

சமீபத்தில் லோக்சபாவில் அளிக்கப்பட்ட தரவுகளின் படி , தங்கம் மற்றும் வெள்ளி போன்ற விலை மதிப்புள்ள உலோகங்களை கடத்தும் போக்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கம் தங்கம் மற்றும் வெள்ளி மீது இறக்குமதி வரியை உயர்த்தியது,இந்த கடத்தல் சம்பவங்கள் அதிகரிக்க காரணமாக உள்ளன. தற்போது கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்யும் அளவு தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.
இந்த ஆண்டு மே மாதம் 13ம் தேதி மத்திய அரசு, தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரியை 6% என்ற அளவிலிருந்து 15% ஆக, இரு மடங்கிற்கும் மேலாக உயர்த்தி உள்ளது. அதற்கு முந்தைய காலகட்டமான ஏப்ரல் 1 முதல் மே 12 வரை ஒப்பிடும்போது, தற்போது வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ள அளவு 10 மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் தங்க கடத்தல் 186% உயர்ந்துள்ளது என்று அரசு தகவல் தெரிவிக்கின்றன.
பாராளுமன்றத்தில் இது குறித்து பேசிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா , "2026 மே 13 முதல் ஜூன் 30 வரை பதிவு செய்யப்பட்ட கடத்தல் வழக்குகளின் எண்ணிக்கை 267 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவங்களில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள தங்கத்தின் அளவு சுமார் 160.91டன் ஆகும், என்பது மலைக்க வைக்கிறது. மேலும் தங்க கடத்தல் தொடர்பாக 116 பேர் கைது செய்யப்பட்டு விசாரணையில் இருக்கின்றனர். இதற்கு முந்தைய காலகட்டத்தில், அதாவது இந்த ஏப்ரல் 1 முதல் மே 12 வரை 86.16 டன் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு 165 வழக்குகள் பதிவாகி 67 பேர் சிறையில் உள்ளனர் " என்று கூறியுள்ளார்.
மேலும் 2023-24 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் தங்கக் கடத்தல் தொடர்பாக 6599 வழக்குகள் பதிவாகி இருந்தது. அதற்கு அடுத்த வருடமான 2024 – 2025 காலகட்டத்தில் தங்க கடத்தல் தொடர்பான வழக்குகள் பாதியாக சரிந்து, 3055 வழக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தன. இந்த வழக்குகளின் சராசரி 2025-26 ஆம் ஆண்டில் 75% குறைந்தது. இந்த வருடத்தில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் அளவு மற்றும் குற்றவாளிகளின் எண்ணிக்கையும் பெருமளவில் குறைந்து இருந்தது.
வெள்ளி கடத்தல் பொருத்தவரையில் ஏப்ரல் 1 - மே 12 காலகட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 பேர் மட்டுமே. அதன் பின்னர் 2 பேர் மட்டுமே வெள்ளி கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டனர். தங்கம் மற்றும் வெள்ளி கடத்தலை தடுக்கவும் கண்டறியவும், சுங்கத்துறையும், வருவாய் புலனாய்வு இயக்குநரகமும் (DRI) தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. தற்போது அமலாக்க துறையின் மூலமாக இந்த நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு தீர்க்கப்படுவதாகவும் அமைச்சர் பிரசாதா தெரிவித்தார்.
தங்கம் வெள்ளி கடத்தல் தொடர்பாக இந்திய ஜுவல்லர்ஸ் அசோசியேசன் தலைவர் பிரித்திவிராஜ் கோத்தாரி " தங்கம் வெள்ளி உள்ளிட்ட ஆபரண பொருட்களின் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்பட்ட ஏழு வாரங்களுக்கு, பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் அளவு 60% ஆக அதிகரித்துள்ளது.. வெள்ளியின் பறிமுதல் தினசரி ஒன்பது மடங்கு அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு அந்நிய செலாவணி இருப்பைப் தக்க வைக்கவும் , அதிகளவு இறக்குமதியை கட்டுப்படுத்தவும் சர்வதேச அளவில் நிகழும் பொருளாதார சூழ்நிலைகளில் இருந்து இந்தியாவை பாதுகாக்கவும் தங்கம் மற்றும் வெள்ளியின் மீதான வரியை உயர்த்தியது. ஆனால், அதிகப்படியான வரி கடத்தல் சம்பவங்களுக்கு வழி வகுத்ததையும் மறுக்க முடியாது.