
1948 இல் நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போருக்கு பின்னர் காஷ்மீரின் இறையாண்மையில் பெரிய சிக்கல் ஏற்பட்டது. பாகிஸ்தான் காஷ்மீரின் பெரும் பகுதியை ஆசாத் காஷ்மீர் என்ற பெயரில் ஆக்கிரமித்து இருந்தது. 1949 ஆம் ஆண்டு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும், கராச்சியில் காஷ்மீர் தொடர்பாக ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் படி இந்திய ராணுவமும் பாகிஸ்தான் ராணுவமும், அப்போது எந்த இடத்தில் இருக்கின்றதோ அந்த இடமே கட்டுப்பாட்டில் உள்ள எல்லை கோடுகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஆனால், அந்த ஒப்பந்தத்தில் இருநாட்டு காஷ்மீருக்கு நடுவில் இருக்கும் சியாச்சின் பகுதியைப் பற்றி எந்த ஒரு குறிப்பும் இல்லை. சியாச்சின் பனிமலைப் பிரதேசம் உலகின் அதிக குளிர் நிறைந்த எல்லை பகுதியாக உள்ளது. நீண்ட காலமாக இரு நாடுகளும் சியாச்சின் பற்றி சிந்திக்காமல் இருந்தனர்.
1970-80 களில் பாகிஸ்தான் ராணுவம் சியாச்சின் பகுதியில் தங்கள் நாட்டு மக்கள் மலையேற அனுமதி கொடுத்தது, பாகிஸ்தான் ராணுவத்தினரும் அவ்வப்போது வந்து சென்றனர். 1983 ஆம் ஆண்டு சியாச்சின் பகுதியை ஆக்கிரமிக்க பாகிஸ்தான், ஆபரேஷன் அபாபில் என்ற பெயரில் திட்டமிட்டு செயல்படுத்த தொடங்கியது. ஆனால், அங்கு இந்தியா 1978 களில் விமானப்படை தளங்களை உருவாக்கி இருந்தது.
1984 ஆம் ஆண்டு மே மாதத்த்தில் சியாச்சினை ஆக்கிரமிக்க பாகிஸ்தான் திட்டமிட்டிருந்தது. பாகிஸ்தானின் இராணுவ நடவடிக்கையை முன் கூட்டியே உளவுத்துறை மூலம் அறிந்த இந்திய ராணுவம், ஆபரேஷன் மேக்தூத்தை தொடங்கியது. ஆபரேஷன் மேகதூத் நடவடிக்கைக்கு லெப்டினன்ட் ஜெனரல் பிரேம்நாத் ஹூன் தலைமை தாங்கினார். சியாச்சின் பகுதியின் சால்டோரோ ரிட்ஜை ஆக்கிரமிக்கும் வேலையை 26 பிரிவு தளபதி பிரிகேடியர் விஜய் சன்னா ஏப்ரல் 13 ஆம் தேதி நிறைவேற்றினார். பிலாஃபோண்ட் லா, சியா லா மற்றும் கியோங் லா போன்ற முக்கிய கணவாய்களும் கைப்பற்றப்பட்டன.
இந்த முயற்சியில் இந்திய விமானப் படையும் முக்கிய பங்கு வகித்தது . AN-12, AN-32 மற்றும் IL-76 விமானங்கள் மூலம் ராணுவத்தினரை விரைவாக சியாச்சினுக்கு அனுப்பியது. கிட்டத்தட்ட 3000 ராணுவத்தினர் சியாச்சின் பகுதிகளை சுற்றி பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த நடவடிக்கையில் பாகிஸ்தான் ராணுவம் நேரடியாக எந்த தாக்குதலும் நடத்தவில்லை. ஏப் 13, 1984 அன்று தொடங்கிய ஆபரேஷன் மேகதூத் இன்று வரையிலும் தொடர்கிறது. உலகின் மிக நீண்ட கால இராணுவ நடவடிக்கையாக இது உள்ளது.
பின்னர் 1986 இல் பாகிஸ்தான் ராணுவம் சியாச்சினில் தாக்குதலில் நடத்தி பனா போஸ்டை கைப்பற்றியது. இந்திய ராணுவம் பல முயற்சிகளுக்கு பின் 1987 ஏப்ரலில் மீண்டும் பனா போஸ்டை கைப்பற்றியது. 1999 இல் சியாச்சினில் சில பகுதிகளில் நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்திற்கு மிகப்பெரிய அடியை கொடுத்து இந்திய ராணுவம் விரட்டியது. இந்தப் போரில் பாகிஸ்தான் எல்லையில் சில பகுதிகளை இழந்தது.
பாகிஸ்தானின் சதி திட்டங்களை முறியடிக்க செங்குத்தான மற்றும் பனி நிறைந்த சியாச்சின் மலைகளில் இந்திய இராணுவம் நிலை நிறுத்தப்பட்டது. 14,000 அடி முதல் 22,000 அடி உயரம் கொண்ட இந்த மலைகளில் கடும் குளிர் 40 டிகிரி வரை எட்டியுள்ளது. உலகில் ராணுவத்தினர் கட்டுப்பாட்டில் இருக்கும் அதிக குளிர் நிறைந்த பிரதேசத்தில் இது முதலிடத்தில் உள்ளது.
இந்த பகுதிகளில் கடும் குளிர், பனிச்சரிவு காரணமாக அடிக்கடி இராணுவ வீரர்கள் உயிரிழக்கின்றனர். இங்கு இருக்கும் ஒவ்வொரு வீரரும் மூன்று மாதங்கள் வரை பணி செய்கிறார்கள். சியாச்சின் படையினரின் தியாகத்தை போற்றும் வகையில் ஏப்ரல் 13 ஆம் தேதி சியாச்சின் தினம் கொண்டாடப்படுகிறது.