
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் மிகவும் அதிகம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இருப்பினும் இரண்டுக்கும் இடையிலான வித்தியாசம் எவ்வளவு என்பதை நாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்நிலையில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளுக்கு தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் அரசுப் பள்ளிகளைப் போல் எத்தனை மடங்கு அதிகம் என்ற தகவல் தற்போது தெரிய வந்துள்ளது. இந்தியாவின் பல மாநிலங்களில் தனியார் பள்ளிகளில் 100 மடங்கு வரை அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையில் தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளின் கல்விக் கட்டணம் குறித்த கணக்கெடுப்பை எடுக்கத் தொடங்கியது மத்திய அரசு. இந்த கணக்கெடுப்பின் முடிவில் அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்துள்ளது. மழலையர் வகுப்புகளுக்கே தனியார் பள்ளிகளில் கட்டணம் அன்னாந்து பார்க்கும் வகையில் உள்ளது. இதனால் பெற்றோர்கள் கடுமையான நிதி நெருக்கடியை சந்திப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள கணக்கெடுப்பின் படி, ஊரகப் பகுதிகளில் மட்டும் தனியார் பள்ளிகள் அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் 22 மடங்கு அதிக கட்டணத்தை வசூலிக்கின்றன. குறிப்பாக அரசின் மழலையர் பள்ளிகளில் ரூ.823 கட்டணம் என்றால், அதே வகுப்புக்கு தனியார் பள்ளிகளில் ரூ.17,988 வசூலிக்கப்படுகிறது. தொடக்க கல்விக்கு அரசுப் பள்ளிகளில் ரூ.1,741-ம், தனியார் பள்ளிகளில் ரூ.19,794-ம் வசூலிக்கப்படுகிறது. தனியார் பள்ளிகளில் மேல்நிலைக் கல்விக்கு 4.5 மடங்கும், உயர்நிலைக் கல்விக்கு 6 மடங்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊரகப் பகுதிகளில் அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளைக் கொண்ட மாநிலங்கள் பட்டியலில் சத்தீஸ்கர் முதலிட்த்தில் உள்ளது. இந்த மாநிலத்தில் தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளுக்கு இடையேயுள்ள கட்டண வித்தியாசம் 107.9 மடங்காகும். இந்தப் பட்டியலில் 49.1 மடங்கு வித்தியாசத்துடன் ஆந்திரப் பிரதேசம் இரண்டாவது இடத்திலும், 45.3 மடங்கு வித்தியாசத்துடன் தமிழ்நாடு மூன்றாவது இடத்திலும் உள்ளன.
ஊரகப் பகுதிகளைக் காட்டிலும் நகர்ப்புறங்களில் தனியார் பள்ளிகள் இன்னும் கூடுதலான கல்விக் கட்டணத்தை வசூலிக்கின்றன. நகர்ப்புறங்களில் அரசுப் பள்ளிகளில் மழலையர் கல்விக்கு ரூ.1,630-ம், தனியார் பள்ளிகளில் 16 மடங்கு அதிகரித்து ரூ.26,188-ம் வசூலிக்கப்படுகிறது. நகரப்புறத்தைப் பொறுத்தவரை நாட்டில் அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் கர்நாடகத்தில் தான் அதிகமுள்ளன என மத்திய அரசின் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
தனியார் பள்ளிகள் கல்வியை வியாபாரமாக பார்ப்பதால் தான், இந்த அளவிற்கு கட்டண உயர்வை செயல்படுத்தி வருகின்றன. அரசுப் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் முன்வர வேண்டியது அவசியம் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.