

தெற்கு ரயில்வேயின் முக்கிய ரயில் முனையமாக இருக்கும் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில், மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி முதல் 45 நாட்களுக்கு புறநகர் ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதோடு 10 மற்றும் 11 ஆகிய நடைமேடைகளில் வரவேண்டிய புறநகர் ரயில்கள் அடுத்த 45 நாட்களுக்கு 5 மற்றும் 6வது நடைமேடையில் வந்து செல்லும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்தது.
மேலும் ரயில் சேவைகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டது. இதனால் தினந்தோறும் பயணிகள் கடுமையான நெருக்கடியை சந்தித்து வந்த நிலையில் தற்போது இன்று முதல் மேலும் 49 ரயில் சேவைகள் குறைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
எவ்வித முன்னறிவிப்பும் இன்றி இன்று ரயில் சேவை குறைக்கப்பட்டு இருப்பது பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் செங்கல்பட்டு, திருமால்பூர், காஞ்சிபுரம் மற்றும் அரக்கோணம் வரை இரு மார்க்கங்களில் தினசரி 204 மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் 10 மற்றும் 11ஆவது நடைமேடைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மறுசீரமைப்பு பணிகளால் ரயில் சேவைகளின் எண்ணிக்கை 164 ஆக குறைக்கப்பட்டது.
கடந்த பிப்ரவரி 20-ம் தேதி முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை ரயில் சேவைகளின் எண்ணிக்கை குறைக்கப்படுவதாக ஏற்கனவே தெற்கு ரயில்வே தெரிவித்திருந்தது. மேலும் பயணிகளின் வசதிக்காக மாம்பலத்தில் 8 விரைவு ரயில்கள் நின்று செல்லும் எனவும் அறிவிப்பு வெளியானது.
இதுதவிர எழும்பூர் ரயில் நிலையத்தில் வழக்கத்தை விடவும் கூடுதலான பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகம் முடிவு செய்தது. இருப்பினும் எழும்பூர் முதல் தாம்பரம் வரையிலான ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. ரயில்களின் குறைவால், அனைத்து ரயில்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
இந்நிலையில் இன்று ஓர் அதிர்ச்சித் தகவலை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. இதன்படி மேலும் 49 ரயில்களின் ரயில் சேவை குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 40 ரயில்கள் குறைக்கப்பட்டு 204 இல் இருந்து 264 ஆக ரயில் சேவை குறைந்தது.
இந்நிலையில் மேலும் 49 ரயில்கள் குறைக்கப்பட்டு தற்போது 115 ரயில் சேவைகள் மட்டுமே இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இன்று முதல் (பிப்ரவரி 24) வருகின்ற ஏப்ரல் 5-ம் தேதி வரை சென்னை கடற்கரை முதல் அரக்கோணம் வரை இரு மார்க்கத்திலும் 115 ரயில்கள் மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
முன்னறிவிப்பில்லாத தெற்கு ரயில்வேயின் திடீர் அறிவிப்புகளால் பயணிகள் கடுமையான சிரமத்தை சந்தித்து வருகின்றனர். தற்போது பள்ளி மாணவர்களுக்கு தேர்வு நடைபெறும் நேரம் என்பதால் ரயில்களின் சேவை குறைக்கப்பட்டு இருப்பது மாணவர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. அதோடு தினசரி வேலைக்கு செல்பவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து நான்காவது நாளாக ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது பயணிகளுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இந்த ரயில் சேவை சீராக இன்னும் 41 நாட்கள் மீதம் இருக்கும் நிலையில் அதுவரையில் என்னென்ன மாற்றங்கள் நிகழப்பட இருக்கிறதோ என பயணிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.