
உலகின் மிக அதிசயமான நினைவுச்சின்னப் பள்ளத்தாக்கு இருக்கும் இடம் எது தெரியுமா? உடா-அரிஜோனா எல்லையில் அமைந்திருக்கும் நினைவுச் சின்னப் பள்ளத்தாக்கு (MONUMENT VALLEY) தான் அது!
பல வருடங்களுக்கு முன்னால் சிவப்பு மணல் கொண்ட பாலைவனமாக இது இருந்தது. காலப்போக்கில் கடல் நீர் இங்கு புகவே மணல் எல்லாம் அழுத்தமடைந்து களிமண் பாறையாக ஆனது. ஆறரைக் கோடி வருடங்களுக்கு முன் இது அழகிய மணல் பரப்பாக ஆனது. விளைவு, பிரம்மாண்டமான மிகக் கெட்டியான மணல் சிகரங்கள் ஆங்காங்கே உருவாயின. தூண்களாக வானளாவி நிமிர்ந்து நின்ற இவைகள் வண்ண வண்ணமாகத் தோற்றமளித்தன. இவற்றில் பலவற்றின் உயரம் நம்ப முடியாத ஆயிரம் அடி உயரம் ஆகும்.
இதைப் பார்த்த பிரபல அமெரிக்க எழுத்தாளரான ஜேன் க்ரே (Zane Grey 1875-1939), மஞ்சளும், இளஞ்சிவப்பும் கலந்த, தூரத்தில் உள்ள உலகம் என்று வர்ணித்தார். ஆங்காங்கே எழுந்து நிற்கும் இந்த நினைவுச் சின்னப் பள்ளத்தாக்கைப் பார்த்த ஹாலிவுட் டைரக்டர்கள் சும்மா இருப்பார்களா, என்ன? 25 படங்களுக்கு மேலாக இங்கு படப்பிடிப்பு நடந்திருக்கிறது. அனைத்தும் வெற்றிப்படங்களாக ஆயின.
அமெரிக்க லெஜண்ட் டைரக்டரான ஜான் ஃபோர்ட் எடுத்த ஸ்டேஜ்கோச் (1939) உள்ளிட்ட படங்கள் அபார வெற்றியைப் பெற்றன.
இதன் வரலாறு பிரமிப்பூட்டும் ஒன்று. இங்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் அரிஜோனா- உடாவைச் சேர்ந்த இந்தியப் பழங்குடியினர் சிறு சிறு ஊர்களை அமைத்தனர். செங்கல்லாலும் களிமண் பூசப் பட்டவையாயும் உள்ள வீடுகளில் அவர்கள் வசிக்கலாயினர். இவர்கள் அனஸாஜி (ANASAZI) இந்தியர்கள் என்று அழைக்கப்பட்டனர். அனஸாஜி என்றால் பழங்காலத்தவர் என்று அர்த்தம். பாலைவனத்தில் கால்வாய்கள் வெட்டி விவசாயம் செய்ய ஆரம்பித்தனர் இவர்கள்.
அமெரிக்க இந்தியர்கள் கூட்டம் கூட்டமாக ஆடுகளையும். செம்மறியாடுகளையும் வளர்த்து இதை குடியிருப்புப் பகுதியாக ஆக்கினர். டர்க்காய்ஸ் கற்களைக் கொண்டு இவர்கள் வியாதிகளைப் போக்கினர். மணலில் இவர்கள் போட்ட சித்திரங்கள் அதிசயமாக நோய்களைத் தீர்த்தது.
நவாஜோ இந்தியர்கள் என்று பெயரிடப்பட்ட பூர்வ குடியினர் அருகிலிருந்த பிரதேசங்கள் மீது அடிக்கடி போர் தொடுப்பதில் ஈடுபட்டனர். அங்கிருந்த மெக்ஸிகோ மக்களும், வெள்ளைக்காரர்களும் இதனால் பெரும் தொந்தரவுக்குள்ளாயினர். 1859ல் அமெரிக்க ராணுவம் இங்கே நுழைந்து அனைத்தையும் ஒழுங்குபடுத்தியது. நவாஜோ இந்தியர்கள் ராணுவத்திடம் சரணடைந்தனர். 1874ல் தான் பிடித்து வைத்திருந்த பல பகுதிகளை ராணுவம் இவர்களிடம் திருப்பிக் கொடுத்தது.
இரண்டாம் உலகப் போரின்போது ஒரு அதிசயமான கண்டுபிடிப்பு இங்கு நிகழ்ந்தது. வனடியம் (VANADIUM) என்ற அபூர்வமான தாதுப்பொருள் இங்கு ஏராளமாக இருப்பது தெரியவந்தது. இது எஃகு மற்றும் இரும்பை வலுப்படுத்தும். விமானக் கலப்பு உலோகங்கள், அணு உலை தயாரிப்பிற்கு இது பெரிதும் உதவும். போதாதற்கு இங்கு யுரேனியமும் கிடைத்தது. ஆகவே இது முக்கிய பகுதியாக இன்று திகழ்கிறது.
இங்கு வெள்ளியும் டர்க்காய்ஸ் கல்லும் அபரிமிதமாகக் கிடைக்கவே நவாஜோ இந்தியர்கள் இவற்றைப் பதித்து கம்பளங்களையும் விரிப்புகளையும் தயாரிக்க ஆரம்பித்தனர். ஆனால் ஒவ்வொரு தயாரிப்பிலும் நிச்சயம் ஒரு குறை இருக்கும்; இருக்க வேண்டும்! ஏனெனில் குறை இல்லாது பூரணமாக இருக்கும் ஒரு தயாரிப்பானது அதைச் செய்தவரின் ஆயுளைப் பறித்துவிடும் என்பது இவர்களது நம்பிக்கை.
இங்குள்ள கற்றாழைகள் பல கிளைகளுடன் ஐம்பது அடி உயரத்திற்கு வளரும்; பார்ப்பதற்கே அழகாக இருக்கும்.
இங்குள்ள டோடம் கம்பம் என்பது (TOTEM POLE) 500 அடி உயரமுள்ளது. சூரியாஸ்தமனத்தில் 35 மைல் நீளத்திற்கு அதன் நிழல் விழுகிறது.
இந்த அதிசயத்தைப் பார்க்கப் பயணிகள் திரளுவதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?
உலகின் மகத்தான அதிசயங்களுள் இந்தப் பள்ளத்தாக்கு தாதுப் பொருள்களால் விலை மதிப்புடையது; சரித்திரத்தால் பழமையானது; அதிசயங்களால் பிரமிக்க வைப்பதும் கூட!