானதாக இருக்கும் என்றும் இந்த மோதலால் நிலவில் சுமார் ஒரு கிலோமீட்டர் அகலத்தில் பெரிய பள்ளமும், நிலவு 5 ரிக்டர் அளவுக்கு குலுங்கும் என்றும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
'2024 YR4' விண்கல், வரும் 2032ம் ஆண்டு டிசம்பர் 22-ம்தேதி அன்று நிலவின் பாதையை கடந்து செல்ல வாய்ப்புள்ளதாகவும், அப்படி செல்லும் போது நிலவின் மீது மோதினால், அதன் ஆற்றல் மிக பிரம்மாண்டமானதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
மோதலில் இருந்து சிதறிச் செல்லும் துண்டுகள் சுமார் 400 கிலோ கிராம் எடை கொண்டவையாக இருக்கும் என்றும் இந்த சிதறல்கள் புவியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்து, பூமியை நோக்கி வரக்கூடும் என்றும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இதனால் செயற்கை கோள்களுக்கு அபாயம் ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.