

தொழில்நுட்பம் அதிவேகமாக வளர்ந்துள்ள நிலையில், மொபைல்போன்களின் ஆதிக்கம் இளம் தலைமுறையினர் இடையே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக சமூக வலைதள கணக்குகளை பயன்படுத்தும் சிறுவர், சிறுமிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் இளம் வயதிலேயே சிறுவர்கள் பலர் தவறான வழியை நாடிச் செல்வதாகவும், அவர்களுடைய கல்வி பாதிக்கப்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு உலகிலேயே முதல் நாடாக 16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதித்தது ஆஸ்திரேலியா. இதனைத் தொடர்ந்து, மலேசியாவும் இந்தத் தடையை கொண்டு வர தீவிரமாக பரிசீலித்து வருகிறது. 2026 முதல் மலேசியாவில் இந்தத் தடை அமலுக்கு வர அதிக வாய்ப்புள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவிலும் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றம் ஆலோசனை தெரிவித்துள்ளது.
ஸ்மார்ட்போன்களில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், யூடியூப் மற்றும் ஷேர்சாட் உள்ளிட்ட சமூக வலைதள செயலிகளை பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக சமூக வலைதள செயலிகளை பயன்படுத்தி வரும் சிறுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கொரோனா காலகட்டத்திற்கு பிறகு ஆன்லைன் கல்வி போதிக்கப்பட்டு வந்த நிலையில், சிறுவர்கள் அதிக அளவில் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தத் தொடங்கினர்.
ஆன்லைன் கல்வி வந்த பிறகே, இந்தியாவில் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இருப்பினும் ஸ்மார்ட்போன்களை கல்விக்காக மட்டுமே பயன்படுத்தினால் அதில் எந்த தவறும் இல்லை என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஆனால் ஸ்மார்ட்போன்களில் இருக்கும் சமூக வலைதள செயலிகளை சிறுவர்கள் பயன்படுத்துவதால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்படும்.
பெரும்பாலான சிறுவர்கள் சமூக வலைதளங்களில் அதிக நேரம் கழிப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. மேலும் யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் ஷார்ட்ஸ் போன்ற சிறிய வீடியோக்கள் வந்த பிறகு, பலரும் இதனை அதிக ஆர்வத்துடன் பார்ப்பதாக கூறப்படுகிறது.
சிறுவர்கள் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தும் போக்கு, தொடர்ந்து அதிகரிக்குமேயானால் அது அவர்களின் எதிர்கால வாழ்வை சீர்குலைக்கும் என மதுரை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதனால் ஆஸ்திரேலியாவை போன்று, இந்தியாவிலும் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதள செயலிகளை பயன்படுத்த மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இருப்பினும் இது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை செய்த பிறகே, நடவடிக்கை எடுக்கும் என்று தெரிகிறது.
தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து வரும் நிலையில், ஆன்லைன் கல்வியே அதிக அளவில் கற்பிக்கப்பட்டு வருகிறது. ஆன்லைன் கல்விக்கு வீடியோ அழைப்பு செயலிகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், வாட்ஸ்அப்பில் தான் பாடக்குறிப்புகள் மற்றும் வீட்டுப் பாடங்கள் அனுப்பப்படுகின்றன.
டெல்லி மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில், பாடக் குறிப்புகள் வாட்ஸ்அப் வாயிலாகவே அனுப்பப்பட்டு வருகின்றன. இதனால் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் இந்தியாவில் சமூக வலைதள செயலிகளை பயன்படுத்த தடை விதிப்பதில் பல்வேறு கட்ட ஆலோசனைகள் நடத்தப்படலாம். ஒருவேளை இந்தத் தடையை மத்திய அரசு கொண்டு வந்தால், ஒரு சில விதிமுறைகளுடன் தடை விதிக்க வாய்ப்பு உள்ளது என்றே சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.