

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் கடந்த நவம்பர் 4-ந்தேதி தொடங்கிய வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி(SIR) டிசம்பர் 14-ம்தேதியுடன் முடிவடைந்தது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்காக வழங்கப்பட்ட படிவம் திரும்ப ஒப்படைக்கும் காலஅவகாசம் டிசம்பர் 4-ந்தேதி நிறைவடைய இருந்த நிலையில் மீண்டும் 2 முறை கால அவகாசம் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து நேற்று (டிசம்பர் 19-ந் தேதி)மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த நடவடிக்கையானது, எந்த தகுதியான வாக்காளரும் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்டு விடக்கூடாது என்ற தேர்தல் ஆணையத்தின் உறுதிப்பாட்டினைப் பின்பற்றும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டுக்கு முந்தைய காலகட்டத்தில், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறை சென்று அணுகியபோதும் தொடர்பு கொள்ள முடியாத வாக்காளர்கள் அதாவது இறந்தவர்கள். கண்டறிய இயலாத மற்றும் முகவரியில் இல்லாத வாக்காளர்கள், இடம் பெயர்ந்தவர்கள், இரட்டை பதிவு செய்த வாக்காளர்கள் என குறிக்கப்பட்ட வாக்காளர்களின் வாக்குச்சாவடி வாரியான பட்டியலை தயாரித்து உள்ளனர்.
election commission of india இதற்கிடையே நேற்று வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் தமிழகம் முழுவதும் மொத்தமாக 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்தார்.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்வதற்கு முன்பாக மொத்தம் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் இருந்தனர். ஆனால் தற்போது 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 755 ஆக குறைந்துள்ளது.
முன்னதாக மேற்கு வங்க மாநிலத்தில் SIR சிறப்பு தீவிர திருத்தம் நடவடிக்கையால் 58 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட நிலையில், 7.6 கோடியாக இருந்த அம்மாநில வாக்காளர்களின் எண்ணிக்கை 7.08 ஆக குறைந்தது.
அதேபோல் ராஜஸ்தானில் 42 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட நிலையில் 5.46 கோடியாக இருந்த அம்மாநில வாக்காளர்களின் எண்ணிக்கை 5.04 ஆக குறைந்தது.
கோவாவில் 1.42 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. இதனால் கோவாவில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 11.85 லட்சத்தில் இருந்து 10.84 லட்சமாக சரிந்துள்ளது.
புதுச்சேரியில் 1.03 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதால் மொத்தம் 10.21 லட்சம் வாக்காளர்கள் இருந்த நிலையில், தற்போது 9.18 லட்சம் வாக்காளர்களாக குறைந்துள்ளது.
மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது 2025ம் ஆண்டின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையில் தமிழகத்தில் தான் அதிக வாக்காளர்கள் (97.37 லட்சம் பேர்) நீக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.