ஸ்வீடனில் பள்ளிக்கூடம் ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் சுமார் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் என்னத்தான் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தாலும், இதுவரை அவ்வளவாக அதை யாரும் செயல்படுத்தியதில். ஏனெனில், பள்ளிகள் மற்றும் விமானங்கள் போன்ற பெரிய இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்த்த யாருக்கும் மனமும் வராது, பாதுகாப்பும் அதிகம்.
ஆனால் வெளிநாடுகளில் சகஜமாக பள்ளிகளில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடைபெறுகின்றன. அந்தவகையில் ஸ்வீடனில் ஒரு பள்ளியில் துப்பாக்கிச்சூடு சம்பவம்தான் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. இந்த சம்பவத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அந்த நாட்டு செய்தியாளர்கள் பேசுகையில், "பள்ளிக்கூடத்தில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. அதில் எத்தனை பேர் காயமடைந்துள்ளனர் என்ற சரியான எண்ணிக்கை தெரியவில்லை. சம்பவத்தில் இறந்தவர்களில் ஒருவர் குற்றவாளி என்று சந்தேகிக்கிறோம்.
இந்தத் துப்பாக்கிச் சூடு ஏன் நடந்தது, பள்ளிக்கு உள்ளே நடந்ததா, வெளியே நடந்ததா என்பது இன்னும் முழுமையாகத் தெரியவில்லை." என்று கூறியிருக்கிறார்கள்.
அதேபோல் அந்த பள்ளியில் உள்ள ஒரு ஆசிரியர் பேசுகையில், “துப்பாக்கிச் சூடு குறித்து மாணவர்கள் எங்களிடம் ஓடிவந்து கூறினார்கள். பின்னர், துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. நாங்கள் வெளியே செல்லவில்லை. ஆரம்பத்தில் அதிகம் கேட்ட துப்பாக்கிச் சத்தம் பின்னர் அமைதியானது. மீண்டும் அரை மணிநேரத்திற்குப் பிறகுத் தொடங்கியது. நாங்கள் டெஸ்குக்கு கீழ் ஒளிந்துகொண்டிருந்தோம்." என்று பேசியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களைப் பற்றி இன்னும் எந்த தகவலும் வெளியாகவில்லை. கொலையாளிக்கு ஒரு 35 வயது இருக்கும் என்றும், ஆயுத லைசன்ஸ் உள்ளது என்றும் கூறப்படுகிறது.
ஆனால், இதற்கு முன்னர் அவர் மீது எந்த குற்றங்களும் பதியவில்லை. அவர் வீட்டையும் போலீஸார் சோதனை செய்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து ஸ்வீடன் பிரதமர் பேசுகையில், “இது நாட்டின் வரலாற்றிலேயே மிக மோசமான பெரிய அளவிலான துப்பாக்கிச் சூடு. இந்த சம்பவம் குறித்துப் பல கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. நானும் அவற்றுக்குப் பதில் கூற முடியாது. ஆனால், இது எப்படி நடந்தது, ஏன் நடந்தது என நிச்சயம் தெரியவரும்.” என்று பேசியிருக்கிறார்.