

நாட்டில் சைபர் குற்றங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைத் தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வந்தாலும், மோசடிக்காரர்கள் புதுப்புது வழிகளில் சைபர் குற்றங்களை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு, இனி பயன்பாட்டுக்கு வரும் அனைத்து மொபைல் போன்களிலும் ‘சஞ்சார் சாத்தி (Sanchar Saathi)’ என்ற செயலியை கட்டாயம் இன்ஸ்டால் செய்ய வேண்டும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இந்த செயலி மொபைல்போனில் இருந்தால், சைபர் குற்றங்களை எளிதாக தடுக்க முடியும் எனவும் மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் சஞ்சார் சாத்தி செயலியின் மூலம் பயனர்களின் தனிநபர் தகவல்கள் பாதுகாக்கப்படுவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் என பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வந்தனர். இதனையடுத்து சஞ்சார் சாத்தி செயலி கட்டாயம் என்ற தனது முடிவை மாற்றி இருக்கிறது மத்திய அரசு.
சஞ்சார் சாத்தி செயலி ஒரு உளவு செயலியாக இருக்கக் கூடுமோ என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. மேலும் இந்த செயலியை மொபைல் போனில் இன்ஸ்டால் செய்வதன் மூலம், தனிநபர்களின் தனியுரிமைத் தகவல்கள் பகிரப்படும் எனவும் பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் சஞ்சார் சாத்தி செயலிக்கு தொடர்ந்து எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில், இந்த செயலியை தேவையென்றால் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்; தேவையில்லை என நினைத்தால் அன்-இன்ஸ்டால் செய்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய தகவல் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அவர்கள் கூறுகையில், “சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் இன்றைய நிலையில் மோசடி மற்றும் திருட்டு ஆகியவற்றிலிருந்து உங்களைப் பாதுகாக்க சஞ்சார் சாத்தி செயலி உதவும். சஞ்சார் சாத்தி செயலியை நீங்கள் உங்கள் போனில் இலவசமாகவே வைத்திருக்கலாம். தேவையில்லை என நினைத்தால் அன்-இன்ஸ்டால் செய்து விடலாம்.
சஞ்சார் சாத்தி செயலியில் நீங்கள் பதிவு செய்தால் மட்டுமே அது செயலில் இருக்கும். பதிவு செய்யாத போது, அது செயலற்றதாகவே இருக்கும். சஞ்சார் சாத்தி செயலியை நாட்டு மக்கள் அனைவருக்கும் கொண்டு செல்வதே எங்களின் இலக்கு. இந்த செயலியின் மூலம் பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே எங்களின் முக்கிய கடமை” என அவர் தெரிவித்துள்ளார்.
ஆப்பிள் நிறுவனம் மத்திய அரசின் சஞ்சார் சாத்தி செயலியை கட்டாயம் நிறுவ வேண்டும் என்ற உத்தரவை ஏற்க மறுத்துள்ளது. இந்த செயலியின் மூலம் பயணர்களின் பாதுகாப்பு மற்றும் தனி உரிமையில் சிக்கல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது என இந்நிறுவனம் கருதுகிறது.
இது குறித்து தனது விளக்கத்தை மத்திய அரசிடம் தெரிவிக்க போவதாகவும் ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில் மத்திய அரசே இந்த செயலியை விருப்பமில்லை என்றால் நீக்கி கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.
முன்னதாக சன்சார் சாத்தி செயலியை 90 நாட்களுக்குள் சாப்ட்வேர் அப்டேட் மூலம் அனைத்து மொபைல் போன்களிலும் இன்ஸ்டால் செய்ய வேண்டுமென மத்திய அரசு தெரிவித்து இருந்தது. மேலும் விற்பனையில் உள்ள புதிய போன்களிலும் இன்ஸ்டால் செய்ய வேண்டியது அவசியம் எனத் தெரிவித்திருந்த நிலையில், தற்போது தனது முடிவை மாற்றி விருப்பம் இருந்தால் மட்டுமே பயனர்கள் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது மத்திய அரசு.