

உலக அளவில் வாட்ஸ்அப் (WhatsApp)செயலியை கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பயனர்களின் வசதிக்கு ஏற்ப அவ்வப்போது பல்வேறு புதிய அம்சங்களை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது. இதன்படி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வாட்ஸ்அப் செயலியை மொபைல்போனில் மட்டுமல்லாது கணினியிலும் பயன்படுத்தும் படியான ‘வாடஸ்அப் வெப் (WhatsApp Web)’ என்ற புதிய அம்சத்தை இந்நிறுவனம் கொண்டு வந்தது. இதன் மூலம் பெரும்பாலான மக்கள் இந்த அம்சத்தை பயன்படுத்தத் தொடங்கினர்.
ஆனால் வாட்ஸ்அப்பை கணினி வழியாக பயன்படுத்தும் போது, அதில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக சைபர் கிரைம் எச்சரித்துள்ளது. வாட்ஸ்அப்பில் உள்ள ‘டிவைஸ் லிங்கிங்’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, கணினி திரையில் தெரியும் QR கோடை ஸ்கேன் செய்வதன் மூலம் ‘வாட்ஸ்அப் வெப்’ எனபதை பயன்படுத்த முடியும்.
மொபைல் போனில் நிறுவப்படும் வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. ஆனால் கணினியில் பயன்படுத்தப்படும் வாடஸ்அப் வெப்பில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக பொதுமக்களுக்கு சைபர் கிரைம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் சமூக வலைதளங்களை எண்ணற்ற பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக சைபர் கிரைம் குற்றங்கள் அதிகளவில் நடந்து வரும் நிலையில், இதற்கு மிக முக்கிய ஆயுதமாக சமூக வலைதளங்களை மோசடிக்காரர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர். இதன் வாயிலாக போலியான குறுந்தகவல்கள் மற்றும் இணைய லிங்க் ஆகியவற்றை அனுப்புவதன் மூலம் சைபர் கிரைம் குற்றங்கள் பெருமளவு நடக்கின்றன.
தெரியாத நபர்களிடமிருந்து வரும் குறுந்தகவல்கள் மற்றும் இணைய லிங்கை திறக்க வேண்டாம் என சைபர் கிரைம் துறை ஏற்கனவே எச்சரித்துள்ளது. இந்நிலையில் வாட்ஸ்அப் வெப் மூலம், தங்களுக்குத் தெரிந்த நபர்களின் எண்ணில் இருந்தும் போலியான புகைப்பட இணைப்பு அனுப்பப்படுகிறது. அதில் புகைப்படத்தை பார்க்கவும் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். மேலும் இந்த லிங்க் பார்ப்பதற்கு பேஸ்புக் லிங்க் போன்றே இருக்கும்.
இந்த லிங்கை கிளிக் செய்தவுடன் புகைப்படத்தை பார்க்க மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும் என்று கேட்கும். நீங்கள் மொபைல் எண்ணை உள்ளிட்டால், அடுத்த நிமிடமே உங்களது வாட்ஸ்அப் கணக்கை மோசடிக்காரர்கள் எளிதாக தங்கள் கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக் கொள்வார்கள்.
இதன் மூலம் உங்கள் வாட்ஸ்அப் கணக்கிற்கு வரும் புகைப்படங்கள், குறுந்தகவல்கள், தனிநபர் தகவலகள் மற்றும் மற்ற செய்திகள் அனைத்தையும் அவர்களால் பார்க்க முடியும்
சிம்கார்டு மற்றும் பாஸ்வேர்ட் ஆகியவை ஏதுமின்றி உங்கள் மொபைல் போனை கட்டுப்பாட்டிற்குள் எடுக்க, வாட்ஸ்அப் வெப்பில் உள்ள பாதுகாப்பு குறைபாடு தான் காரணம் என சைபர் கிரைம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகையால் உங்களுக்கு நன்றாக தெரிந்த நபர்களிடமிருந்தும் கூட போலியான குறுந்தகவலோ அல்லது புகைப்பட இணைப்போ வந்தால், தயவுசெய்து அதனை திறக்க வேண்டாம் என சைபர் கிரைம் எச்சரித்துள்ளது.
வாட்ஸ்அப் வெப்பில் உள்ள பாதுகாப்பு குறைபாடு குறித்து சைபர் க்ரைம் எச்சரித்துள்ள நிலையில், இது குறித்த எந்த அறிவிப்பையும் வாட்ஸ்அப் நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.