இனி சிறுவர்களை வேலைக்கு வைத்தால் 2 ஆண்டு சிறை..! - புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு..!

Child labor
Child labor
Updated on

கடந்த 19-ம்தேதி சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலை ஏற்பட்ட வெடிவிபத்தில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த பலர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதனை தொடர்ந்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு தேனி மாவட்டம் கம்பம் காட்டுப்பள்ளி வாசல் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் இருவர் உயிரிழந்தனர். அதனை தொடர்ந்து விதிகளுக்குப் புறம்பாகச் செயல்படும் பட்டாசு ஆலை உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என விருதுநகர் ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையே பட்டாசு ஆலைகளில் வெடிமருந்து கலப்பை காலை வேளையிலேயே முடிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. பொதுவாக பட்டாசு வெடி மருந்து கலவை தயாரிக்கும் பணி வழக்கமாக அதிகாலை தொடங்கி நண்பகல் வரை நடைபெறும். இந்நிலையில் தான் ரசாயன கலவை மேற்கொள்வதை காலை 6 மணிக்கு தொடங்கி 10 மணிக்குள் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பட்டாசு ஆலைகளில் ஏற்படும் வெடி விபத்துகளை தடுக்க மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் பட்டாசு ஆலைகளில் விபத்து நேரிடுவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
ஒழியட்டும் குழந்தைத் தொழிலாளர் முறை!
Child labor

தற்போது கோடை விடுமுறை என்பதால் பள்ளி குழந்தைகளை பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலை பணிகளில் ஈடுபடுத்தப்படும் அபாயம் இருப்பதாக கருதப்படுகிறது. கிராமப்புறங்களில் பள்ளி விடுமுறை காலங்களில் குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் நடைமுறை உள்ளது. சில பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகளில் உள்ள முதலாளிகள் அல்லது மேலாளர்கள் அங்கு வேலை செய்பவர்களிடம் அவர்களது குழந்தைகளை பள்ளி விடுமுறையின்போது வேலைக்கு அனுப்புமாறு கோரிக்கையும் விடுகின்றனர். ஆண்டுதோறும் இதுகுறித்து பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை சார்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறையின் மதுரை மண்டல அலுவலகத்தின் நிர்வாக எல்லைக்குள் மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பல தொழிற்சாலைகள் உள்ளன.

இந்நிலையில் இதுகுறித்து மதுரை மண்டல தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை கூடுதல் இயக்குநர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், மதுரை மண்டல தொழிற்சாலை பாதுகாப்பு துறையின் எல்லைக்குள் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் உற்பத்தி நிறுவனங்களில் 14 வயது பூர்த்தியடையாத குழந்தைகளை வேலைக்கு வைக்கக்கூடாது. அத்துடன் தொழிற்சாலைகளில் வேலை செய்ய அனுமதிக்க கூடாது. அவ்வாறு ஈடுபடுத்துவது, குழந்தை மற்றும் வளரியம் பருவ தொழிலாளர் (தடை மற்றும் முறைபடுத்துதல் சட்டம்) 1986 (திருத்திய சட்டம்-2016)ன் படி தடை செய்யப்பட்டுள்ளது. தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், பள்ளிக்குழந்தைகளை, வளரிளம் பருவத்தினரை பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகளில் பணியில் ஈடுபடுத்த வேண்டாம்.

இதையும் படியுங்கள்:
ஒழிப்போம் குழந்தை தொழிலாளர் முறையை! வளர்ப்போம் குழந்தைகளின் கனவுகளை!
Child labor

மேலும் துறை அதிகாரிகள் ஆய்வின் போது குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினர் பணியில் இருப்பது தெரியவந்தால், தொழிற்சாலை உரிமையாளர் மற்றும் மேலாளர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும். அத்துடன் கோர்ட்டு நடவடிக்கை மூலம் 2 வருட சிறை தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com