நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக சைபர் குற்ற மோசடிகள் அதிக அளவில் நடந்து வருகின்றன. பொதுமக்கள் தங்களின் கவனக் குறைவால் சில நிமிடங்களிலேயே தங்களது மொத்த சேமிப்பையும் இழந்து விடுகின்றனர்.
டிஜிட்டல் அரெஸ்ட் மற்றும் சைபர் குற்ற மோசடிகளில் ஈடுபட்டு வரும் நபர்களை பிடிக்க சைபர் துறை அதிகாரிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஆந்திராவில் சைபர் குற்ற மோசடியில் ஈடுபட்டு வந்த 5 பேர் தமிழகத்திற்கு வந்து சிம் கார்டு வாங்கிய போது போலீசாரிடம் சிக்கியுள்ளனர்.
டிஜிட்டல் தொழில்நுட்பம் அதிகரித்து வரும் இன்றைய காலகட்டத்தில், பெரும்பாலான பணப் பரிமாற்றங்கள் ஆன்லைனிலேயே நடந்து வருகின்றன. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு மோசடி கும்பலும் பொதுமக்களின் பணத்தை சூறையாடி வருகின்றனர்.
இது குறித்து சைபர் கிரைம் அதிகாரிகள் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வரும் நிலையில், பொதுமக்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்
சைபர் கிரைம் மோசடியில் ஈடுபடுபவர்கள் அதிக அளவிலான சிம்கார்டுகளையும், வங்கி கணக்குகளையும் பயன்படுத்தி வருவது ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டது. அதோடு குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் வங்கி கணக்குகள் மற்றும் சிம் கார்டுகளை வாடகைக்கு வாங்குவதாகவும் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் சைபர் குற்றங்களில் ஈடுபடும் கும்பல், அவ்வப்போது சிம் கார்டுகளை மாற்றிக் கொண்டே இருப்பதால் அவர்களை கண்டறிவதும் சைபர் துறை அதிகாரிகளுக்கு சவாலானதாக இருக்கிறது.
இந்நிலையில் ஆந்திராவில் வாட்ஸ்அப் கால் மூலமாக மோசடியில் ஈடுபட்டு வந்த 5 பேர் தமிழகத்தில் உள்ள இராணிப்பேட்டை மாவட்டத்திற்கு சிம் கார்டு வாங்க வந்துள்ளனர். இவர்கள் மீது சந்தேகம் கொண்டு விசாரித்த போது, உடனே அவர்கள் பதற்றம் அடைந்ததைக் கண்டு போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த போலீசார் இவர்கள் 5 பேரையும் கைது செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் இவர்கள் சிபிஐ மற்றும் மத்திய அரசு அதிகாரிகள் போல நடித்து வாட்ஸ்அப் காலில், பொதுமக்கள் பல பேரிடமிருந்து பணத்தை சுருட்டி இருப்பது தெரிய வந்துள்ளது.
மேலும் இவர்களிடம் இருந்து சுமார் 542 சிம் கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த மோசடி கும்பலை சைபர் கிரைம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
தற்போது ராணிப்பேட்டையில் கைது செய்யப்பட்டிருக்கும் மோசடி கும்பலை தொடர்ந்து விசாரிப்பதன் மூலம், இவர்களால் பாதிக்கப்பட்ட நபர்களின் விவரங்களும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மோசடி கும்பல் பதுக்கி வைத்திருக்கும் பணத்தை சைபர் கிரைம் அதிகாரிகள் கைப்பற்றினால், பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சைபர் கிரைம் மோசடிகளில் ஈடுபடும் கும்பலை காவல்துறை மற்றும் சைபர் துறை அதிகாரிகள் அவ்வப்போது கைது செய்து வரும் நிலையில், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம் என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் சைபர் மோசடிகள் தொடர்பான விளம்பரங்களும் அவ்வப்போது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.
ரிசர்வ் வங்கியும் இது தொடர்பான அறிவுறுத்தல்களை பொதுமக்களுக்கு வழங்கியுள்ளது. உங்கள் மொபைல் போனுக்கு தெரியாத நபர்களிடம் இருந்து வரும் லிங்கை தொடக் கூடாது; மேலும் வங்கி கணக்கு விவரங்கள், ஆதார் கார்டு மற்றும் ஓடிபி உள்ளிட்டவற்றை யாருடனும் பகிர்ந்து கொள்ளக் கூடாது எனவும் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது