ராணுவ கனவு நனவாகப்போகுது! புதுச்சேரியில் ஆகஸ்ட் 1 முதல் அக்னிவீர் மெகா ஆள்சேர்ப்பு முகாம்!

சென்னை ஆள்சேர்ப்பு மண்டலம் ஏற்பாடு; தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 11 மாவட்ட விண்ணப்பதாரர்கள் பங்கேற்க அழைப்பு!
அக்னிவீர் ஆள்சேர்ப்பு முகாம்
அக்னிவீர் ஆள்சேர்ப்பு முகாம்source:nationalherald
Updated on

மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி கூறிப்பில் தெரிவித்ததாவது:-.

இந்திய ராணுவத்தில் அக்னிவீர் பணியில் இணைய கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ஆன்லைன் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கான ஆள்சேர்ப்பு முகாம் புதுச்சேரியில் வரும் ஆகஸ்ட் 1 முதல் 10-ம் தேதிவரை நடைபெறவுள்ளது. ராணுவத்தின் சென்னை ஆள்சேர்ப்பு மண்டலத் தலைமையகம், சம்பந்தப்பட்ட மாநில நிர்வாகங்களின் உதவியுடன் இம்முகாமை நடத்துகிறது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய தமிழ்நாட்டைச்சேர்ந்த 11 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் புதுச்சேரி மாவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்காக இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், சிப்பாய்-மருந்தாளுநர், சோல்ஜர் என்.ஏ/என்.ஏ (கால்நடை மருத்துவம்), ஹவில்தார் (கல்வி) மற்றும் சமய ஆசிரியர் - ஜூனியர் கமிஷன்டு அதிகாரி ஆகிய பிரிவுகளுக்கு தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த, ஆன்லைன் தேர்வில் தகுதிபெற்ற அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

அக்னிவீர் ஆள்சேர்ப்பு முகாம்
அக்னிவீர் ஆள்சேர்ப்பு முகாம்source:punekar news

கடந்த ஜூன் 1 முதல் 12 வரை நடத்தப்பட்ட இணையவழி பொது நுழைவுத் தேர்வின் (CEE) முடிவுகள் ஜூலை 13 அன்று "Join Indian Army" இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இதில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் புதுச்சேரி இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்கத் தகுதியுடையவர்கள்; இதற்கான அனுமதி அட்டை அவர்களுக்கு விரைவில் வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் ஆள்சேர்ப்பு செயல்முறையின் இரண்டாம் கட்டத்திற்குத் தாமதமின்றித் தயாராகுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இரண்டாம் கட்டத்தில் உடல் தகுதித் தேர்வு (PFT), உடல் அளவீட்டுத் தேர்வு (PMT), மருத்துவப் பரிசோதனை ஆகியவை அடங்கும். ஆள்சேர்ப்பு முகாமின் போது ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்க, அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்கள், இருப்பிடச் சான்றிதழ், ஆதார் அட்டை, புகைப்படங்கள், என்.சி.சி அல்லது விளையாட்டுச் சான்றிதழ்கள் இருப்பின் அவை மற்றும் பிற அடிப்படை ஆவணங்கள் அனைத்தையும் தயாராக வைத்திருக்க வேண்டும்.

ஆட்சேர்ப்பு செயல்முறை நியாயமானது, வெளிப்படையானது மற்றும் முற்றிலும் தகுதி அடிப்படையிலானது என்று இந்திய ராணுவம் மீண்டும் வலியுறுத்துகிறது. ஆட்சேர்ப்பு செய்வதாக உறுதியளிக்கும் தரகர்கள் அல்லது நேர்மையற்ற நபர்களிடம் விண்ணப்பதாரர்கள் ஏமாற வேண்டாம் என்று கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்திய ராணுவத்தில் தேர்வு என்பது, தகுதி மற்றும் செயல்திறனை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது.

இந்திய நாட்டின் முப்படைகளான தரைப்படை, கடற்படை மற்றும் விமானப்படைகளில் அதிக அளவிலான இளைஞர்களை சேர்த்து, ராணுவக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்திய அரசால் தொடங்கப்பட்ட சிறப்பு ஆட்சேர்ப்பு திட்டமே 'அக்னிபாத்' (Agneepath Scheme) ஆகும். கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூன் 14 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டம், நாட்டின் பாதுகாப்பு துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ், தகுதியுள்ள இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் 4 ஆண்டு காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் நாட்டின் ஆயுத படைகளில் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படுகிறது. பணியில் சேரும் அக்னிவீரர்களுக்கு நவீன கால ராணுவப் பயிற்சிகள், மாதாந்திர ஊதியம், பணிக்காலம் முடிவடைந்த பிறகு வழங்கப்படும் அனுபவச் சான்றிதழ் மற்றும் பங்களிப்பு அல்லாத ஆயுள் காப்பீடு (Non-contributory Life Insurance) உள்ளிட்ட பல்வேறு நிதி மற்றும் சமூகப் பாதுகாப்புகளும் உறுதி செய்யப்படுகின்றன.

மேலும், இத்திட்டத்தின் மூலம் இந்திய ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் நேரடியாகப் பணியமர்த்தப்படும் ஆண் மற்றும் பெண் வீரர்கள் 'அக்னிவீரர்கள்' (Agniveers) என்று அழைக்கப்படுகிறார்கள். தாய்நாட்டிற்கு சேவையாற்ற விரும்பும் லட்சக்கணக்கான இந்திய இளைஞர்களின் ராணுவக் கனவை நனவாக்கும் வகையிலும், அதே வேளையில் இளமையான மற்றும் ஆற்றல்மிக்க பட்டாளத்தை உருவாக்கும் நோக்கிலும் இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நிதி மற்றும் ஊதிய பயன்கள் :

மாத சம்பளம்: முதல் ஆண்டு ₹30,000 முதல் நான்காம் ஆண்டு ₹40,000 வரை வழங்கப்படுகிறது.

சேவை நிதி தொகை (Seva Nidhi): 4 ஆண்டுப் பணி முடிந்த பிறகு வட்டியுடன் சேர்த்து சுமார் ₹11.71 லட்சம் முழுத் தொகையாக வழங்கப்படும். இது முற்றிலும் வரிவிலக்கு பெற்றது.

ஆபத்துக் காப்பீடு: சேவை காலத்தில் ₹48 லட்சம் மதிப்பிலான இலவச ஆயுள் காப்பீடு வழங்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
நீட் போராட்டம்: மாணவர்களுக்கு ஆதரவாக கொதித்தெழுந்த நடிகர்கள் மற்றும் பிரபலங்கள்!
அக்னிவீர் ஆள்சேர்ப்பு முகாம்
இதையும் படியுங்கள்:
நீங்க வேலையில்லா பட்டதாரியா?...தமிழக அரசின் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்..!
அக்னிவீர் ஆள்சேர்ப்பு முகாம்
இதையும் படியுங்கள்:
குட் நியூஸ்.!! குறையப்போகுது வீட்டுமனை விலை! தமிழக அரசின் மெகா அறிவிப்பு.!
அக்னிவீர் ஆள்சேர்ப்பு முகாம்
logo
Kalki Online
kalkionline.com