
ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள்... சென்னையில் உள்ள உங்கள் அலுவலகத்திற்காக நீங்கள் work from home வேலை பார்க்கின்றீர்கள், நீங்கள் உங்கள் வேலையை முடித்துவிட்டு, "Done Sir!" என்று உங்கள் முதலாளிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புகிறீர்கள்.
அவர் உங்களுக்குப் பதில் மின்னஞ்சல் அனுப்புகிறார்: "எங்கே இருக்கீங்க?"
நீங்கள் பதிலை அனுப்பும்போது, ஒரு கப் சூடான காபியைப் பருகிக்கொண்டே, "நான் இப்போ தென்கொரியா தலைநகர் சியோலில் இருக்கிறேன் சார்!"என்று கூலாகச் சொல்கிறீர்கள்...
இது கனவு இல்லை! இதற்கான சாத்தியத்தைத்தான், தென்கொரியாவின் புதிய Workation Visa உருவாக்குகிறது.
தென்கொரியாவின் புதிய விசா, இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினர், தங்கள் சொந்த நாட்டு நிறுவனங்களுக்கு அங்கிருந்தே வேலை செய்ய அனுமதிக்கிறது. இதன் மூலம் அவர்கள் இரண்டு ஆண்டுகள் வரை தென்கொரியாவில் தங்கலாம்.
நீங்கள் தற்போது இந்தியாவில் இருந்துகொண்டே Work from home வேலை செய்கிறீர்கள் அல்லவா? அதே வேலையை, வீட்டிற்குப் பதிலாக தென்கொரியாவில் இருந்துகொண்டு செய்வதற்கான வாய்ப்பை, இந்த விசா வழங்குகிறது.
இந்த விசா ஒரு முன்னோடித் திட்டமாக, ஜனவரி 1, 2024 அன்று தொடங்கப்பட்டது. வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ரிமோட் ஆக வேலை செய்யும் ஊழியர்கள், தென்கொரியாவில் இரண்டு ஆண்டுகள் வரை வசிக்க இது அனுமதிக்கிறது.
ஆனால், இதை யார் வேண்டுமானாலும் பயன்படுத்த முடியாது. இதற்கான தகுதிகளும், வருமானச் சான்றுகளும் நம்மைக் கலங்க வைக்கின்றன... இந்த நிபந்தனைகளை நீங்கள் பூர்த்தி செய்தால், அடுத்த ஒரு வருடம் அல்லது இரண்டு ஆண்டுகள் தென்கொரியாவின் அழகை ரசித்தபடி உங்கள் பணியைத் தொடரலாம்.
F-1-D விசா தொடக்கத்தில் ஒரு வருடத்திற்கு வழங்கப்படுகிறது, மேலும் அதை இன்னொரு வருடத்திற்கு நீட்டிக்கலாம். இதன்மூலம் அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் தென்கொரியாவில் தங்கலாம். இந்த விசாவைப் பெறுவதற்குப் பொதுவாக 10-15 நாட்கள் ஆகும், ஆனால் சில சந்தர்ப்பங்களில் இன்னும் சில நாட்கள் அதிகமாக ஆகலாம்.
தென்கொரியாவில் உள்ள ஒரு தனிநபரின் சராசரி ஆண்டு வருமானம் தோராயமாக ₹29 லட்சம். அதாவது, ஒரு மாதத்திற்கு சுமார் ₹2.5 லட்சம் சம்பாதிக்கிறார்கள்.
ஆனால், இந்த Workation விசாவிற்கு விண்ணப்பிப்பவர், தென்கொரியர்களின் சராசரி வருமானத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக சம்பாதிப்பவராக இருக்க வேண்டும். அதாவது, ஒரு மாதத்திற்கு சுமார் ₹5 லட்சம் சம்பாதிப்பது அவசியம். இந்த விசாவைப் பெற, ஆண்டுக்கு கிட்டத்தட்ட ₹58 லட்சம் சம்பளம் வாங்குபவரால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
தகுதிகள்:
இந்த டிஜிட்டல் நாடோடி விசாவிற்கு விண்ணப்பிக்க, நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டிய தகுதிகள்:
குறைந்தது 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
தற்போது பணிபுரியும் துறையில் குறைந்தது 1 வருட அனுபவம் இருக்க வேண்டும்.
தென்கொரியாவுக்கு வெளியே உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிபவராக அல்லது வெளிநாட்டில் ஒரு நிறுவனத்தை நடத்தி வருபவராக இருக்க வேண்டும்.
ரிமோட் ஆக மட்டுமே வேலை செய்ய முடியும் - தென்கொரிய நிறுவனத்தில் வேலை செய்யவோ அல்லது அந்நாட்டில் லாபம் ஈட்டும் செயல்களில் ஈடுபடவோ கூடாது.
வெளிநாட்டில் இருந்தபடியே வேலை செய்ய, உங்கள் நிறுவனத்தின் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
மருத்துவக் காப்பீடு (Medical Insurance) கட்டாயம். இதன் மதிப்பு குறைந்தது ₹83 லட்சமாக இருக்க வேண்டும். மேலும், இந்த காப்பீடு விசா காலம் முழுவதும் செல்லுபடியாகக்கூடியதாக இருக்க வேண்டும்.
இந்திய விண்ணப்பதாரர்களுக்கான ஆவணங்கள்:
இந்தியாவிலிருந்து விண்ணப்பிப்பவர்கள் கீழ்க்கண்ட ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்:
பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டப்பட்ட விசா விண்ணப்பப் படிவம் (படிவம் எண். 17).
குறைந்தது 6 மாதங்கள் செல்லுபடியாகும் பாஸ்போர்ட்.
தென்கொரியாவில் குறைந்தது 3 மாதங்கள் ரிமோட் ஆகப் பணியாற்ற உங்கள் நிறுவனம் வழங்கிய அனுமதி கடிதம்.
வருமானச் சான்று - இவற்றில் குறைந்தது இரண்டு ஆவணங்கள் தேவை: வேலைவாய்ப்புச் சான்றிதழ், சம்பள ஆவணங்கள் (salary slips), 3 மாத வங்கி அறிக்கைகள், வருமான வரிச் சான்றிதழ் (ITR) அல்லது சம்பளச் சான்றுகள் (pay stubs).
இந்தியக் குற்றவியல் பதிவுச் சான்றிதழ் (6 மாதங்களுக்குள் பெறப்பட்டது, கொரிய தூதரகத்தால் அங்கீகரிக்கப்பட்டது).
கடந்த 5 ஆண்டுகளில், ஒரு வருடத்திற்கு மேல் நீங்கள் வாழ்ந்த வேறு எந்த நாட்டிலும் குற்றவியல் பதிவுகள் இல்லை என்பதற்கான சான்றிதழ்.
மருத்துவக் காப்பீடு சான்றிதழ்.
எங்கு மற்றும் எப்படி விண்ணப்பிப்பது?
இந்தியர்கள் தென்கொரியாவின் தூதரகங்கள் அல்லது துணைத் தூதரகங்களான டெல்லி, மும்பை, சென்னை அல்லது கொல்கத்தாவில் விண்ணப்பிக்கலாம். நீங்கள் ஏற்கனவே சுற்றுலா விசாவில் தென்கொரியாவில் இருந்தால், உள்ளூர் குடிவரவு அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்.