

கடந்த மார்ச் ஒன்றாம் தேதி பாரத பிரதமர் நரேந்திர மோடி தேசிய ஜனநாயக கூட்டம் சார்பிலான மாநாட்டில் பங்கேற்க மதுரை வந்தார். இதற்கு அடுத்த நாளே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்று, உள்துறை அமைச்சர் அமித் ஷா-வை சந்தித்தார்.
விரைவில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் இந்த சந்திப்பு தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது இந்நிலையில் டெல்லி சென்று திரும்பிய இபிஎஸ் அதிமுக - பாஜக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இன்னும் ஓரிரு நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்ற பரபரப்பான நிலையில், கூட்டணி குறித்த விவகாரங்களில் தமிழ்நாட்டின் முன்னணி கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக முடியாத நிலையில், அது தொடர்பான பேச்சுக்கள் இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லிக்கு சென்று அமித்ஷாவை நேரில் சந்தித்து கூட்டணி தொடர்பாக பேசியுள்ளார்.
இன்று தமிழகம் திரும்பிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக பாஜக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய இருப்பதாகவும், திமுக காங்கிரஸ் கூட்டணியில் தான் சலசலப்பு ஏற்பட்டு வருகிறது; எங்கள் கூட்டணி பலமாகவே இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இபிஎஸ் மேலும் கூறுகையில், “மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றதற்கு பிறகு, உடனடியாக டெல்லியில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அதனால் நான் மட்டும் தனியாக டெல்லிக்கு சென்று அமித்ஷாவை நேரில் சந்தித்து கூட்டணி தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டேன்.
கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் அதற்கான வாய்ப்புகள் ஏற்படும். ஆனால் சசிகலா தொடங்கியுள்ள கட்சியை எங்கள் கூட்டணியில் சேர்ப்பது தொடர்பாக இந்த ஆலோசனையும் இதுவரை செய்யப்படவில்லை.
திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் தான் தற்போது சலசலப்பு ஏற்பட்டு வருகிறது. ஆனால் எங்கள் கூட்டணி பலமாகவே இருக்கிறது. வருகின்ற சட்டமன்ற தேர்தலில், அதிமுக பாஜக கூட்டணி அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
சசிகலா புதிய கட்சியைத் தொடங்கியுள்ள நிலையில், அவரை அதிமுக கூட்டணியில் இணைப்பது தொடர்பாக எந்த ஆலோசனையும் செய்யப்படவில்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.
ஏற்கனவே அதிமுக-வின் முன்னணி நிர்வாகிகளாக இருந்த செங்கோட்டையன் மற்றும் ஓபிஎஸ் ஆகிய இருவரும் வேறு கட்சிகளுக்கு சென்று விட்டனர். இவர்களின் இழப்பு அதிமுக கூட்டணிக்கு பாதகமாக பார்க்கப்பட்டாலும், கூட்டணியை வலுப்படுத்த அடுத்த கட்ட முயற்சிகளில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
அதிமுக பாஜக கூட்டணி பலமாக இருக்கும் அதே சூழலில், திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் பல்வேறு சலசலப்புகள் ஏற்பட்டு வருவது, பரபரப்பான சூழலை ஏற்படுத்தியுள்ளது.