
சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு விஞ்ஞானிகளை அனுப்புவதற்கு ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் ஆக்சியம் ஸ்பேஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ‘ஆக்சியம்-4’ என்ற திட்டத்தை உருவாக்கியது.
இந்த திட்டத்தின் கீழ், இந்த பயணத்துக்கு இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா, அமெரிக்காவை சேர்ந்த பெக்கி விட்சன், அங்கேரியை சேர்ந்த திபோர் கபு மற்றும் போலந்தை சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகிய 4 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்கள் பயணிக்கும் டிராகன் விண்கலத்தை சுமந்து கொண்டு, பால்கன்-9 என்ற ராக்கெட், அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் அமைந்துள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து, 25-ம்தேதி (இந்திய நேரப்படி) பகல் 12.01 மணிக்கு புறப்பட்ட 10 நிமிடத்துக்குள் அந்த ராக்கெட், அதன் இலக்கான பூமியின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது. அங்கு ராக்கெட்டில் இருந்து டிராகன் விண்கலம் வெற்றிகரமாக பிரிந்த பிறகு ராக்கெட் பூமிக்கு திரும்பியது.
டிராகன் விண்கலம் 28 மணிநேர பயணத்திற்கு பின்னர், சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது. அதன் பிறகு விண்வெளி நிலையத்துடன், விண்கலத்தை இணைக்கும் அனைத்து பணிகளும் வெற்றிகரமாக முடிந்த பின்னர், சர்வதேச விண்வெளி நிலையத்தின் வாசல் (ஹட்ச்) திறக்கப்பட்டு 4 பேரும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குள் பறந்தப்படி உள்ளே நுழைந்தனர்.
அவர்களை அங்கு ஏற்கனவே இருக்கும் வீரர்கள் வரவேற்று ஒருவருக்கு ஒருவர் ஆரத்தழுவி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். இதன் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் கால் பதித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் சுபான்ஷூ சுக்லா. மேலும் 41 ஆண்டுகளுக்கு பிறகு விண்வெளியில் கால் பதிக்கும் 2-வது இந்தியர் என்ற புகழும் அவருக்கு கிடைத்தது.
அமெரிக்காவின் நாசா, ரஷியாவின் ரோஸ்கோஸ்மோஸ் மற்றும் ஜப்பானின் ஜாக்சா உள்ளிட்ட பல்வேறு விண்வெளி நிறுவனங்களை சேர்ந்த 7 விஞ்ஞானிகள் சர்வதேச விண்வெளி நிலையில் தற்போது தங்கி ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது சுபான்ஷூ சுக்லா உள்ளிட்ட 4 வீரர்கள் அங்கு சென்றுள்ளனர்.
வீரர் சுபான்ஷூ சுக்லா தன்னுடன் கொண்டு சென்ற இந்திய உணவுகளான கேரட் அல்வா, மாம்பழ ஜூஸ் ஆகியவற்றை சக விஞ்ஞானிகளுக்கு அளித்து மகிழ்ந்தார்.
இதுகுறித்து நாசா மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறும்போது, ‘டிராகன் விண்கலம் மணிக்கு 28 ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் பயணித்து சர்வதேச விண்வெளி நிலையத்தை வெற்றிகரமாக சென்றடைந்தது. சுபான்ஷூ சுக்லா மற்றும் ஆக்சியம்-4 குழுவினர் 14 நாட்கள் அங்கு தங்கியிருந்து 60 ஆய்வுகளை செய்ய உள்ளனர். இதில், சுபான்ஷூ சுக்லா பயிர்களை விளைவிப்பது உள்ளிட்ட 7 ஆய்வுகளை செய்ய உள்ளார்’ என்றனர்.
சுபான்ஷூ சுக்லா வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு, தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அதில்:-
"ஆஹா, என்ன ஒரு பயணம். புவி ஈர்ப்பு குறைந்த விண்வெளியில் எப்படி நடப்பது, எப்படி சாப்பிடுவது என்பது குறித்து ஒரு குழந்தையைபோல் கற்று வருகிறேன். இது ஒரு புதிய சூழல், ஒரு புதிய சவால், இங்கே என் சக விண்வெளி வீரர்களுடன் இந்த அனுபவத்தை நான் மிகவும் ரசிக்கிறேன்," என்று கூறினார்.