

இந்தியாவில் பட்டுப் புடவைகளுக்கு பெண்கள் மத்தியில் எப்போதும் சிறப்பான வரவேற்பு இருக்கும். பட்டுப் புடவைகள் உற்பத்திக்கு பட்டுப்புழு வளர்ப்பு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
பட்டுப்புழு வளர்ப்பில் பொதுவாக புழுக்களை கொன்றே பட்டுக்களை பிரித்து எடுப்பார்கள். ஆனால் தற்போது புழுக்களை கொல்லாமலேயே பட்டுக்களை பிரித்தெடுக்கும் புதிய நடைமுறையை கண்டுபிடித்துள்ளது மும்பை ஐஐடி.
இதற்காக கடந்த மூன்று ஆண்டுகளாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த மும்பை ஐஐடி விஞ்ஞானிகளுக்கு தற்போது பலன் கிடைத்துள்ளது. பாரம்பரிய முறையில் பட்டுப் புழுக்கள் கூட்டை உருவாக்கிய பிறகு, அவற்றை கொதிக்கும் நீரில் மூழ்கடிப்பர். புழுக்கள் இறந்ததும் பட்டை பிரித்து எடுத்து, புடவைகள் நெய்யப்படும்.
ஆனால் இனி புழுக்களை கொல்ல வேண்டிய அவசியமே இருக்காது என மும்பை ஐஐடி விஞ்ஞானிகள் உறுதிபட தெரிவித்துள்ளனர்.
பொது மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டு வருகின்றன இந்தியாவில் உள்ள ஐஐடி நிறுவனங்கள். ஏற்கனவே பல புதிய கண்டுபிடிப்புகளில் சாதனை படைத்துள்ள மும்பை ஐஐடி, தற்போது பட்டு உற்பத்தியிலும் ஒரு புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தி சாதனை படைத்துள்ளது. இது நாள் வரை ஒவ்வொரு பட்டு புடவையைத் தயாரிப்பதற்கும் எண்ணற்ற புழுக்கள் கொல்லப்பட்டன. ஆனால் இனி அப்படியொரு நிலை ஏறாபடாது.
மும்பை ஐஐடி-யின் கிராமப்புற பகுதிகளுக்கான தொழில்நுட்ப மாற்று மையம், பட்டுப்புழுக்களை கொல்லாமல் பட்டு பிரித்தெடுக்கும் வழிமுறையை கண்டறிய கடந்த மூன்று ஆண்டுகளாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தது. இந்த ஆராய்ச்சிக்கு கோல் இந்தியா நிறுவனம் நிதி உதவி அளித்தது குறிப்பிடத்தக்கது.
மூன்று ஆண்டு காலமாக நடைபெற்று வந்த இந்த முன்னோட்ட திட்டத்திற்கு ‘ஜீவோதயா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஜீவோதயா முறையில் பட்டுப்புழுக்கள் தங்களைச் சுற்றி கூட்டை உருவாக்குவதற்கு பதிலாக, சமதளத்தில் கூட்டை உருவாக்க பயிற்சி வழங்கப்படும்.
சமதளத்தில் கூடு உருவாக்கப்படுவதால், பட்டை எளிதாக பிரித்தெடுக்க முடியும். அதோடு புழுக்களை கொல்ல வேண்டிய அவசியமும் இனி இருக்காது. இதன்மூலம் புழுக்கள் பட்டுப் பூச்சிகளாக அடுத்த நிலைக்கு பரிணாம வளர்ச்சியை அடையும்.
ஜீவோதயா திட்டத்தின் தொடக்க நிலை முதல் செயல்பாட்டு நிலை வரை, தொடர்ந்து நிதியுதவி அளித்து கோல் இந்தியா நிறுவனம் முக்கியப் பங்காற்றியுள்ளது.
மும்பை ஐஐடியின் தனித்துவம் வாய்ந்த ஜீவோதயா திட்டம், தற்போது குறிப்பிடத் தகுந்த அளவிலான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. பட்டு உற்பத்தி முறையை எளிதாக்கவும், அதனை விரிவாக்கம் செய்யவும் ஜீவோதயா திட்டம் உதவிகரமாக இருக்கும்.
இதன் மூலம் பட்டு விவசாயிகளுக்கு வாழ்வாதாரம் மேம்படுவதோடு, நிலையான வருமானமும் கிடைக்கும். இந்தியாவில் பட்டுப் புடவைகளுக்கு அதிக டிமாண்ட் இருப்பதால், பட்டுப்புழு உற்பத்தியில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த புதிய நடைமுறை வெகுவிரைவில் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.