

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19-ந்தேதியன்று வெளியிடப்பட்டது. அதன்படி அக்டோபர் மாதத்தில் இருந்த 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 என்ற வாக்காளர் எண்ணிக்கை, வரைவு பட்டியலில் 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 756 பேர் மட்டுமே இடம் பெற்றனர். அதாவது தமிழகத்தில் மொத்தம் 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 பேர் நீக்கப்பட்டனர்.
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்யப்பட்டவர்களின் படிவங்கள் ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் பெறும் காலம் அடுத்த மாதம் (ஜனவரி) 18-ந்தேதி வரை நடைபெறும்.
அதன்படி, நேற்றைய (டிச.25) நிலவரப்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 1,68,825 பேர் விண்ணப்பம் அளித்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் காலத்தில், தகுதியுள்ள மக்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வசதியாக, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் 27-ந்தேதி (சனிக்கிழமை), 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை), அடுத்த மாதம் 3-ந்தேதி (சனிக்கிழமை) மற்றும் 4-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதனை தொடர்ந்து சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 979 வாக்குச்சாவடி மையங்களில் ஜனவரி 18-ந்தேதி வரை (பண்டிகை நாட்கள் தவிர) அனைத்து நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் மேற்கொள்ள படிவங்கள் வழங்கப்படுகிறது. இந்த ஒவ்வொரு மையங்களிலும் ஒரு வாக்குச்சாவடி நிலை அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் ஒவ்வொரு வார்டு அலுவலகங்களிலும், வாக்குச்சாவடி மையங்களிலும் வைக்கப்பட்டுள்ளது. மேலும், https://elections.tn.gov.in/SIR_2026.aspx, https://voters.eci.gov.in/download-eroll, https://electoralsearch.eci.gov.in ஆகிய தேர்தல் கமிஷன் இணையதளத்திலும் பார்வையிட்டு தெரிந்துகொள்ளலாம். இதை பார்வையிட்டு வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் ஆகிய படிவங்களை பூர்த்தி செய்து வழங்கிடலாம்.
இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு மையத்தின் 1913 என்ற தொலைபேசி எண் வாயிலாக கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.