

தமிழகத்தில் கடந்த மாதம்(நவம்பர்) 4-ந்தேதி SIR பணியினை தேர்தல் கமிஷன் தொடங்கிய நிலையில் அந்த பணி டிசம்பர் 14-ம்தேதியுடன் முடிவடைந்தது. அதனை தொடர்ந்து கடந்த டிசம்பர் 19-ந்தேதி வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் தமிழகத்தில் மட்டும் 97,37,831 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
ஒரு வேளை உங்களது பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாவிட்டாலும் கூட கவலையில்லை. உங்களது பெயரை சேர்க்க தேர்தல் ஆணையம் போதிய அவகாசம் கொடுத்துள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா இல்லையா என்பதை, https://elections.tn.gov.in/SIR_2026.aspx, https://voters.eci.gov.in/download-eroll, https://electoralsearch.eci.gov.in ஆகிய 3 இணையதளங்களில் சென்று தெரிந்து கொள்ளலாம்.
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு தங்கள் பெயரை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று இதுவரை 1,53,571 படிவங்கள்(படிவம் 6) வந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வேலை நிமித்தமான வெளியூரில் இருப்பவரின் குடும்பத்தினர், சொந்த ஊரில் இருக்கும் அவரது SIR விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்கலாம். அல்லது வெளியூரில் இருப்பவர், https://voters.eci.gov.in என்ற இணையதளத்தின் மூலம் உங்களது படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
ஆனால் உங்களது பெயர் வாக்காளர் அடையாள அட்டையிலும், ஆதார் கார்டிலும் ஒரே மாதிரியாக இல்லாதபட்சத்தில் உங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படும். அதற்கு வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள உங்களது பெயரை ஆதாரில் இருப்பதை போல் மாற்ற வேண்டும். அதற்கு https://voters.eci.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று வாக்காளர் அடையான அட்டையில் உள்ள உங்களது பெயரை மாற்றம் செய்ய படிவம் 8-ஐ பூர்த்தி செய்து விண்ணப்பிக்க முடியும்.
ஆதார் கார்டில் பெயர் மாறினால் மாற்றம் செய்வது, போன் நம்பர் மாற்றம் செய்வது, முகவரி, புகைப்படம் மாற்றம் செய்வது என அனைத்து விவரங்களையும் அடிக்கடி அட்டேட் செய்ய அரசாங்கம் வலியுறுத்தியதால் ஆதாரில் அனைத்து விவரங்களும் தெளிவாக இருக்கிறது. ஆனால் இதேபோல் வாக்காளர் அடையாள அட்டையில் புதிய அப்டேட்கள் எதுவும் செய்யவில்லை.
அதேபோல் வாக்காளர் அடையாள அட்டையிலும் நீங்க வீடு மாறி விட்டால் முகவரி மாற்றுங்கள், போன்நம்பர் மாற்றினால் தற்போது உபயோகிக்கும் போன் நம்பரை மாற்றுங்கள் என்று அடிக்கடி வலியுறுத்தியிருந்தால் ஆதார் அட்டையை போன்றே வாக்காளர் அடையாள அட்டையில் வாக்காளரின் தற்போதுள்ள அனைத்து விவரங்களும் இடம் பெற்றிருக்கும்.
அதேபோல் ஆதாரில் உள்ளது போன்றே உங்களது பெயர் உள்ளிட்ட விவரங்கள் வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களிலும் இருக்க வேண்டும் என்று முதலிலேயே அரசு அறிவுறுத்தி இருந்தால் மக்கள் இப்போது ஆன்லைனில் SIR படிவத்தை பூர்த்தி செய்யும் போது கஷ்டப்பட்டிருக்க வேண்டாம்.
ஆதாரிலும், வாக்காளர் அடையாள அட்டையிலும் பெயர் மாறி இருப்பதால் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பெரும்பாலானவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதால் மக்கள் பெரும் இன்னலை சந்திந்து வருகின்றனர்.
அதை தொடர்ந்து வாக்காளர்கள் தங்களின் பெயர்கள் விடுபட்டதாக கோரிக்கை எழுந்த நிலையில் தற்போது, வாக்காளர்கள் பெயர் சேர்க்க, திருத்தங்கள் மேற்கொள்ள 4 நாட்கள் சிறப்பு முகாம் நடத்தப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார்.
தகுதியுள்ள வாக்காளர்கள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வசதியாக, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இன்று சனிக்கிழமை (டிசம்பர் 27), நாளை ஞாயிற்றுகிழமை (டிசம்பர் 28) மற்றும் ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.
இந்த சிறப்பு முகாமில், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாத 18 வயது நிரம்பிய தகுதியுடையவர்கள் படிவம் 6 ஐ உறுதிமொழி படிவத்துடன் சமர்ப்பித்து தங்கள் பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள எவரும் முன்மொழியப்பட்ட சேர்க்கைக்கு ஆட்சேபனை தெரிவிக்கவோ, ஏற்கனவே உள்ள பெயரை நீக்கவோ படிவம் 7 மூலம் விண்ணப்பிக்கலாம்.
முகவரி மாற்றம், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளை திருத்தம் செய்ய, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை மாற்றம் செய்ய, மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் என குறிப்பது ஆகிய கோரிக்கை உடையவர்கள் படிவம்-8 மூலம் விண்ணப்பிக்கலாம்.
தமிழகம் முழுவதும் 75,000 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ள நிலையில், சென்னையில் மட்டும் 4079 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது.
இதில் வாக்காளர்கள் சென்று உரிய படிவங்களை வழங்கி பயனடையலாம். சிறப்பு முகாம்கள் சீராக நடக்கவும், இந்த திட்டம் பயனுள்ளதாக அமல்படுத்தவும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் கூறினர்.