"ஜோதிடர் சொன்னார் என்பதற்காக மீனவர் வாழ்வாதாரத்தை அழிப்பதா?" - மு.க.ஸ்டாலின் அதிரடி அறிக்கை!

மீனவர் போராட்டத்திற்கு திமுக ஆதரவு; அரசாணையைத் திரும்பப் பெறத் தவெக அரசிற்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
Mk Stalin, CM Vijay
Mk Stalin, CM Vijayimage credit-deccanchronicle.com, theweek.in
Updated on

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

மீனவர்களின் வாழ்விடத்தையும் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் வகையில் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் த.வெ.க. அரசின் தன்னிச்சையான முடிவு கடும் கண்டனத்துக்குரியது. இந்த விவகாரத்தில் திமுகவின் ஆதரவைக் கோரி, மீனவச் சங்கத்தினர் இன்று என்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தனர். இதற்கு எதிராக மீனவ மக்கள் நடத்தி வரும் போராட்டங்களுக்கு திமுக முழு ஆதரவைத் தருவதோடு, தனது முடிவில் இருந்து த.வெ.க. அரசு பின்வாங்கும் வரை மீனவச் சகோதரர்களுடன் உறுதியாகத் துணைநிற்போம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம் கட்ட எத்தனையோ இடங்கள் இருக்கின்றன. ஏற்கெனவே, தலைமைச் செயலகப் பயன்பாட்டுக்கெனத் தலைவர் கலைஞரால் கட்டப்பட்ட ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகமும் இருக்கிறது. வேண்டுமென்றால், அங்கே செயல்பட்டு வரும் மருத்துவமனையை வேறு இடத்துக்கு மாற்றிவிட்டு, மீண்டும் அதைத் தலைமைச் செயலகமாகப் பயன்படுத்தலாம். ஆனால், கடற்கரையைப் பார்த்தபடி முதல்-அமைச்சரின் அலுவலகம் அமைய வேண்டும் என ஜோதிடர் ஒருவர் சொன்னதாலேயே முதல்-அமைச்சர் பட்டினப்பாக்கத்தைத் தேர்ந்தெடுத்திருப்பதாகச் செய்திகள் வருகின்றன.

ஒருவரின் ஆசைக்காக ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும், தமிழ்நாடு அரசு தற்போது தேர்ந்தெடுத்துள்ள இடத்தைச் சுற்றி ஏராளமான பள்ளிகள் அமைந்துள்ளன. இது கடுமையான போக்குவரத்து நெரிசல் கொண்ட பகுதியாகும். இங்கு தலைமைச் செயலகம் அமைந்தால் மாணவர்களும் பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாக நேரிடும். மேலும், பட்டினப்பாக்கத்தில் புதிதாகத் தலைமைச் செயலகம் கட்டவுள்ள பகுதிக்குத் தெற்கில் முள்ளிக்குப்பம், சீனிவாசபுரம் ஆகிய மீனவ கிராமங்கள் உள்ளன.

வடக்குப் பகுதியில் ராஜீவ் காந்தி நகர், பவானி குப்பம், இருதயபுரம், செல்வராஜ்புரம், டூமில் குப்பம், நொச்சி நகர், நொச்சிக்குப்பம் என மொத்தம் 12 குடியிருப்புப் பகுதிகள் இரு மருங்கிலும் ஒரு கிலோ மீட்டருக்குள்ளாகவே உள்ளன. முள்ளிக்குப்பம் பஞ்சாயத்து மற்றும் மீனவ மக்கள் அரசுக்கு அனுப்பி உள்ள கடிதத்துக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும்.

cm vijay, MK stalin|
cm vijay, MK stalin|image credit-@NewsBeez, livemint.com

இந்த ஆட்சி அமைய ஆதரவு தந்த இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமையாது என நினைத்தோம். ஆனால், அவர்களது எதிர்ப்பினையும் போராட்டங்களையும் மீறித் த.வெ.க. அரசு இதில் விடாப்பிடியாக இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தி.மு.க.வும் இந்தப் போராட்டத்தில் வீரியத்துடன் இணைய வேண்டிய சூழலை ஆளும் த.வெ.க. அரசு ஏற்படுத்தியிருக்கிறது.

மீனவர்களின் அழுகுரலுக்குத் த.வெ.க. அரசு செவிமடுத்து உடனடியாகத் தனது அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும். பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவைக் கைவிடுவதாக முதல்-அமைச்சர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அப்பகுதியில் மீனவர்களுக்கான குடியிருப்புகளைக் கட்டித்தர வேண்டும். அராஜகப் போக்குடனும் ஆணவ எண்ணத்துடனும் பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டும் பணிகளைத் தொடர்ந்தால், மீனவர்களுடன் இணைந்து திமுக மிகப் பெரிய போராட்டத்தினை முன்னெடுக்கும் என மீனவர் விரோத த.வெ.க. அரசினை எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெறுமா? மதுரை ஆதீனத்தின் கணிப்பு..!
Mk Stalin, CM Vijay
logo
Kalki Online
kalkionline.com