

தமிழ்நாட்டில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் ஜூன் 9-ம்தேதி சென்னையில் தொடங்கி வைத்தார். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை ஒழிக்கவும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை பலப்படுத்தவும் இந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடங்கப்பட்டு இருக்கிறது. மேலும் சந்தேகிக்கப்படும் இடங்களில் எல்லாம் டிரோன் மூலம் கண்காணிக்கப்படும் என்றும் முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்து உள்ளார்.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினருக்கென காவல்துறை தொலைதொடர்பு கருவி பொருத்தப்பட்ட நான்கு சக்கர வாகனமும் வழங்கப்பட்டு உள்ளது. சிறப்பு சீருடையும் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம், இவர்களை அடையாளம் காண்பது மக்களுக்கு எளிய வகையில் இருக்கும்.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் தமிழக அரசால் தொடங்கி வைக்கப்பட்டுள்ள சிங்கப்பெண் சிறப்பு படை மூலம் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 140 பெண் சப்-இன்ஸ்பெக்டர்கள், 420 பெண் போலீசாருக்கு திருவள்ளூர் மாவட்டம் கனகவல்லிபுரத்தில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் 5 நாட்கள் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டது. பயிற்சி முடிந்த பெண் போலீசார், அந்தந்த மாவட்டங்களுக்கு சென்று தங்கள் பணிகளை மேற்கொள்கின்றனர்.
இந்த சிறப்பு படையினர் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்கள், தனியார் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப வளாகங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், பெண்கள் தொடர்பான புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கவும் பணியாற்றுவார்கள்.
சிங்கப்பெண் சிறப்பு படையில் தேர்வு செய்யப்பட்டபெண் அதிகாரிகள், காவலர்களுக்கு சென்னையில் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டன. குற்றச்சம்பவங்கள் நடைபெறும் போது பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதிக்கப்பட்டால் அவர்களை எப்படி காப்பாற்றுவது, பாதிக்கப்பட்ட பெண்களை மீட்பது, அவர்களுக்கு தேவையான தொடர் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ரகசிய கண்காணிப்பு மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் துரிதமாக செயல்பட சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள சட்டங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக போக்சோ போன்ற சட்டங்கள் பற்றி பாடங்கள் எடுக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்டையினருக்கு தற்காப்பு, எதிர்தாக்குதல் உள்பட பல்வேறு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது கராத்தே, சிலம்பம் போன்ற தற்காப்பு கலைகள் குறத்தும் சிங்கப்பெண் சிறப்பு படை பிரிவினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. குறைந்தபட்ச திறனை பயன்படுத்தி ஒருவரை தாக்குவது போன்ற நுட்பமான பல விஷயங்கள் கற்றுத்தரப்பட்டன. பெண்கள் தொடர்பான குற்றங்களை முன்கூட்டியே கண்காணிப்பது நடந்த பின்பு அந்த இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்பது போன்றவை குறித்தும் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.
துப்பாக்கியை இயக்கவும் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர்களுக்கு துப்பாக்கி கொடுக்கப்படமாட்டாது. ஆனால் தேவைப்பட்டால் அவர்களுக்கு துப்பாக்கி கொடுக்கப்படும். இவர்களுக்கு வேறு பணி வழங்கப்படாது.
பொதுவாக குற்றம் நடைபெற்ற பின்பு நடவடிக்கை எடுப்பதை விட குற்றம் நடைபெறுவதற்கு முன்பு அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினால் பலரும் பலன் அடைய வாய்ப்பு உள்ளது. அதுதான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம்.
குறிப்பாக பெண் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு கையடக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குற்றங்களை கண்காணிக்கவும் முடியும். இது மட்டுமின்றி ரோந்து செல்லும் போது காவல் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பார்கள். ஏதாவது ஒரு இடத்தில் குற்றங்கள் நடந்தாலும் அதுகுறித்து உடனடியாக தகவல் கிடைக்கும். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதுகாப்பு அளிக்கப்படும்.
குறிப்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் சிங்கப்படையை தொடர்பு கொள்வதற்கு தனி வாட்ஸ்-அப் குழுக்கள், செல்போன் எண்கள் போன்றவையும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்காக தனி போலீஸ் கட்டுப்பாட்டு அறையும் விரைவில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது போலீஸ் அவசர கட்டுப்பாடு மையத்தின் 100 மற்றும் 112, 1091 என்ற எண்ணை பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் உதவி தேவைப்படும் பெண்கள் இந்த எண்ணிற்கு தகவல் கொடுத்தால் அந்த தகவல் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு தெரிவிக்கப்படும்.
அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நடவடிக்கை மேற்கொள்வார்கள். இவர்களுக்கு வழக்குபதியும் அதிகாரம் கிடையாது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பது, அதுதொடர்பான விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்வது இதுதான் இவர்களது முக்கிய பணியாகும். இந்த படைக்கு தேவைப்படும் 49 டிரோன்கள் விரைவில் வாங்கப்படும். இந்த சிங்கப்பெண் படையினருக்கு உடல் கேமரா பொருத்தப்பட்ட சீருடைகளும் விரைவில் வழங்கப்பட உள்ளது.