ஒரு வீட்டில் அதிகபட்சம் எத்தனை சிலிண்டர்கள் வைத்திருக்கலாம்? விதிகள் சொல்வது என்ன?

ஒரு வீட்டில் ஒரு வருடத்தில் எத்தனை LPG சிலிண்டர்களை சட்டப்பூர்வமாக வைத்திருக்கலாம் அல்லது முன்பதிவு செய்யலாம்? என்பது குறித்து அறிந்து கொள்ளலாம் வாங்க..
LPG cylinders
LPG cylinders
Published on

ஈரான் மற்றும் வளைகுடா பகுதிகளில் தொடரும் போர், இந்தியாவுக்கான கேஸ் வினியோகத்தினை வெகுவாக சீர்குலைத்துள்ளது. குறிப்பாக, இந்தியாவின் சமையல் கேஸ் இறக்குமதியில் பெரும்பகுதி ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே நடைபெறுகிறது. தற்போதைய சூழலில் அங்கிருந்து சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், நாட்டின் மொத்தத் தேவையில் சுமார் 55 சதவீத விநியோகம் கேள்விக்குறியாகியுள்ளது.

இதன் கீழ், வணிக மற்றும் தொழில்முறை பயன்பாட்டைக் காட்டிலும் வீட்டு உபயோக சமையல் கேஸ் சிலிண்டர் விநியோகத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. எனவே எண்ணெய் நிறுவனங்கள் வீட்டு இணைப்புகளுக்கு முன்னுரிமை அளித்து, தொழில்துறை மற்றும் வணிக நுகர்வோருக்கு கேஸ் சிலிண்டர் விநியோகத்தை நிறுத்தியுள்ளது.

ஓட்டல்கள், உணவகங்கள் மற்றும் சிறிய உணவகங்கள் பெரும்பாலும் தங்கள் செயல்பாடுகளுக்கு சமையல் கேஸ் சிலிண்டரையே நம்பியுள்ள நிலையில், கேஸ் விநியோகத்தின் திடீர் நிறுத்தம் ஒட்டல் துறைக்கு ஒரு நெருக்கடியை உருவாக்கி உள்ளது. பல மாநிலங்களில் ஓட்டல்கள் மூடப்பட்டதால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

திறந்துள்ள சில ஹோட்டல்கள், டீக்கடைகளில் உணவு பண்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. பல ஹோட்டல்களில் உணவுகளின் விலை ஏற்றப்பட்டு இருக்கின்றன.

இதையும் படியுங்கள்:
25 நாள் ஆகுமா சிலிண்டர் வர? இந்த ஐடியாவ ஃபாலோ பண்ணுனா ஒரு சிலிண்டர் 3 மாசம் வரும்!
LPG cylinders

இந்த இக்கட்டான நிலையைச் சமாளிக்க மத்திய பெட்ரோலிய அமைச்சகம் பல்வேறு போர்க்கால நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதற்கிடையே, மக்களும் எங்கே வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் பலரும் அவசர அவசரமாக சிலிண்டருக்கு புக்கிங் செய்ய ஆரம்பித்து இருக்கிறார்கள். ஆனால், சமையல் கேஸ் தட்டுப்பாடு குறித்துப் பரவி வரும் செய்திகள் தவறானவை என்றும், மக்கள் தேவையின்றிப் பதற்றமடைந்து சிலிண்டர்களை முன்பதிவு செய்ய வேண்டாம் என்றும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

சந்தையில் நிலவும் தற்காலிகச் சூழலைப் பயன்படுத்தி சிலர் சிலிண்டர்களைப் பதுக்குவதைத் தவிர்க்க, அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தை அரசு அமல்படுத்தியுள்ளது. இந்த சட்டத்தின் படி பதுக்கலில் ஈடுபட்டல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படியென்றால் நம் நாட்டில் உள்ள விதிகளின் படி அதிகபட்சம் ஒருவர் வீட்டில் எத்தனை சிலிண்டர்கள் வைத்து கொள்ளலாம் என்பது குறித்த விதிகளை அறிந்து கொள்ளலாம் வாங்க..

இந்தியாவில் பெரும்பாலான வீடுகளில் ஒரு மாதத்துக்கு ஒரு சிலிண்டர் என்ற வீதத்தில் பயன்படுத்துகின்றனர். பல வீடுகளில் ஒரு மாதத்தில் இரண்டு சிலிண்டர்கள் வரை கூட தேவைப்படும். அதேபோல, பல வீடுகளில் ஒரே சிலிண்டரை இரண்டு மூன்று மாதங்கள் வரை கூடப் பயன்படுத்துவார்கள். சராசரியாகப் பார்த்தால் ஒரு மாதத்துக்கு ஒரு சிலிண்டர் வீதம் ஆண்டுக்கு 12 சிலிண்டர்களை பெரும்பாலான மக்கள் வாங்குகின்றனர்.

தகவலின்படி, 60% வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருடத்தில் 10 சிலிண்டர்களுக்கு மேல் தேவைப்படுவதில்லை. அதேபோல், 32 சதவீதம் பேர் 9 கேஸ் மட்டுமே எடுக்கிறார்கள்.

அந்த வகையில் தற்போதுள்ள விதிகளின்படி, வீட்டு உபயோகிப்பாளர்கள் ஒரு ஆண்டிற்கு 14.2 கிலோ எடையுள்ள 12 மானிய விலை சிலிண்டர்களைப் பெற உரிமை உண்டு. இந்த சிலிண்டர்கள் அரசாங்க திட்டங்களின் கீழ் மானிய விலையில் வழங்கப்படுகின்றன.

அதேசமயம், சிறிய சிலிண்டர்களை பயன்படுத்தும் குடும்பங்களுக்கு, ஒரு ஆண்டிற்கு 5 கிலோ எடையுடைய 34 சிலிண்டர்கள் வரை மானிய விலையில் பெறுவதற்கான உரிமை வழங்கப்பட்டுள்ளது.

வழக்கமாக, மானிய விலையில் ஒரு சிலிண்டரை மட்டுமே நுகர்வோர் ஒரு மாதத்திற்கு முன்பதிவு செய்ய முடியும். இருப்பினும், உள்நாட்டு நுகர்வோர் மானிய விலை ஒதுக்கீட்டைத் தாண்டி சந்தை விலையில் சிலிண்டர்களை முன்பதிவு செய்யலாம்.

மானிய விலையில் 12 சிலிண்டர்கள் கிடைத்தாலும், இந்தியாவில் உள்நாட்டு LPG நுகர்வோர் பொதுவாக ஒரு ஆண்டில் மொத்தம் 14.2 கிலோ எடையுள்ள 15 சிலிண்டர்கள் வரை முன்பதிவு செய்ய முடியும். அதாவது, நுகர்வோருக்கான வருடாந்திர மானிய ஒதுக்கீடு தீர்ந்தவுடன், மானியம் இல்லாத வணிக விலையில் மூன்று கூடுதல் சிலிண்டர்களை வாங்கிக்கொள்ளலாம்.

பாதுகாப்பு மற்றும் பெட்ரோலிய விதிகளின் கீழ், பொதுவாக ஒரு உள்நாட்டு LPG நுகர்வோர் ஒரே நேரத்தில் அதிகபட்சமாக இரண்டு சிலிண்டர்களை வீட்டில் வைத்திருக்க அனுமதி உள்ளது. அதாவது ஒரு சிலிண்டரை பயன்படுத்துவதற்கும் (in use) மற்றொரு சிலிண்டரை கையிருப்பாகவும் (spare / reserve) வைத்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், வணிக பயன்பாட்டிற்காக அதிகபட்சம் 100 கிலோ வரை சிலிண்டர் வைக்க அனுமதி உள்ளது.

இதையும் படியுங்கள்:
#JUST IN: சிலிண்டர் இல்லனா போன் வேலை செய்யாது..! – அதிர்ச்சியூட்டும் புதிய தகவல்..!
LPG cylinders

சமீப மாதங்களில், அதிகமான வீடுகளில் சமையலுக்கு எல்பிஜியை நம்பியிருப்பதால், உள்நாட்டு எல்பிஜி நுகர்வு அதிகரித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com