
அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து, பால்கன்-9 ராக்கெட் மூலம் ஆக்சியம் ஸ்பேஸ் என்னும் தனியார் நிறுவனத்தின் ‘ஆக்சியம் -4' என்ற மனித விண்வெளி பயணத்திற்கான ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டது. டிராகன் விண்கலம் நாசாவின் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சரக்கு மற்றும் மனிதர்களை கொண்டு செல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ், ஆக்சியம் நிறுவனங்களின் ஆக்சியம்-4 திட்டம் மூலம் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உடன் அமெரிக்காவை சேர்ந்த திட்டத்தின் கமாண்டர் பெக்கி விட்சன், ஹங்கேரியை சேர்ந்த விண்வெளி நிபுணர் திபோர் கபு மற்றும் போலந்தை சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகிய 4 பேர் கடந்த மாதம் 25-ந்தேதி விண்வெளி சென்றனர்.
அவர்கள் பயணித்த டிராகன் விண்கலம் 26-ந்தேதி மாலையில் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது.
இதன் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் கால் பதித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை சுபான்ஷு சுக்லா பெற்றதுடன் 41 ஆண்டுகளுக்கு பிறகு விண்வெளியில் கால் பதிக்கும் 2-வது இந்தியர் என்ற புகழும் அவருக்கு கிடைத்தது.
அமெரிக்காவின் நாசா, ரஷியாவின் ரோஸ்கோஸ்மோஸ் மற்றும் ஜப்பானின் ஜாக்சா உள்ளிட்ட பல்வேறு விண்வெளி நிறுவனங்களை சேர்ந்த 7 விஞ்ஞானிகள் சர்வதேச விண்வெளி நிலையில் தற்போது தங்கி ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது சுபான்ஷூ சுக்லா உள்ளிட்ட 4 வீரர்கள் அங்கு சென்றுள்ளனர்.
14 நாட்கள் பயணமாக சென்றுள்ள சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 விண்வெளி வீரர்களும் விண்வெளி நிலையத்தில் இருந்தவாறு பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வரும் நிலையில் சுபான்ஷு சுக்லா மட்டும் தனியாக சில ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் புவியீர்ப்பு விசை இல்லாத இடத்தில் பயிர்களின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதை ஆய்வு செய்வதற்காக அவர் பூமியில் இருந்து எடுத்து சென்ற பாசிப்பயறு மற்றும் வெந்தயத்தை விண்வெளி நிலையத்தில் முளைக்க வைத்து தினமும் அந்த செடிகளில் வளர்ச்சியை ஆய்வு செய்து வருகிறார்.
இதற்கிடையே சுபான்ஷு சுக்லா, கடந்த மாதம் இறுதியில் ‘வெப்கேஸ்ட்’ நேரலை மூலம் பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு பேசியிருந்தார்.
சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேரின் விண்வெளி ஆராய்ச்சிப்பணி நேற்றுடன்(வியாழக்கிழமை) நிறைவடைந்தது. தற்போது பூமிக்கு திரும்புவது குறித்த நாசாவின் அறிவிப்புக்காக காத்திருப்பதாக ஆக்சியம் நிறுவனம் செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியுள்ளது.
மேலும் அதில், ‘இந்த பயணத்தில் விண்வெளி வீரர்கள் 60-க்கு மேற்பட்ட ஆய்வுகளை மேற்கொண்டனர். ஏராளமான புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்து, தங்கள் அன்பார்ந்தவர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார்கள்’ என கூறப்பட்டு இருந்தது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் இந்த நாட்களில் 230-க்கு மேற்பட்ட சூரிய உதயத்தை பார்த்துள்ள சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட விண்வெளி வீரர்கள், சுமார் 1 கோடி அதாவது 96.5 லட்சம் கி.மீ. தொலைவுக்கு பயணம் செய்திருப்பதாகவும் ஆக்சியம் கூறியுள்ளது.
சுபான்ஷு சுக்லா வருகிற 14-ந்தேதி பூமி திரும்புவார் என்று நாசா அறிவித்து உள்ளது.