

ஸ்பேம் அழைப்புகளை (Spam Calls) தடுக்க DND சேவையை ஆக்டிவேட் செய்வதும், உங்கள் போனில் உள்ள 'Caller ID & Spam' செட்டிங்ஸை ஆன் செய்வதும் மிகச் சிறந்த தீர்வாகும்.
தினமும் காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கச் செல்லும் வரை மொபைல் போனுக்கு வரும் தேவையற்ற விளம்பர அழைப்புகள், வங்கி கடன் சலுகைகள், கிரெடிட் கார்டு விளம்பரங்கள் எனப் பல தொலைபேசி அழைப்புகளால் மக்கள் சலிப்படைந்து வருகின்றனர். சில நேரங்களில் முக்கியமான அழைப்புகளுக்கு நடுவே மோசடி செய்யும் நோக்கத்துடன் வரும் அழைப்புகளும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், இதுபோன்ற தேவையற்ற அழைப்புகள் (Spam Calls) மற்றும் குறுஞ்செய்திகளைக் கட்டுப்படுத்த இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, இனி அடிக்கடி, உங்கள் மொபைலுக்கு தேவையற்ற விளம்பர அழைப்புகள் (Spam Calls) வந்தாலோ அல்லது சந்தேகத்திற்குரிய எண்களில் இருந்து தொடர்பு கொண்டலோ புகாரளிக்கும் வசதி எளிதாகி விட்டது. தேவையற்ற விளம்பர அழைப்புகள் (Spam Calls) மற்றும் குறுஞ்செய்திகள் குறித்துப் புகாரளிக்க TRAI DND (Do Not Disturb) என்ற செயலியை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் உங்கள் புகார்களை பதிவு செய்யலாம்.
இதுபோன்ற புகார்களைப் பதிவு செய்வதற்கு TRAI-யின் DND செயலி முக்கியப் பங்காற்றியுள்ளது. மொத்த புகார்களில் 92.9 சதவீதம், அதாவது 14.21 லட்சம் புகார்கள் இந்தச் செயலி மூலமாகவே வந்துள்ளன. செப்டம்பர் 30-ம் தேதி நிலவரப்படி, இந்தச் செயலி 42.36 லட்சம் முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்த செயலியை (TRAI DND ) கூகுள் பிளே ஸ்டோர் (Android) அல்லது ஆப் ஸ்டோரில் (iOS) இருந்து பதிவிறக்கம் செய்து, உங்கள் மொபைல் எண் மற்றும் OTP மூலம் லாக் இன் (Login)செய்து வைக்க வேண்டும்.
செயலியில் 'Change Preferences' பகுதிக்குச் சென்று, அனைத்து விளம்பர அழைப்புகளையும் தடுக்க 'Full DND' அல்லது குறிப்பிட்ட பிரிவுகளை மட்டும் தடுக்க 'Partial DND' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
உங்கள் போன்களில் Phone ஆப் திறந்து, மேலே உள்ள மூன்று புள்ளிகளை (Settings) கிளிக் செய்து, Caller ID & spam பகுதிக்குச் செல்லவும். அதில் See caller and spam ID மற்றும் Filter spam calls ஆகிய இரண்டையும் ஆன் (On) செய்யவும்.
DND சேவையைச் செயல்படுத்திய பிறகும் விளம்பர அழைப்புகள் வந்தால், அழைப்பு வந்த 3 நாட்களுக்குள் செயலியில் உள்ள 'Report Spam Call' அல்லது 'Report Spam SMS' அல்லது TRAI MyCall / TRAI DND செயலி மூலமாகப் புகார் அளிக்கலாம்.
செயலி இல்லாமலேயே உங்கள் மொபைலில் இருந்து START 0 என டைப் செய்து 1909 என்ற எண்ணுக்கு SMS அனுப்புவதன் மூலம் அனைத்து விளம்பர அழைப்புகளையும் தடுக்கலாம்.
1909 என்ற எண்ணிற்கு அழைத்து, குரல்வழி (IVRS) வழிகாட்டுதல் படி DND சேவையைத் தொடங்கலாம்.
சந்தேகத்திற்குரிய அல்லது பண மோசடி நோக்கத்துடன் வரும் அழைப்புகள் குறித்துத் தொலைத்தொடர்புத் துறையின் Sanchar Saathi (Chakshu) இணையதளத்திலோ அல்லது 1930 என்ற சைபர் கிரைம் உதவி எண்ணிலோ உடனடியாகப் புகாரளிக்கவும்.
தேவையற்ற விளம்பர அழைப்புகள் மற்றும் மோசடி முயற்சிகளைக் கட்டுப்படுத்த TRAI தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வந்தாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியமாகிறது. தெரியாத எண்களில் இருந்து வரும் சந்தேகத்திற்குரிய (ஸ்பேம் அழைப்புகள்) அழைப்புகளை நம்பி தனிப்பட்ட விவரங்கள், வங்கி ரகசிய எண்கள் போன்றவற்றைப் பகிரக் கூடாது.
அதேபோல், தேவையற்ற விளம்பர அழைப்புகள் தொடர்ந்து வந்தால் DND செயலி மூலம் புகார் அளிக்கலாம். இதன் மூலம் விதிகளை மீறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க உதவியாக இருக்கும்.