
கடந்த 2019 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. இதனால் இந்தியா மற்றும் அமெரிக்கா உள்பட அனைத்து நாடுகளுமே கடுமையான பாதிப்பைச் சந்தித்தன. கொரோனா வைரஸ் பல உயிரிழப்புகள் மட்டுமின்றி, பொருளாதார அளவிலும் இறக்கத்தை சந்தித்தன உலக நாடுகள். முக கவசம், ஊரடங்கு மற்றும் தடுப்பூசி ஆகியவற்றால் கொரோனா வைரஸிலிருந்து உலக நாடுகள் அனைத்தும் மெல்ல மெல்ல மீண்டு வந்தன.
தற்போது பொருளாதார நிலைமை சீராகி வரும் நிலையில், மீண்டும் புதிய வகை கொரோனா வைரஸ் மலேசியாவில் தீவிரமாக பரவி வருவதாக அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. மலேசியாவில் கடந்த சில நாட்களாக பெரும்பாலானோர் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், இது கொரோனா வைரஸின் புதிய வடிவம் என அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்தனர்.
இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பரவிய எக்ஸ்.எஃப்.ஜி. என்ற புதிய வகை கொரோனா வைரஸ், தற்போது மலேசியாவில் பரவி வருகிறது. மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலருக்கும் மர்மக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால், இன்புளுயன்சா பாதிப்பு உறுதியாகி இருக்கிறது.
மலேசியாவின் ஒரு சில பள்ளிகளில் மாணவர்களுக்கு புதிய வகை கொரோனா வைரஸ் அடையாளம் காணப்பட்டது. 14 மாணவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்த ஒரே வாரத்தில் இந்த எண்ணிக்கை 97 ஆக உயர்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலேசியாவின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
யாருக்கேனும் மர்மக் காய்ச்சல் இருந்தால், 5 முதல் 7 நாட்கள் வரை அவர்களாகவே தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாடு முழுக்க கிட்டத்தட்ட 6,000 மாணவர்கள் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலேசியாவில் உள்ள பல பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்த வேண்டும் என மலேசிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வெளியில் அதிகமாக செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும், ஒருவேளை வெளியில் சென்றால் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் எனவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் அதிக அளவில் கூட்டமாக கூடுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகிறார்கள்.
மலேசியாவில் கிட்டத்தட்ட 4 லட்சம் மாணவர்கள் வருகின்ற நவம்பர் மாதத்தில் பள்ளி இறுதித் தேர்வை எழுத உள்ளனர். இந்நிலையில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி இருப்பது மாணவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் திட்டமிட்டபடி தேர்வு நடக்குமா என்பதும் சந்தேகம் தான்.
மலேசியாவில் பரவி வரும் எக்ஸ்.எஃப்.ஜி. புதிய வகை கொரோனா வைரஸை, கண்காணிப்பில் வைக்க வேண்டிய கொரோனா வைரஸ் என உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. இதனால் மலேசியா மக்கள் அதிக கவனத்துடன் செயலாற்ற வேண்டியது அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.