

தமிழ்நாடு முழுவதும் சுமார் 717 டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட முதலமைச்சர் விஜய் நேற்று முன்தினப் உத்தரவிட்டுள்ளார். இதன்படி வழிபாட்டு தலங்களுக்கு அருகே உள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்களுக்கு அருகே உள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்களுக்கு அருகே உள்ள 255 டாஸ்மாக் கடைகள் அடுத்த 2 வாரத்திற்குள் மூடப்பட உள்ளன. இதில் சில கடைகள் அன்றைய தினமே மூடப்பட்டன.
டாஸ்மாக் கடையை மூடும் முதல்வரின் இந்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது 21 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு மது வழங்கக் கூடாது என டாஸ்மாக் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை மீறி 21 வயதுக்கும் குறைந்த இளைஞர்களுக்கு மது விற்றால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் பணியாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த மே 10-ம் தேதி தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் பதவி ஏற்ற நிலையில், மது மற்றும் போதை பழக்கத்தை ஒழிக்கும் நடவடிக்கையை தீவிரமாக மேற்கொள்வேன் என வாக்குறுதி அளித்திருந்தார். இதன்படி 717 மதுக்கடைகள் விடுபட்ட நிலையில், தற்போது மது விற்பனையில் வயது நிர்ணயம் செய்திருப்பது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் இளைஞர்கள் பலரும் மது மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி தங்கள் வாழ்க்கையை சீரழித்துக் கொண்டிருக்கின்றனர். இதிலிருந்து தமிழக இளைஞர்களை மீட்க தீவிரமான நடவடிக்கை அவசியம்.
அவ்வகையில் மதுக் கடைகளை மூடிய முதல்வர், மது வாங்குவதற்கு குறைந்தபட்சம் 21 வயது கட்டாயம் என்ற விதிமுறையால், இளைஞர்கள் மதுப்பழக்கத்திலிருந்து விடுபட அதிக வாய்ப்புள்ளது. மது மற்றும் போதைப் பழக்கத்திலிருந்து இளைஞர்களை பாதுகாக்க தமிழக அரசு முன்னெடுத்திருக்கும் இந்த நடவடிக்கைகளை போலவே, பெற்றோர்களும் பிள்ளைகளின் மீது அக்கறை செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
மது வாங்க வரும் இளைஞர்களின் வயதில் சந்தேகம் ஏற்பட்டால், ஆதார் மற்றும் லைசென்ஸ் உள்ளிட்ட அரசு ஆவணங்களை சரி பார்க்க வேண்டும் என டாஸ்மாக் ஊழியர்களுக்கு அறிவுரைக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவையும் மீறி, 21 வயதுக்கு குறைவான இளைஞர்களுக்கு மது விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தால், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தற்போது வரை மதுக்கடைகள் மதியம் 12 மணிக்கு திறக்கப்பட்டு, இரவு வரை மது விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் மதுக்கடைகளின் நேரத்தை மதியம் 12:00 மணி முதல் இரவு 8 மணிக்கே மூட வேண்டும் என தமிழக அரசு ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளி வருகின்றன.
இது மட்டும் நடந்தால் சந்துக்கடைகள் அதிகரித்து விடும். ஆகையால் மதுக் கடைகள் முன்கூட்டியே மூடப்படுமானால், வெளியில் மது விற்பதைத் தடுக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.