

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் (SIR) ஒரு பகுதியான, வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 19-ம்தேதி வெளியிடப்பட்டது.
இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் தங்களை மீண்டும் வாக்காளராக இணைத்துக்கொள்ள ஒரு மாத காலம் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜனவரி 18-ந்தேதி வரை கால அவகாசம் தரப்பட்டுள்ளது.
புதிய முகவரியில் குடியேறியவர்கள், அந்தப் பகுதியின் வாக்குச்சாவடி நிலை அலுவலர் முகாமிட்டு இருக்கும் வாக்குச்சாவடிக்கு சென்று 6-ம் எண் படிவத்தை வாங்கி பூர்த்தி செய்து அளிக்கலாம். வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் ஆகியோரின் அலுவலகங்களுக்கும் சென்று (ஆர்.டி.ஓ., தாசில்தார் அலுவலகங்கள்) இந்த படிவத்தை பூர்த்தி செய்து வழங்கலாம்.
voters.eci.gov.in என்ற இணைதளம் மூலமாகவும் அல்லது ECINET செயலி மூலமாகவும் பெயர் சேர்ப்பு படிவங்களை சமர்ப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின் படி ஒவ்வொரு வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடமும் தலா 50 எண்ணிக்கையில் படிவம் 6 இருக்கும். வாக்காளர்கள் அவர்களிடமிருந்து படிவத்தை பெற்று பூர்த்தி செய்து அவர்களிடமே திருப்பி வழங்கலாம்.
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் ஜனவரி 18 வரை ஆட்சேபங்கள் இருந்தால் தெரிவிக்கலாம். அதுமட்டுமின்றி வாக்காளர் பெயர் சேர்த்தல் மட்டும் இல்லாது, ஏற்கனவே உள்ள பதிவுகள் குறித்த மறுப்புகளையும் தெரிவிக்கலாம்.
படிவம் 7ஐ யார் தாக்கல் செய்யலாம்?
வாக்காளர் பட்டியலில் ஒரு பாகத்தில் சேர்க்க உத்தேசிக்கப்பட்டுள்ள ஒரு பெயருக்கு ஆட்சேபணை தெரிவிப்பதற்கோ அல்லது அந்த வாக்காளர் பட்டியலின் பாகத்தில் ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ள ஒரு பெயரை நீக்கக் கோருவதற்கோ, அந்த வாக்காளர் பட்டியலில் முன்னரே பெயர் சேர்க்கப்பட்டுள்ள ஒரு நபர் படிவம் 7ஐ தாக்கல் செய்யலாம்.
தொகுதியின் வாக்காளர் பட்டியலில் வரைவு வெளியீட்டிற்கு பிறகு அப்பட்டியலில் சேர்க்க உத்தேசிக்கப்பட்டுள்ள ஒரு பதிவுக்கு மறுப்பு தெரிவிக்க இவ்விண்ணப்பத்தை(படிவம் 7ஐ) தாக்கல் செய்யலாம். அதேபோல் கோரிக்கைகளையும், ஆட்சேபனைகளையும் கூற வரையறுக்கப்பட்ட காலகட்டத்திற்குள் விண்ணப்பத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
என்னென்ன விவரங்களை திருத்த படிவம் 8ஐ பயன்படுத்தலாம்...
* வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றவர்கள் முகவரி மாற்றம் செய்ய மற்றும் தொகுதி மாற படிவம் 8ஐ சமர்ப்பிக்கலாம்.
* வாக்காளர் அடையாள அட்டையில் ஏதேனும் முக்கியமான விவரங்கள் பிழையாக இருந்தால் அல்லது புதுப்பிக்கப்பட வேண்டி இருந்தால் படிவம் 8ஐ நிரப்பி தேவையான அனைத்து ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
* உங்களது விண்ணப்பம் சமர்ப்பித்தவுடன் படிவம் மற்றும் அனைத்து ஆவணங்களையும் தேர்தல் ஆணையம் சரிபார்க்கும். அனைத்து விவரங்களும் சரியாக இருக்கும் பட்சத்தில், உங்களது வாக்காளர் அடையாள அட்டையில் மாற்றங்களை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும்.
* படிவம் 8ஐ பயன்படுத்தி பெயர், வயது, தகப்பனார் அல்லது தாயார் அல்லது கணவர் பெயர், பாலினம், முகவரி ஆகிய விவரங்களை படிவம் 8ஐ கொடுத்து திருத்திக்கொள்ளலாம்.
* ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டு அச்சிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் உள்ள தனது விவரங்களில் திருத்தங்களை செய்ய விரும்பும் நபர்கள் மட்டுமே படிவம் 8ஐ தாக்கல் செய்ய முடியும்.
* அதேபோல் ஒரு நபரின் விவரங்களில் திருத்தங்கள் செய்வதற்கான படிவம் 8ஐ வேறொரு நபர் தாக்கல் செய்ய முடியாது.
* தொகுதியின் வாக்காளர் பட்டியலின் வரைவு வெளியீட்டிற்கு பிறகு விண்ணப்பத்தை தாக்கல் செய்யலாம். ஆனால் விண்ணப்பங்களை தாக்கல் செய்வதற்கென வரையறுக்கப்பட்ட காலகட்டத்திற்கும் விண்ணப்பங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
* திருத்தப்பணிகள் நடைபெறாத காலத்தில் வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் ஒருவர் தம்மை குறித்த விவரங்களை திருத்துவதற்கு, விண்ணப்பத்தை ஆண்டு முழுவதும் தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
ஆனால், திருத்த பணிகள் நடைபெறாத காலங்களில் விண்ணப்பத்தை இருபிரதிகளாக தாக்கல் செய்ய வேண்டும்.
திருத்தப்பணி நடைபெறும் காலத்தில் விண்ணப்பத்தை வரைவு வாக்காளர் பட்டியல் பார்வைக்கு வைக்கப்படும் நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்கள் மற்றும் வாக்காளர் பதிவு அதிகாரி மற்றும் உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகங்களிலும் தாக்கல் செய்யலாம்.
வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி நடைபெறாத காலத்தில் விண்ணப்பத்தை வாக்காளர் பதிவு அதிகாரியிடமோ குறிப்பிட்ட மற்ற அலுவலகங்களிலோ தாக்கல் செய்யலாம்.
விண்ணப்பிக்கப்படும் புதிய விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியானவர்களின் பெயர்கள் பிப்ரவரி 17-ம்தேதி வெளியிடப்படும் என்றும் இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.