

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. குறிப்பாக 2025 ஆம் ஆண்டில் மட்டும் இந்த விலை உயர்வு பல மடங்கு என்பது குறிப்படத்தக்கது. அதிலும் குறிப்பாக தங்கத்தை காட்டிலும் வெள்ளியின் விலை உயர்வு, நம்ப முடியாததாகவும் அசாத்தியமானதாகவும் இருக்கிறது.
அவ்வகையில் அடுத்து வருகின்ற 2026 ஆம் ஆண்டில் எதில் முதலீடு செய்வது அதிக லாபத்தைக் கொடுக்கும் என பிரபல முதலீட்டாளர் ராபர்ட் கியோசாகி தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி 1 2025 அன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.98-க்கு விற்பனையானது. ஆனால் இன்றைய வெள்ளியின் விலையைப் பார்த்தால், யாராக இருந்தாலும் நிச்சயமாக ஆச்சரியப்படுவார்கள்.
இந்தியா மட்டுமின்றி சர்வதேச சந்தையிலும் வெள்ளியின் விலை நடப்பாண்டில் மட்டும் 140% அதிகரித்துள்ளது. இது தங்கத்தின் விலையேற்றத்தை காட்டிலும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடப்பாண்டை காட்டிலும் 2026 இல் வெள்ளியின் விலை இன்னும் பல மடங்கு உயரும் என பிரபல முதலீட்டாளர் ராபர்ட் கியோசாகி தெரிவித்துள்ளார்.
இன்று டிசம்பர் 25 நிவவரப்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கு விற்பனையாகிறது. வெள்ளி முதலீட்டின் லாபத்தை சுருக்கமாக எடுத்துச் சொல்வதென்றால், நீங்கள் 2025 ஜனவரி 1-ம் தேதி ஒரு கிலோ வெள்ளியில் ரூ.98,000-ஐ முதலீடு செய்திருந்தால், அதன் இன்றைய மதிப்பு ரூபாய் 2 லட்சத்து 45 ஆயிரமாக உயர்ந்திருக்கும்.
உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 72 டாலரை தாண்டியுள்ள நிலையில், 2025 இல் ஏற்பட்ட வெள்ளியின் விலையேற்றம் சுமாரானது தான். ஆனால் 2026 இல் வெள்ளியின் விலையேற்றம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு மேலும் அதிகரிக்கும் என்று ராபர்ட் கியோசாகி தெரிவித்துள்ளார்.
வெள்ளியின் விலை ஏற்றம் குறித்து ராபர்ட் கியோசாகி மேலும் கூறுகையில், “2025 ஆம் ஆண்டில் தங்கம், மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் பங்குச் சந்தை உள்ளிட்ட முதலீடுகளை காட்டிலும் வெள்ளியில் அதிக இலாபம் கிடைத்துள்ளது. வெள்ளியின் விலை உயரும் என்று முன்பே கணித்திருந்த முதலீட்டாளர்கள் அதில் முதலீடு செய்து அதிக லாபத்தை ஈட்டியுள்ளனர்.
இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே வெள்ளியில் மிகப்பெரிய அளவில் விலையேற்றம் இருக்கப் போகிறது என்று நான் தொடர்ந்து தெரிவித்துக் கொண்டே இருந்தேன். அதற்கேற்ப நடப்பாண்டில் மட்டும் 140% அளவிற்கு வெள்ளியின் விலை உயர்ந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் இது வெறும் சாதாரண வளர்ச்சி மட்டுமே. 2026 ஆம் ஆண்டில் வெள்ளியின் விலை, இதை விட பலமடங்கு உயர அதிக வாய்ப்புள்ளது.
தற்போது ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 72 டாலரை கடந்துள்ள நிலையில், 2026-ல் 200 டாலர்களை கடக்க அதிக வாய்ப்புள்ளது. அதாவது வெள்ளியின் விலை அடுத்த ஆண்டில் 150 சதவீதத்திற்கும் மேல் உயரும். உங்கள் பணத்தை வங்கி சேமிப்புக் கணக்கில் வைத்திருப்பதைக் காட்டிலும், வெள்ளியில் முதலீடு செய்வதே தற்போதைக்கு சிறந்தது” என அவர் தெரிவித்துள்ளார்
2026 இல் ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 200 டாலரை எட்டினால், இந்தியாவில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூபாய் 600 கடக்கும் என்பது உறுதி. வெள்ளியில் முதலீடு செய்தவர்களுக்கு இது நற்செய்தியாக அமையும் நிலையில் மற்ற முதலீடுகளில் மேற்கொண்டவர்களுக்கு இது சற்று வருத்தமான செய்தியாகவே இருக்கும்.
இருப்பினும் ஏழை, எளிய மக்கள் முதலீடு செய்ய வெள்ளி தான் சிறந்தது. சிறிய அளவில் வெள்ளியில் முதலீடு செய்தாலும் அடுத்த வருடம் முடிவில், நிச்சியமாக இரட்டிப்பு பலனைக் கொடுக்கும். தங்க முதலீடும் லாபத்தைக் கொடுக்கும் என்றாலும், வெள்ளி முதலீடு தான் ஏழைகளுக்கு ஏற்றதாக உள்ளது.