

பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் முடிந்து, சட்டசபை தேர்தலும் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட 9 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களிலும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணிகள் தொடங்கி உள்ளன. இவற்றில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா, மேற்கு வங்காளம் ஆகிய இடங்களில் வருகிற 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் கடந்த 4-ம்தேதி முதல் (SIR) தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு ஆளும் கட்சியான தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளும், பிற அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. SIRக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இந்த பணிக்காக தமிழக தேர்தல் ஆணையம் தமிழகம் முழுவதும் சுமார் 77,000 அரசுப் பணியாளர்களை பி.எல்.ஓ.க்களாக (வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள்) நியமித்துள்ளது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாக சென்று வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் கொடுத்து வருகின்றனர். இதுவரை 94 சதவீத வீடுகளுக்கு கணக்கெடுப்பு படிவம் கொடுக்கப்பட்டு உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்காளர்களின் சிரமத்தை தவிர்க்க https://voters.eci.gov.in/என்ற இணையதளத்தில் ஆன்லைன் முறையிலும் சமர்ப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதேசமயம், கணக்கீட்டுப்படிவங்களை பூர்த்தி செய்வதில் வாக்காளர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு தீர்வு காணும் பொருட்டு வரும் 25-ந்தேதி வரை 947 வாக்குச்சாவடி மையங்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்காளர் உதவி மையங்கள் செயல்பட உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் தொடங்கியதில் இருந்து பல்வேறு சர்ச்சைகளும், பிரச்சனைகளும், குழப்பங்களும் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. பலருக்கும் இந்த படிவங்களை எப்படி பூர்த்தி செய்வது என்பதில் பல குழப்பங்கள் இருப்பதாகவும் கூறிவருகின்றனர். சில இடங்களில் படிவங்களை நிரம்ப வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் உதவி செய்தாலும், பல இடங்களில் யாரும் உதவி செய்யாததால் படிவங்களை நிரப்பும் போது தவறு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சொந்த ஊரில் இருந்து மற்ற ஊருக்கு குடியேறியவர்கள் SIR படிவத்தை எப்படி பூர்த்தி செய்வது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது, சொந்த ஊரில் வசித்து வந்த பலரும் வேலை நிமித்தமாகவும், படிப்பிற்காகவும் வெளியூர்களுக்கும், சென்னை, கோவை, மதுரை, திருப்பூர் போன்ற மாவட்டங்களுக்கு குடிபெயர்ந்து விட்டனர். அப்படி குடிபெயர்ந்தவர்கள் சொந்த ஊரில் வாக்களிக்க வேண்டுமா அல்லது குடியேறிய ஊரில் வாக்களிக்க வேண்டுமா என்றும் புதிய இடத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அல்லது ஏற்கனவே உள்ள பெயரைப் புதிய முகவரிக்கு மாற்ற என்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
நீங்கள் வேறு ஒரு சட்டமன்றத் தொகுதியில் இருந்து புதிய தொகுதிக்கு மாறியிருந்தால், உதாரணமாக சென்னையில் இருந்து கோவைக்கு மாறிச் சென்றிருந்தால், பழைய தொகுதியில் உள்ள உங்கள் பெயரை நீக்கி விட்டு தற்போது இருக்கும் புதிய முகவரியில் உங்கள் பெயரை பதிவு செய்ய வேண்டும்.
உங்கள் பெயரை சேர்க்க படிவம் 6 பயன்படுத்தி அத்துடன் புதிய முகவரிக்கான ஆதாரமாக, மின் கட்டண ரசீது, சமையல் கேஸ் ரசீது, ஆதார் அட்டை, வாடகை ஒப்பந்தம் போன்ற ஏதாவது ஒன்றை அதனுடன் இணைக்க வேண்டும்.
அத்துடன் 18 வயது பூர்த்தியானவர் என்பதற்கு ஆதாரமாக பிறப்புச் சான்றிதழ், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் போன்றவற்றை காட்டலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை உங்கள் பகுதி வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகத்தில் அல்லது நியமிக்கப்பட்ட சாவடி நிலை அதிகாரியிடம் (BLO) சமர்ப்பிக்கலாம். மேலே உள்ள ஆவணங்கள் உங்களிடம் டிஜிட்டல் வடிவில் இருந்தால், ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம்.
அதேசமயம், நீங்கள் அதே சட்டமன்றத் தொகுதிக்குள் வேறு ஒரு இடத்திற்கு மட்டும் மாறியிருந்தால், உதாரணமாக, சென்னையில் உள்ள அயனாவரத்தில் இருந்து வில்லிவாக்கத்திற்கு மாறியிருந்தால் உங்கள் முகவரியை மாற்ற படிவம் 8ஐ வாங்கி பூர்த்தி செய்து, அதில் 'முகவரி மாற்றம்' என்பதை தேர்வு செய்து, புதிய முகவரிக்கான ஆதாரங்களை சமர்பிக்க வேண்டும். உங்களது விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு, அதன் நிலையை NVSP இணையதளம் அல்லது செயலி மூலம் தொடர்ந்து கண்காணித்து, ஏதேனும் பிழைகள் இருந்தால் உடனடியாகச் சரிசெய்து கொள்ளலாம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதேபோல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த படிவங்கள் குறித்த சந்தேகங்களுக்கு 1950 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ள மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. மேலும் 9444123456 என்ற எண்ணில் வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்டறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.