

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகள், முந்தைய ஆளும் கட்சியான திமுகவினருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், தமிழக வெற்றி கழக தலைவரான விஜய் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்துள்ளார். சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியடைந்து எதிர்க்கட்சியாக சட்டமன்றத்தில் அமர்ந்துள்ளது.
திமுகவின் முக்கிய தலைவர்களான துரைமுருகன், மகேஷ் பொய்யாமொழி , டி.ஆர். பி.ராஜா உள்ளிட்ட பலரும் தோல்வியை தழுவினர். இதில் மிகவும் முக்கியமாக திமுகவின் தலைவரும், அப்போதைய முதல்வருமான ஸ்டாலின், தான் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் தோல்வி அடைந்தது, நாடு முழுக்க மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இன்று வரை தேர்தல் முடிவுகளை திமுகவினர் ஏற்றுக்கொள்ளாமல் , "மக்கள் தெரியாமல் ஓட்டு போட்டு விட்டதாகவும் அவர்கள் தற்போது மிகவும் வருந்துகின்றனர்" என்றும் பேசி வருகின்றனர்.
கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஸ்டாலின் , தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த வி.எஸ். பாபு என்பவரிடம் 8795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். இந்த தேர்தலில் வி.எஸ்.பாபு 82,997 வாக்குகளும் , ஸ்டாலின் 74,202 வாக்குகளும் பெற்றிருந்தனர். இந்த தோல்வியை அடுத்து வாக்கு எந்திரங்களின் செயல்பாட்டை ஆய்வு செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு செய்யப்பட்டது.
திமுக தலைவரின் மனுவை பெற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம், கொளத்தூர் தொகுதியில், பயன்படுத்திய மின்னணு வாக்கு எந்திரங்கள் (EVM) மற்றும் வி.வி.பாட் (VVPAT) எந்திரங்களை இன்று( 29.7.2026) சரிபார்ப்புகளை தொடங்குகிறது. வாக்கு எந்திரங்களின் சோதனை சோதனையின் பொழுது, இந்த தொகுதியில் போட்டியிட்ட மற்ற வேட்பாளர்களையும் கலந்து கொள்ளுமாறு தேர்தல் ஆணையம் அழைப்பு அளித்துள்ளது.
மேலும் வாக்கு எந்திரங்கள் சரியாக செயல்பட்டனவா? என்பதை மட்டுமே ஆய்வு செய்யும். இது அதில் உள்ள வாக்குகளை மறு எண்ணிக்கை செய்யும் நடைமுறை அல்ல. என்று தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தி உள்ளது.
கொளத்தூர் தொகுதியில் 14 வாக்குச் சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட 42 பாலேட் யூனிட்டுகள் (Ballot Units), 14 கன்ட்ரோல் யூனிட்டுகள் (Control Units) மற்றும் 14 வி.வி.பேட் (VVPAT) கருவிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளது. இந்த எந்திரங்கள் அனைத்தும் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன, இந்த ஆய்வும் இந்த சோதனை மையத்திலேயே நடைபெறும்.
இந்த சோதனை நடத்த ஒவ்வொரு வாக்கு சாவடிக்கும் ₹47,200 கட்டணமாக தேர்தல் ஆணையம் வசூல் செய்கிறது. வாக்குப்பதிவு எந்திரத்தை ஆய்வு செய்ய ஸ்டாலின் மட்டுமல்லாமல், திமுகவை சேர்ந்த உத்தரமேரூர் தொகுதி வேட்பாளர் கே.சுந்தர் , ராஜபாளையம் தொகுதி திமுக வேட்பாளர் எஸ். தங்கபாண்டியன் ஆகியோரும் மனு செய்துள்ளனர். இவர்களின் தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்களும் ஆய்வு செய்யப்பட உள்ளது.
வாக்கு எந்திரங்களில் உள்ள விவரங்கள் திரையில் காண்பிக்கப்படும். அந்த தரவுகளை தேர்தல் முடிவுகள் வெளியான போது கொடுக்கப்பட்ட படிவம்-20 (Form 20) உடன் சரி பார்த்துக் கொள்ளலாம். அடுத்ததாக வாக்கு எந்திரங்களில் உள்ள மொத்த தரவுகளும் அழிக்கப்படும். அது தொடர்ந்து புதிதாக சோதனை முறையில் வாக்குப்பதிவு செய்து, அதன் முடிவுகளை உடனடியாக கண்டறிந்து கொள்ளலாம்.
இதற்காக 500 முதல் 1400 வரை வாக்குகளை பதிவு செய்து ஆய்வுக்கு உட்படுத்தலாம். இந்த சோதனை பெல்(BEL) நிறுவனத்தின் பொறியாளர்கள் முன்னிலையில் ஒரு வாரம் வரை நடைபெறும். அதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் உடனடியாக விளக்கமும் அளிக்கப்படும்.