

நடந்த முடிந்த சட்டசபை தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் திராவிட கட்சிகளை தேற்கடித்து தவெக மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. அதனை தொடர்ந்து தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அதன்பின் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்து அதை படிப்படியாக நடைமுறைப்படுத்தி வருகிறார்.
எனிலும், முதலமைச்சர் விஜய் தலைமையிலான தற்போதைய தமிழக அரசு, கடுமையான நிதிப் பற்றாக்குறை மற்றும் அதிகரிக்கும் வருவாய் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகிறது. முந்தைய ஆட்சியின் கடன் சுமை மற்றும் நிர்வாகச் செலவினங்களால் அரசுப் புதிய திட்டங்களைச் செயல்படுத்துவதில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இருந்தபோதிலும் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருகிறது. அந்த வகையில் வரும் நாட்களில் விஜய் தேர்தல் வாக்குறுதிகளாக அறிவித்த ஒவ்வொரு திட்டத்தையும் படிப்படியாக நடைமுறைப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தவெக ஆட்சிக்கு வந்த பின்னர் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக 'சிங்கப்பெண் படை'யை கொண்டு வந்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு முழுவதும் இந்த அதிரடிப்படை விரிவுபடுத்தப்பட்டு, குற்றத்தடுப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
அதேபோல் பத்திரப்பதிவுத் துறையில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர அரசு பல்வேறு சீர்திருத்தங்களைச் செயல்படுத்தி வருகிறது. ஆன்லைன் மூலம் ஆவணப் பதிவு (Anywhere Registration) கட்டாயமாக்கப்பட்டு, பொதுமக்களின் அலைச்சல் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பதிவுத்துறை அமைச்சர் த. லோகேஷ் தமிழ்ச்செல்வன் அரசு அலுவலகங்களில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு, லஞ்சம் வாங்குவது உறுதி செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். ஊழல் புகார்கள் வந்தால் மாவட்ட பதிவாளர்கள் மற்றும் பதிவுத்துறை டி.ஐ.ஜி அலுவலகங்களிலும் வீடுகளிலும் சோதனை நடத்தப்படும் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு வீட்டுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என விஜய் தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருந்தார். அவர் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் அதை நடைமுறைப்படுத்தினார்.
அதேபோல் கடந்த 2021 தமிழக சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற முக்கிய காரணங்களில் ஒன்று மகளிர் உரிமைத்தொகை. மாதம் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பு மகளிரிடையே பெறும் வரவேற்பு பெற்றது. சொன்னது போலவே ஆட்சிக்கு வந்து சில ஆண்டுகளில் அந்த திட்டத்தை திமுக அமல்படுத்தியது.
இந்த நிலையில் சட்டசபை தேர்தல் பிரசாத்தின் போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், 60 வயது வரை உள்ள அனைத்து மகளிருக்கும் மாதம் 2500 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்தார். தேர்தலில் வெற்றி பெற்று 2 மாதங்கள் கடந்த பிறகும் இன்னும் 1000 ரூபாய் மட்டுமே மகளிர் உரிமைத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தவெக அறிவித்த 2,500 ரூபாய் எப்போது கிடைக்கும் என மகளிர் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் பட்ஜெட்டில் அதற்காக அறிவிப்பு வெளியாக உள்ளதாக என தகவல் வெளியாகி உள்ளது.
தவெக ஆட்சியில் முதல் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. ஆகஸ்ட் 5-ம்தேதி பொது பட்ஜெட் மற்றும் ஆகஸ்ட் 6-ம்தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவித்துள்ர்.
பட்ஜெட்டை முன்னிட்டு கடந்த சில நாட்களாக புதிய வரவு-செலவுத் திட்டத்தைத் (Budget) தயாரிப்பது குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் நீண்ட ஆய்வுக் கூட்டங்களை மேற்கொண்டு வருகிறார்.
ஒவ்வொரு துறையிலும் அறிவிக்கப்பட வேண்டிய திட்டங்கள், அதற்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.
விஜய் ஆட்சியின் (தமிழக பட்ஜெட்) முதல் பட்ஜெட் என்பதால் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் பல புதிய நலத்திட்டங்கள் முக்கிய அறிவிப்புகள் இடம் பெறலாம் என்ற எதிர்பார்ப்பு இப்போதே மக்களிடையே அதிகரித்து இருக்கிறது. குறிப்பாக மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 உயர்த்தி வழங்கப்படும் அறிவிப்பை முதல் பட்ஜெட்டிலேயே முதலமைச்சர் விஜய் வெளியிடுவார் என்று மகளிர் மத்தியில் நம்பிக்கை அதிகரித்துள்ளது.
மற்றொரு மாற்றமாக பழைய பேருந்துகளுக்கு மாற்றாக புதிய பேருந்துகளை கொள்முதல் செய்து இயக்க தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. புதிதாக 164 டீசல் பேருந்துகள் மற்றும் 136 CNG பேருந்துகள் அடங்கிய 300 புதிய அரசுப் பேருந்துகளின் சேவை தொடங்கப்பட்டுள்ளது. புதியதாக 2,000 குளிர்சாதனப் பேருந்துகளை வாங்கும் திட்டத்தை விரைவுபடுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக போக்குவரத்து துறையில் இனி ஏசி பேருந்துகளை மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என்று முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். அதேபோல, போக்குவரத்து கட்டணத்தை உயர்த்தாமல் விளம்பரங்களின் மூலம் வருவாயை உயர்த்துவது தொடர்பாகவும் விஜய் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அதேபோல் அரசு பேருந்தில் தமிழகத்தின் எந்த மூலையிலிருந்தும் எந்த இடத்திற்கும் அனைத்து பெண்களும் கட்டணமின்றி இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிப்பும் பட்ஜெட்டில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே மகளிருக்கான இலவச பேருந்து திட்டம் குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தி இருந்தார். ஒருவேளை போதுமான நிதி இல்லை என்றால் கூட, மகளிருக்கான இலவச பேருந்து திட்டம் குறித்த அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக ஆட்சிக்கு வந்த பின், ஸ்டாலின் முதல் கையெழுத்தாக விடியல் பேருந்து திட்டத்தை செயல்படுத்தினார். அதே பாணியில் முதல் பட்ஜெட்டிலேயே இந்த திட்டத்தை விஜய் விரிவாக்கம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசு ஆகஸ்ட் 17 முதல் 'எனிவேர் ரிஜிஸ்ட்ரேஷன்' (Anywhere Registration) எனப்படும் முழுமையான ஆன்லைன் பத்திரப்பதிவு முறையை அமல்படுத்துகிறது. அதாவது புரோமோட்டர்கள் மூலம் விற்கப்படும் மனை மற்றும் பில்டர்கள் மூலம் விற்கப்படும் வீடுகளின் முதல் விற்பனை மற்றும் அடமானப் பத்திரங்கள் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் செல்லாமலேயே 24 மணி நேரமும் ஆன்லைனில் பதிவு செய்யப்படவுள்ளன.
ஆகஸ்ட் 17 முதல் ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு முறையை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்க உள்ளார். இதன் மூலம் இடைத்தரகர்கள் இல்லாமல் அனைத்து பதிவுகளையும் ஆன்லைன் மூலமே மேற்கொள்ள முடியும் என்று அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
இந்த ஆவணப்பதிவு முறையின் மூலம் பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் சென்று நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல், எங்கிருந்தும் எப்போது வேண்டுமானாலும் அதாவது 24 மணி நேரமும் 365 நாட்களும் இணையதளத்தின் மூலம் தங்களது ஆவணங்களை பதிவு செய்து கொள்ள முடியும்.
தவெகவின் தேர்தல் வாக்குறுதியான தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான வரும் செப்டம்பர் 15-ம்தேதி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படவுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 1 கிராம் (22 காரட், 916 ஹால்மார்க்) தங்க மோதிரம் இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்காகத் தமிழக அரசு ஆண்டுதோறும் ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
அதனைத் தொடர்ந்து, மாணவர்களுக்குக் கல்விக்கடன் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் அறிவித்துள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு 1 லட்சத்து 2 ஆயிரம் மாணவர்களுக்குக் கிடைத்த கல்விக்கடனை, இந்த நடப்பு கல்வியாண்டில் 1 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்ற முடிவை முதலமைச்சர் விஜய் எடுத்துள்ளதாக கூறினார்.
மேலும் 7 லட்சம் ரூபாய் வரை உள்ள கடனுக்கான வரம்பு நீட்டிக்கப்படும் என்றும் எவ்வளவு ரூபாய் வரை முழுமையாகப் பிணையில்லாத கடன் வழங்கப்படும் என்பதை முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார் என்று அவர் கூறியுள்ளார்.
அந்த வகையில் ஆகஸ்ட் 5-ம்தேதி பொது பட்ஜெட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2500 ரூபாய் வழங்கும் திட்டம், ஆண்டுக்கு 6 இலவச சமையல் சிலிண்டர்கள், திருமண உதவித் தொகையாக ஒரு சவரன் தங்கம் மற்றும் பட்டுச்சேலை, மாணவர்களுக்கு 20 லட்சம் வரை கல்விக்கடன், வேலையில்லா பட்டதாரிகளுக்கு 4000 ரூபாய் உதவித்தொகை உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் பட்ஜெட்டில் இடம் பெறலாம் என தலைமைச் செயலக வட்டாரங்கள் சொல்கின்றன.
அதுமட்டுமில்லாமல் இந்த திட்டங்களால் ஏற்படும் செலவுகள், அதனை செயல்படுத்த தேவையான கால அளவு, யார் யாருக்கு முன்னுரிமை உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டிருக்கின்றன.
இன்னும் சில நாட்களில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்கின்றனர் தலைமைச் செயலக வட்டாரத்தினர்.