இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் கடந்த மாதம்(நவம்பர்) 4-ந்தேதி SIR பணியினை தேர்தல் கமிஷன் தொடங்கிய நிலையில் அந்த பணி டிசம்பர் 14-ம்தேதியுடன் முடிவடைந்தது. இந்த பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன், அரசியல் கட்சிகளின் தேர்தல் முகவர்களும் இணைந்துபணியாற்றினர்.
இந்நிலையில், கடந்த டிசம்பர் 19-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்டநாயக் வெளியிட்டார். அதில் தமிழகத்தில் மொத்தமாக 97,37,831 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.அதன்படி தமிழகத்தில் இறந்தவர்கள் 26,94,672, இடம்பெயர்ந்தவர்கள் 66,44,881, இருண்டு இடங்களில் பெயர் உள்ளவர்கள் 3,39,278 என மொத்தம் 97,37,831 பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
ஒரு வேளை உங்களது பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாவிட்டாலும் கூட கவலையில்லை. உங்களது பெயரை சேர்க்க தேர்தல் ஆணையம் போதிய அவகாசம் கொடுத்துள்ளது. அதில் உங்களது பெயரை சேர்த்துக் கொள்ளலாம்.
வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா இல்லையா என்பதைப் பார்க்க, https://elections.tn.gov.in/SIR_2026.aspx, https://voters.eci.gov.in/download-eroll, https://electoralsearch.eci.gov.in ஆகிய 3 இணையதளங்களை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதில் போய் உங்களது பெயர் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.
முகவரி மாறியதால் பெயர் நீக்கப்பட்டவர்கள் தங்கள் பெயர்களை சேர்க்க தேர்தல் ஆணையம் ஒரு மாத கால அவகாசம் அளித்துள்ள நிலையில் வரும் ஜனவரி 18-ந்தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ஒரு முகவர், நாளொன்றுக்கு 50 வாக்காளர் சேர்ப்பு படிவங்களை மட்டுமே வழங்கலாம் என்ற கட்டுப்பாட்டை தேர்தல் கமிஷன் வகுத்துள்ளது.
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு தங்கள் பெயரை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று இதுவரை 1,53,571 படிவங்கள்(படிவம் 6) மட்டுமே வந்துள்ளன. அதேபோல் 1,007 படிவங்கள் பெயர் நீக்கத்திற்காக (படிவம் 7) அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
இந்த பட்டியலில் இறந்த வாக்காளர் தவிர சுமார் 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு, அவர்கள் மீண்டும் சேர இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில், இதுவரை 1,53,571 பேர்களிடம் இருந்து மட்டுமே 6-ம் எண் படிவங்கள் வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய 4 நாட்கள் சிறப்பு முகாம் நடத்தப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார். இந்த சிறப்பு முகாம்கள் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 27, 28-ம்தேதி மற்றும் ஜனவரி 3,4 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் 75,000 வாக்குச்சாவடிகளில் இந்த சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வாக்காளர் சேர்க்கைக்கு படிவம் 6ஐ பூர்த்தி செய்து சமர்பிக்க வேண்டும். முன்மொழியப்பட்ட வாக்காளர் சேர்க்கைக்கு அல்லது ஏற்கனவே உள்ள பதிவை நீக்க படிவம் 7ஐ பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். முகவரி மாற்றம், வாக்காளர் விவரங்கள் திருத்தம், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை மாற்றம், மாற்றுத்திறனாளிகள் என குறிப்பிடுவதற்கு ஆகிய தேவைகளுக்கு படிவம் 8ஐ பூர்த்தி செய்து வாக்குச்சாவடிகளில் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறினார்.
பொதுமக்களிடமிருந்து பெறப்படும் இந்தத் திருத்தங்கள் மற்றும் சேர்க்கைகளை ஆய்வு செய்த பிறகு, தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14-ம் தேதி வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.