

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்படுவது பாரம்பரியமான வழக்கம். ஆனால் நடப்பாண்டு பாரம்பரிய வழக்கப்படி ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறக்கப்படுவதில் காலதாமதம் ஏற்படும் என அரசு தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.
மேட்டூர் அணையின் மொத்த கொள்ளளவு 93.47 டிஎம்சி ஆகும் இதில் மே மாத இறுதி நிலவரப்படி தற்போது 41 டிஎம்சி தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. கிட்டத்தட்ட பாதிக்கும் குறைவான கொள்ளளவே இருப்பதால், மேட்டூர் அணையை ஜூன் 12-ல் திறப்பது சாத்தியமில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இதுகுறித்து முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனையில் அமைச்சர் ஆனந்த் உட்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு, முதன்முறையாக ஜூன் 12-ல் மேட்டூர் அணையை அவர் திறந்து வைப்பார் என விவசாயிகள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மேட்டூர் அணையைத் திறப்பதில் கால தாமதம் ஏற்படும் என்ற தகவல், டெல்டா விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை காலதாமதமாக தொடங்கப்படும் எனவும், மழை அளவு குறைவாக இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பொதுவாக ஜூன் 1-ல் தென்மேற்குப் பருவமழைத் தொடங்கி விடும். இந்தப் பருவமழையால் கர்நாடகத்தில் உள்ள அணைகள் நிரம்பி, உபரி நீர் மேட்டூர் அணைக்கு வரும். ஆனால் இம்முறை பருவமழை தாமதமானதால் மேட்டூர் அணையைத் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பொதுவாக ஜூன் 12ல் திறக்கப்படும் மேட்டூர் அணை நீர், கடை மடைக்கு செல்ல கிட்டத்தட்ட 7 முதல் 10 நாட்கள் வரை ஆகும. அதன் பிறகு விவசாயிகள் குறுவை சாகுபடியைத் தொடங்கினால், செப்டம்பர் மாதத்தில் அறுவடைக்கு வரும். செப்டம்பர் மாத அறுவடை முடிந்த பிறகு சம்பா அறுவடையை விவசாயிகள் தொடங்குவர். அதற்கேற்ப நிலமும் தயாராகி விடும்.
நடப்பாண்டில் மேட்டூர் அணைத் திறப்பில் காலதாமதம் ஏற்பட்டால், டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர் நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் குறுவை சாகுபடி கடுமையாக பாதிக்கப்படும்.
மேட்டூர் அணை தாமதமாக திறக்கப்பட்டால் குறுவை சாகுபடி அறுவடையும் தாமதமாகி விடும். அக்டோபர் மாதத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்பதால், அந்த நேரத்தில் அறுவடை நிகழ்ந்தால், பயிர்கள் மழை நீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும்.
ஆகையால் தான் ஜூன் 12 டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு மிக முக்கியமான நாளாக பார்க்கப்படுகிறது. இதற்கு இன்னும் 8 நாட்களே மீதமுள்ள சூழலில் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்