

தமிழ்நாட்டில் கடந்த மே 10-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் ஜோசப் விஜய் முதல்வராக பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற முதல் நாளே பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை’ திட்டம் செயல்படுத்தப்படும் என்ற முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
பதவியேற்ற ஒரு மாதத்திற்கு பிறகு கடந்த ஜூன் 9-ம் தேதி சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை திட்டத்தின் தொடக்க விழா சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் திடலில் நடைபெற்றது.
அப்போது பேசிய முதல்வர் விஜய், இந்தத் திட்டத்தில் மேலும் 2,000-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். அதோடு சிங்கப்பெண் அதிரடிப் படையின் முதல் கட்ட செயல்பாட்டிற்காக ரூ.354 கோடி நிதியையும் ஒதுக்கீடு செய்தார் முதல்வர்.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை திட்டத்தின் ஐஜி-யாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்தத் திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்ய பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வரும் நிலையில், 1091 என்ற உதவி எண்ணையும் அறிவித்தது.
இந்நிலையில் சிங்கப்பெண் அதிரடிப் படை திட்டத்திற்கு விரைவில் தலைமை அலுவலகம் அமைக்கப்படும் என தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது.
தமிழக காவல் துறையின் வெளியிட்ட அறிவிப்பில், “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம் தொடங்கப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட 120 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை தமிழ்நாட்டில் காணாமல் போன 36 குழந்தைகளை மீட்டு, பெற்றோரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தனர் சிங்கப்பெண் அதிரடிப் படையினர். அதோடு 16 குழந்தை திருமணங்கள் தக்க சமயத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
சிங்கப்பெண் அதிரடிப் படைக்கென்று தனியாக கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு, பெண்களின் பாதுகாப்புக்காக தினந்தோறும் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. சிங்கப்பெண் அதிரடிப் படையினர் தொடர்ந்து ரோந்து மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
எந்நேரத்திலும் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் படையைத் தொடர்பு கொள்ள 1091 என்ற உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தினந்தோறும் 1500-க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் வருகின்றன.
சிங்கப்பெண் அதிரடிப் படைக்காக சென்னையில் உள்ள அசோக் நகரில் தலைமை அலுவலகம் விரைவில் தொடங்கப்பட இருக்கிறது” என தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது
சிங்கப்பெண் அதிரடிப் படை தமிழ்நாடு அரசின் காவல் துறை தலைமையக நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ், நேரடியாக செயல்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் டிஜிபி அலுவலகத்தின் ஒரு அங்கமாகவே ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து இத்திட்டத்தின் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இத்திட்டத்திற்கு தனியாக தலைமை அலுவலகம் அமைக்கப்பட்டாலும், முக்கிய செயல்பாடுகள் அனைத்தும் தலைமைச் செயலகம் மற்றும் தமிழக காவல் துறை தலைமையகத்தின் மூலமே மேற்கொள்ளப்படும். ஏனெனில் இத்திட்டம் முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் நேரடி கண்காணிப்பில் இயங்குகிறது.
தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக செயல்படும் சிங்கப்பெண் அதிரடிப் படையினர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களின் கீழ் பாதுகாப்பு மற்றும் ரோந்துப் பணிகளை மேற்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இத்திட்டத்திற்கு தலைமை அலுவலகம் அமைக்கப்பட உள்ள நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தலைமை அலுவலகத்திற்கு தொடர்ந்து ரிப்போர்ட் செய்ய வேண்டியிருக்கும்.