

தமிழகத்தில் உரிய திட்டமிடல், போதிய பயிற்சிகள் இல்லாமல் 'SIR' பணிகள் மேற்கொள்ளப்படுவதாக வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. அளவுக்கு அதிகமான பணி நெருக்கடி காரணமாக இதுதொடர்பான அனைத்து பணிகளையும் இன்று (நவம்பர்18-ம்தேதி) முதல் ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பதாகவும் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு, உள்ளிட்ட 9 மாநிலங்கள், மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் கடந்த 4-ந் தேதி முதல்'SIR' பணிகள் முழுமூச்சில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தேர்தல் அலுவலகர்கள் வீடு, வீடாக சென்று படிவங்களை கொடுத்து, வாக்காளர்கள் விவரங்களை பூர்த்தி செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். வருகின்ற டிசம்பர் 4-ம் தேதியுடன் சிறப்பு வாக்காளர் சீர்திருத்தப் பணிகள் முடிவடைய உள்ளதால், 68,467 வாக்குச் சாவடி நிலை அலுவலர்களும் 2,37,390 வாக்குச்சாவடி முகவர்களும் இந்தப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் நவம்பர் 16-ம்தேதி நிலவரப்படி 6,00,54,300 அதிகமான, அதாவது 93.67 சதவீதம் படிவங்கள் வாக்காளர்களிடம் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று (நவம்பர் 18-ம்தேதி) முதல் 'SIR' தொடர்பான அனைத்துப் பணிகளை புறக்கணிப்பதாக தமிழக வருவாய்த் துறையின் ஊழியர்கள் கூறியுள்ளனர். பணிச்சுமை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று வருவாய்த் துறை ஊழியர்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
பணி நெருக்கடி, நிதி ஒதுக்கீடு, உரிய திட்டமிடல், ஆய்வுக்கூட்டம் பெயரில் சார்நிலை அலுவலர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கிறது. அதுமட்டுமின்றி பயிற்சி அளிக்காமல் SIR பணிகளை மேற்கொள்ள ஊழியர்களை நிர்பந்திப்பதால் சிலர் நள்ளிரவு வரை பணி தொடர வேண்டிய நிலை ஏற்படுவதாக குற்றம் சாட்டி உள்ளனர். இதை சரிசெய்ய வலியுறுத்தி தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் ஏற்கெனவே முறையீடு செய்யப்பட்டது. ஆனால், அதன் பிறகும் பணி நெருக்கடிகள் அதிகரிக்கின்றன.
சில மாவட்ட ஆட்சியர்கள் ‘ஆய்வுக் கூட்டம்’ என்ற பெயரில் நள்ளிரவு வரை கூட்டம் நடத்துவதையும், தினமும் காணொலி வாயிலாக 3 கூட்டங்கள் நடத்துவதையும் உடனே கைவிட வேண்டும். அரசு விடுமுறை நாட்களில் எஸ்ஐஆர் பணிகளை மேற்கொள்ள நிர்ப்பந்தம் செய்யக் கூடாது என்று கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கூடுதலான பணிச்சுமையை கருத்தில் கொண்டு, ஒரு மாத ஊதியத்தை மதிப்பூதியமாக வழங்க வேண்டும்.
இந்த பிரச்சினையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் உடனே தலையிட்டு, சுமுகமான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, இன்று முதல் வட்டாட்சியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆய்வாளர்கள் உட்பட வருவாய் துறை ஊழியர்கள் அனைவரும் SIR தொடர்பான படிவங்களைப் பெறுவது, இணையத்தில் பதிவேற்றம் செய்வது (Digitisation), ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்பது என அனைத்துப் பணிகளையும் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு ஒருமனதாக முடிவு செய்துள்ளது.
இதனால் தமிகத்தில் வாக்காளர்களுக்கு கொடுத்த விண்ணப்பங்களை திரும்ப பெறுவதும் மற்றும் பதிவேற்றம் செய்யும் பணிகளில் தாமதம் ஏற்படும் சூழ்ந்லை உருவாகி உள்ளது.
இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் SIR பணிச்சுமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், இன்று பணிக்கு வராத ஊழியர்களுக்கு ஊதியம் கிடையாது என தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
தமிழகத்தில் இன்று முதல் SIR பணிகளை புறக்கணிப்பதாக வருவாய் துறை சங்கம் அறிவித்துள்ளது பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இடையே கவனம் ஈர்த்துள்ளது.