

தமிழ்நாட்டில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் தேமுதிக, ராமதாஸ் தரப்பு பாமக மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் இன்னும் கூட்டணியில் இணையாமல் உள்ளனர். ஓபிஎஸ் அதிமுகவில் இணைய விருப்பம் தெரிவித்தாலும், தனை மறுத்து விட்டார் எடப்பாடி பழனிசாமி.
அன்புமணி தரப்பு பாமக ஏற்கனவே அதிமுகவில் கூட்டணி வைத்துள்ள நிலையில், ராமதாஸ் அதிமுக பக்கம் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திமுக அல்லது தவெகவில் கூட்டணி வைக்க அவர் முயற்சித்து வருகிறார்.
ராமதாஸ்க்கு இது கடைசி தேர்தலாக இருக்கும் சூழலில், கௌரவமான வெற்றியைப் பெற அவர் திமுக கூட்டணியில் இணைய முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், முதலமைச்சர் ஸ்டாலின் உடன் போனில் உரையாடியதாகவும் அவரது ஆதரவாளர் தெரிவித்துள்ளார்.
திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் சற்று விரிசல் ஏற்பட்டுள்ள காரணத்தால் இன்னும் தொகுதி பங்கீடு முடிவடையவில்லை. காங்கிரஸுக்கு இடம் ஒதுக்கப்பட்ட பிறகு தான், மற்ற கட்சிகளுக்கு இடம் ஒதுக்கப்படும் என திமுக தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வெகுவிரைவில் திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணையும் என கனிமொழி தெரிவித்துள்ளார். அதாவது தேமுதிகவும், ராமதாஸ் தரப்பு பாமகவும் திமுக கூட்டணியில் இணைய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
தேமுதிக சார்பில் முதலில் 20 தொகுதிகள் கேட்கப்பட்ட நிலையில், தற்போது 10 தொகுதிகளுடன் ஒரு ராஜ்யசபா சீட்டும் கேட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திமுக எம்எல்ஏ ஒருவர் உதவியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் ராமதாஸ் போனில் உரையாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அப்போது, காங்கிரஸ்க்கான தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகே உங்களுக்கான வாய்ப்பு வழங்கப்படும். அதுவரை காத்திருக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியதாக ராமதாஸ் தரப்பு ஆதரவாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தனித்துப் போட்டியிட ராமதாஸ் தரப்பு பாமக விரும்பவில்லை. மாறாக திமுக அல்லது தவெகவுடன் கூட்டணி வைக்க கட்சியின் நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக தற்போது திமுகவின் அழைப்புக்காக ராமதாஸ் தரப்பு பாமக காத்திருக்கிறது.
ஒருவேளை ராமதாஸுக்கு கூட்டணியில் இணைய திமுக வாய்ப்பு கொடுக்கவில்லை எனில், தவெக-வில் இணைய அக்கட்சி உறுப்பினர்கள் முயற்சி மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ராமதாஸுடன் பேச்சுவார்த்தை நடத்த செங்கோட்டையன் முயற்சித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் தேமுதிக மற்றும் ராமதாஸ் எந்தக் கூட்டணியில் இணைவார்கள் என்பது முடிவாகி விடும் எனத் தெரிகிறது. மேலும் ஓபிஎஸ் அதிமுகவிற்கு செல்ல முடியாத சூழலில் எக்கட்சியில் இணைவார் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
அவரது ஆதரவாளர்கள் சிலர் ஏற்கெனவே திமுகவில் ஐக்கியமானதால், அவரும் திமுகவில் இணைவாரா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது