
மும்பை ஸ்ரீ சண்முகானந்த சபா, கடந்த பல வருடங்களாக குடியரசு மற்றும் சுதந்திர தின நன்னாள்களில், நாட்டுக்காக போராடிய, தியாகம் செய்த உண்மையான வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தை கௌரவித்து வருகிறது.
நுண்கலைகளையும், ஆயுதப்படைகளையும் மேம்படுத்துவதில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு சிவில் சமூகத்திற்கான கூட்டாண்மை இதுவெனக் கூறப்படுகிறது.
ஸ்ரீசண்முகானந்தா சபா, குடியரசு தினத்தை (2025), 'Wounded Warrier day' ஆக அறிவிப்பு செய்து, போரில் நாட்டுக்காக தியாகம் செய்த 15 வீரர்களின் குடும்பப் பெண்களை அழைத்து கௌரவித்தது. இவர்களெல்லாம் மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் கோவாவைச் சேர்ந்தவர்கள்.
ஸ்ரீ சண்முகானந்தா சபா, ஸ்ரீ சண்முகா ஷௌரிய ரத்னா விருதை கடந்த ஐந்து வருட காலங்களாக அறிமுகப்படுத்தி, நாட்டுப்பற்றுடைய தனி நபர்கள் மற்றும் கிராமத்தினர் ஆகியோர்களுக்கு இவ்விருதை வழங்கி வருகிறது.
தவிர, மேலும் பல விருதுகளை, ஆண்டு தோறும் ஸ்ரீசண்முகானந்தா வழங்கி வருவது பெருமைக்குரிய விஷயமாகும்.
ஸ்ரீசண்முகா ஷௌரிய ரத்னா விருது விபரம்:-
ஸ்ரீசண்முகா ஷௌரிய ரத்னா விருது பெறுபவர்களுக்கு, ரொக்கப் பரிசு, நினைவுப் பரிசு, பொன்னாடை, பாராட்டு பத்திரம் ஆகியவற்றை ஸ்ரீ சண்முகானந்தா சபா அளித்து கௌரவித்து வருகிறது.
2008 ஆம் வருடம், மும்பையில் தீவிரவாதிகளின் தாக்குதல் சமயம் குண்டடி பட்டு காயமடைந்த 9 வயது சிறுமியாக இருந்த தேவிகா நட்வர்லால் ரோத்தாவனுக்கு, இந்த வருடம் சுதந்திரத் தினத்தன்று, ஸ்ரீ சண்முகானந்தா சபாவினால், ஸ்ரீ சண்முகா ஷௌரிய ரத்னா விருது அளிக்கப்பட்டது.
தேவிகா நட்வர்லால் ரோத்தாவன், தனிப்பட்ட முறையில் நாட்டிற்காக ஆற்றிய தொண்டு:-
மும்பை மாநகரில், 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 முதல் 29 தேதி வரை தீவிரவாதிகளின் தாக்குதல் மும்முரமாக நடந்தது. பாகிஸ்தானிலிருந்து வந்த பத்து தீவிரவாதிகள், மும்பையில் பல்வேறு இடங்களில் குண்டுகளை எறிந்தும், துப்பாக்கியால் சுட்டும் பயங்கரமாக தாக்குதல் நடத்தினர்.
தாஜ்மஹால் ஹோட்டல், விக்டோரியா டெர்மினஸ் ரெயில் நிலையம், மேடம் காமா ஹாஸ்பிடல் போன்ற முக்கியமான பல இடங்களில் தாக்குதல் நடைபெற்றது. ஆறு அமெரிக்கர்கள் உள்பட 160 பேர்கள் மரணமடைந்தனர்.
100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். தாக்குதலுக்கு காரணமான தாவூத் இப்ராகிம், டைகர் மேமன் ஆகியோர்கள் பாகிஸ்தானில் தலைமறைவாக இருந்தனர். தாக்குதலின்போது பிடிபட்ட தீவிரவாதி அஜ்மல் கசாப், புனே எரவாடா சிறையில் அடைக்கப்பட்டு பிறகு தூக்கிலிடப்பட்டார்.
விக்டோரியா டெர்மினஸ் ரெயில் நிலையத்தில் தாக்குதல் நடந்த சமயம், 9 வயது சிறுமியாக இருந்த தேவிகா ரோத்தாவன், தனது சகோதரன் மற்றும் தகப்பனாருடன் வி.டி. ரெயில் நிலையத்தில் ரெயில் ஏறக் காத்திருந்தாள். அப்போது தேவிகாவின் காலில் துப்பாக்கித் தோட்டாவை, தீவிரவாதி அஜ்மல் கசாப் செலுத்தியதில் அவளுக்கு பெரும் காயம் ஏற்பட்டது. 6 அறுவை சிகிச்சைகள் நடந்தன. வலது கால் பயன்பாட்டை இழந்தது. இதற்கு காரணமான தீவிரவாதி அஜ்மல் கசாப்பை, நீதிமன்றத்தில் அடையாளம் காட்டியது தேவிகாதான். சிறுமியின் வலுவான சாட்சியத்தால், அஜ்மல் கசாப்பிற்கு தூக்குத் தண்டனை கிடைத்தது.
தேவிகா நட்வர்லால் ரோத்தாவனுக்கு இப்போது 26 வயதாகிறது. விடாமுயற்சியுடன் படித்து பட்டதாரியாக உள்ளார். பெருமைக்குரிய ஸ்ரீ சண்முகா ஷௌர்ய ரத்னா விருது, 2025 சுதந்திர தின விழாவில், மும்பை ஸ்ரீ சண்முகானந்தா சபாவினால், தேவிகாவிற்கு வழங்கப்பட்டது. மேலும் சிந்தூர் நடவடிக்கையின் போது நமது நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்கள் மற்றும் பலியான குடியானவர்களின் குடும்பத்தினரும் கௌரவிக்கப்பட்டனர்.
இந்த விழாவிற்கு தலைமை விருந்தினராக, மேஜர் ஜெனரல் சதீந்தர் சிங் மற்றும் கௌரவ விருந்தினராக, பிரிகேடியர் க்யான் திரிவேதியும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.