

தமிழகத்தில் கடந்த மாதம்(நவம்பர்) 4-ந்தேதி SIR பணியினை தேர்தல் கமிஷன் தொடங்கிய நிலையில் அந்த பணி டிசம்பர் 14-ம்தேதியுடன் முடிவடைந்தது. அதனை தொடர்ந்து கடந்த டிசம்பர் 19-ந்தேதி வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் தமிழகத்தில் மட்டும் 97,37,831 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
ஒரு வேளை உங்களது பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாவிட்டாலும் கூட கவலையில்லை. உங்களது பெயரை சேர்க்க தேர்தல் ஆணையம் போதிய அவகாசம் கொடுத்துள்ளது. அதில் உங்களது பெயரை சேர்த்துக் கொள்ளலாம்.
வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா இல்லையா என்பதை, https://elections.tn.gov.in/SIR_2026.aspx, https://voters.eci.gov.in/download-eroll, https://electoralsearch.eci.gov.in ஆகிய 3 இணையதளங்களில் சென்று தெரிந்து கொள்ளலாம்.
அதேசமயம், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய 4 நாட்கள் சிறப்பு முகாம் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி வருகிற 27, 28-ம்தேதி மற்றும் ஜனவரி 3,4 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் 75,000 வாக்குச்சாவடிகளில் இந்த சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு தங்கள் பெயரை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று இதுவரை 1,53,571 படிவங்கள்(படிவம் 6) வந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
18 வயதை நிரம்பியவர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தங்களது பெயரை சேர்க்க படிவம் 6-ல் விண்ணப்பிக்க வேண்டும்.
படிவம் 6 பூர்த்தி செய்வது எப்படி?
வாக்காளர்கள் படிவம் 6ஐ இரண்டு முறையாக விண்ணப்பிக்கலாம். அதாவது ஆன்லைன் மூலமாகவும், விண்ணப்ப படிவம் 6 மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க VOTERS ECI.GOV.IN என்ற இணையதளம் சென்று அதில் New form registration என்ற காலத்தை கிளிக் செய்தால் படிவம் 6 என்று இருக்கும். இதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
அடுத்து ஆஃப் லைனில் படிவம் 6ஐ பூர்த்தி செய்ய விண்ணப்பத்தை BLOவிடம் வாங்க வேண்டும்.
படிவம் 6 தமிழில் கிடைக்கிறது. அதில், பெயர், குடும்பப் பெயர், பெற்றோர் அல்லது வாழ்க்கைத் துணை பெயர், செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி, ஆதார் விவரங்கள், பிறந்த தேதி ஆகியவற்றை சரியாக பதிவு செய்ய வேண்டும்.
இதில் குறிப்பிடத்தக்க விவரம் என்னவென்றால், பெயரை மட்டும் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டிலும் எழுத வேண்டும்.
இணைக்க வேண்டிய ஆவணங்கள்
பிறப்புச் சான்றிதழ்
ஆதார் அட்டை
பான் அட்டை
ஓட்டுநர் உரிமம்
பாஸ்போட்
10 அல்லது 12-ம் வகுப்பு சான்றிதழ்கள்
-மேற்கண்ட ஆவணங்களில் எதுவும் இல்லாத நிலையில் பிறந்த தேதியை உறுதி செய்யும் ஆவணத்தை குறிப்பிட வேண்டும்.
இருப்பிடச் சான்றுக்காக, விண்ணப்பதாரர் அல்லது விண்ணப்பிப்பவரின் உறவினர் அல்லது குடும்பத்தைச் சேர்ந்தவர் வாக்காளர் பட்டியலில் இதே முகவரியில் இருந்தால், அவரது பெயரில் இருக்கும் மின் கட்டண அட்டை, சமையல் கேஸ் சிலிண்டர் ரசீது, ஆதார் அட்டை, பாஸ்போட், வங்கி அல்லது அஞ்சல் கணக்குப் புத்தகம் போன்றவற்றை இணைக்கலாம்.
இருப்பிடச் சான்றுக்கு வேறு ஏதேனும் ஆவணங்களை இணைத்திருந்தால் அதை பற்றியும் குறிப்பிட வேண்டும்.
இதே முகவரியில் உள்ள உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த வாக்காளர்களின் பெயர் மற்றும் உறவு, வாக்காளர் அடையாள அட்டை எண் உள்ளிட்டவற்றையும் பதிவு செய்ய வேண்டும்.
மேலும், விண்ணப்பத்தின் இறுதியில் கையொழுத்திட்டு வழங்க வேண்டும். இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்தவுடன், அதனை சமர்ப்பித்ததற்கான ஒப்புகை ரசீதையும் மறக்காமல் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.