
தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற பழம்பெரும் நடிகை புஷ்பலதா. 87 வயதான நடிகை புஷ்பலதா சென்னை தியாகராய நகர் திருமலைப்பிள்ளை சாலையில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவர், அதற்காக சிகிச்சையும் எடுத்து வந்த நிலையில் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு நடிகர்-நடிகைகள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
தமிழில் 1961-ம் ஆண்டு வெளியான 'செங்கோட்டை சிங்கம்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை புஷ்பலதா.
இதனைத் தொடர்ந்து அப்போதைய முன்னணி நடிகர்களான எம்ஜிஆர், சிவாஜி, ஜெய்சங்கர், ஜெமினி கணேசன் உள்ளிட்ட பெரிய நடிகர்களுடன் நடித்துள்ள இவர் தமிழ் சினிமாவில் கதாநாயகியாகவும், துணை கதாபாத்திரங்களிலும் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
நல்வரவு, ராமு, தாயே உனக்காக, நானும் ஒரு பெண், கற்பூரம், ஜீவனாம்சம், பணமா பாசமா, தீர்க்க சுமங்கலி, திருமலை தெய்வம், சிட்டுக்குருவி, பகலில் ஒரு இரவு, ரத்தபாசம் போன்ற படங்களிலும் புஷ்பலதா நடித்த கதாபாத்திரங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன.
தனது அசாத்திய நடிப்பின் மூலம் 1960, 70 மற்றும் 80-களில் தமிழ் சினிமாவில் படுபிஸியான நடிகைகளில் ஒருவராக வலம் வந்த நடிகை புஷ்பலதா ஏராளமான படங்களில் கதாநாயகியாகவும், துணை நடிகையாகவும் நடித்துள்ளார்.
தமிழ் தவிர்த்து தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட வேறு மொழிப்படங்களில் தனது நடிப்பு திறமையால் முத்திரை பதித்ததன் மூலம் முன்னணி நடிகைளில் ஒருவராக வலம் வந்தார். அதுமட்டுமின்றி ரஜினிகாந்தின் ஆயிரம் ஜென்மங்கள், தர்மயுத்தம், நான் அடிமையில்லை, கமல்ஹாசனுடன் கல்யாணராமன், சகலகலா வல்லவன், சட்டம் என் கையில் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
புஷ்பலதாவும், 1960-களில் முன்னணி நடிகராக இருந்த ஏ.வி.எம்.ராஜனும் ‘நானும் ஒரு பெண்' என்ற படத்தில் இணைந்து நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்து 1964-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இருவரும் சில படங்களையும் தயாரித்தனர். இவர்களுக்கு மகாலட்சுமி, அபிராமி ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். மகாலட்சுமி சில படங்களில் நாயகியாக நடித்து இருக்கிறார்.
1980களில் படங்களில் நடிப்பதைக் குறைத்து கொண்ட நடிகை புஷ்பலதா, கடைசியாக 1999ம் ஆண்டு இயக்குநர் ஸ்ரீபாரதி இயக்கிய பூ வாசம் என்ற படத்தில் நடித்த பிறகு சினிமாவில் இருந்து முழுவதுமாக விலகினார். புஷ்பலதாவின் மறைவுக்கு தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
புஷ்பலதா மறைவுக்கு நடிகர் சங்கம், நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.