கூட்ட நெரிசல் மிகுந்த சென்னையில் மக்கள் எளிதாக பயணிக்க ஸ்மார்ட் கார்டு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் விரிவான செய்திகளைப் பார்ப்போம்.
சென்னையில் ட்ராபிக் மற்றும் கூட்ட நெரிசலால் மக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். இதனால் மக்கள் மெட்ரோ, மின்சார ரயில், பேருந்து போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் இதுகுறித்தான முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது.
மெட்ரோ ரயில்கள், எம்டிசி பேருந்துகள் மற்றும் மின்சார ரயில்களில் நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டை (என்சிஎம்சி) ஏற்கும் பிற பிளாட்பார்ம்களில் பயணிகள் போக்குவரத்துச் சேவைகளைப் பெறுவதற்கு ஏதுவான 'சிங்கார சென்னை' ஸ்மார்ட் கார்டை, போக்குவரத்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிமுகப்படுத்தினார்.
இதனால், இனி பொதுமக்கள் மெட்ரோ ரயில், மின்சார ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்துகளில் எளிதாக பயணம் செய்யலாம். இதற்கு அந்த சிங்கார சென்னை பயண அட்டை என்ற ஒரே ஒரு நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டு இருந்தால் போதும். இன்றுமுதல் இந்த கார்டு பயன்பாட்டிற்கு வருகிறது.
இதற்கு முன்னர் இந்த கார்டு பயன்பாடு மெட்ரோ ரயில்களில் மட்டுமே இருந்து வந்த நிலையில், தற்போது அரசு பேருந்துகள் மற்றும் மின்சார ரயில்களிலும் இதை பயன்படுத்தலாம். விரைவு ரயில் உள்ளிட்ட மற்ற போக்குவரத்து துறைகளிலும் பயன்படுத்தும் வகையில் விரிவாக்கம் செய்ய ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
ஆகையால் இனி பொதுமக்கள் டிக்கெட் வாங்க காத்திருக்க தேவையே இல்லை. பேருந்துகள் பொருத்தவரை, கண்டக்டருக்கும் இனி எந்த கவலைகளும் இருக்காது.
இந்த கார்டை ஸ்கேன் செய்து பயணிப்பது இனி எளிது. அதேபோல அரசு பேருந்துகளில் நடத்துனர்களிடம் ஸ்கேன் செய்யும் கருவிகள் வழங்கப்படும். இதன் மூலம் மூன்று போக்குவரத்துகளில் மக்கள் ஒரே கார்டை பயன்படுத்தி பயணிக்கலாம். குறிப்பிட்ட தொகையை கொடுத்து கார்டை ரீசார்ஜ் செய்துக்கொள்ளலாம். தீர்ந்தப் பின்னர் மீண்டும் ரீசார்ஜ் செய்து பயணிக்கலாம்.
முதற்கட்டமாக 50 ஆயிரம் பேருக்கு இந்த கார்டு வழங்கப்படவுள்ளது. பொதுமக்கள் ப்ரீ பெய்ட் கார்டை நகரம் முழுவதும் உள்ள MTC கவுன்டர்களில் அல்லது ஆன்லைன் போர்ட்டல்கள் மூலம் ரீசார்ஜ் செய்யலாம் என்று கூறப்பட்டிருக்கிறது.