

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி(SIR) கடந்த நவம்பர் 4-ந்தேதி தொடங்கியது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாக சென்று படிவங்களை வழங்கினர். படிவங்களை பெறுவதற்கான சிறப்பு முகாம்களும் நடந்தது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்காக வழங்கப்பட்ட படிவம் திரும்ப ஒப்படைக்கும் காலஅவகாசம் டிசம்பர் 4-ந் தேதி என நிறைவடைய இருந்த நிலையில் மீண்டும் 2 முறை கால அவகாசம் அளிக்கப்பட்டது. அதன்படி தேர்தல் கமிஷன் 2 முறை வழங்கிய கால அவகாசம் டிசம்பர் 14-ம்தேதியுடன் முடிவடைந்தது.
தமிழ்நாட்டில் வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்களை 100 சதவீதம் வழங்கி, அவற்றை திரும்ப பெறப்பட்ட நிலையில் பெரும்பாலான படிவங்கள் ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டது.
தற்போது பதிவேற்றம் செய்யப்பட்ட படிவங்களின் அடிப்படையில் வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வரும் 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட உள்ளது.
அந்த வகையில் கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர், மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு மற்றும் தெற்கு, வால்பாறை, சூலூர், சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி ஆகிய 10 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 32 லட்சத்து 25 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.
SIR பணி நிறைவடைந்த நிலையில் அதில் இறந்தவர்கள், முகவரி மாறி சென்றவர்கள், இரட்டை பதிவு கொண்ட வாக்காளர்கள் என மொத்தம் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளதால் கோவை மாவட்டத்தில் மட்டும் வாக்காளர்களின் எண்ணிக்கை 26 லட்சமாக குறைந்துள்ளது.
இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் 18 வயது பூர்த்தி அடைந்த புதிய வாக்காளர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதிய வாக்காளர் சேர்க்கைக்கான (படிவம்-6) 1½ லட்சம் படிவங்கள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவு அலுவலகத்தில் வைக்கப்பட்டு உள்ளது.
இந்த படிவங்கள் விரைவில் விநியோகம் செய்யப்பட உள்ளது. இந்த படிவம் மூலம் வாக்காளர்களின் முகவரியை திருத்தம் செய்யவும் விண்ணப்பிக்க முடியும்.
அதுமட்டுமின்றி 18 வயது பூர்த்தி அடைந்த கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் மூலமாக புதிய வாக்காளர்களாக சேர வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த 4-ந் தேதி முதல் தற்போது வரை ஆன்லைன் வாயிலாக 4 ஆயிரம் பேர் புதிய வாக்காளர்களாக பதிவு செய்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 19-ந் தேதி வெளியிடப்பட்ட உடன், அதன்பிறகு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கும், திருத்தங்களை மேற்கொள்ளவும் மேலும் ஒரு மாத கால அளவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு அடுத்தாண்டு (2026) பிப்ரவரி மாதத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இந்த இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே 2026 சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்கவும், போட்டியிடவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.