தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கூல் லிப் எனும் போதைப் பொருட்களை பயன்படுத்துவோர் அதிகம் இருப்பதாக தெரிகிறது. எனவே அதை பாதுகாப்பற்ற உணவுப் பொருள் என அறிவித்து அதனை இந்தியா முழுவதும் ஏன் தடை செய்யக்கூடாது? என்பது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை பள்ளி கல்வித்துறை செயலாளர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய ஹை கோர்ட் கிளை ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசு சார்பில் கூடுதல் தலைமை வக்கீல் ஆஜராகி கூறியது "அந்தக் காலத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு மாணவர்கள் மிகவும் பயப்பட்டனர். மாணவர்களை ஆசிரியர்கள் கண்டித்தனர். இப்போது மாணவர்களை சிறிது கண்டித்தாலே அவர்கள் தவறான முடிவு எடுத்து தற்கொலை செய்து கொள்கின்றனர். பெற்றோர்களும் மாணவர்களை கடுமையாக கண்டிக்க கூடாது என வலியுறுத்துகின்றனர். கண்டிப்புடன் நடந்து கொள்ளும் ஆசிரியர்கள் பல சிரமங்களை சந்திக்கின்றனர். எனவே ஆசிரியர்கள், பெற்றோர் இணைந்து மாணவர்களை நல்வழிப்படுத்த ஆலோசனை வழங்க வேண்டும். தமிழக அரசு சார்பில் பள்ளி அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என கடுமையான சட்டங்கள் இயற்றி கண்காணித்து வருகிறோம். எனவே புகையிலை பொருட்கள் தடை குறித்த மத்திய அரசின் சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வந்து, முதல் கட்டமாக பள்ளி வளாகங்கள் அருகே புகையிலை பொருட்கள் விற்பதை நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும்" என்றார். மேலும் மத்திய அரசின் மூத்த வக்கீல் இந்த வழக்கில் ஆஜராக உள்ளார் அதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கூறினார்.
பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், முதலில் நாடு முழுவதும் பள்ளி மாணவர்கள் புகையிலை பொருட்களுக்கு அடிமையாகாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே முதல் கட்டமாக பள்ளி வளாகங்கள் அருகில் புகையிலை பொருட்கள் விற்பதை நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும். அடுத்ததாக நாடு முழுவதும் குட்கா, கூல் லிப் உள்ளிட்ட புகையிலை பொருட்களின் விற்பனையை தடை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குட்கா, கூல் லிப் உட்பட புகையிலை தயாரிப்பு நிறுவனங்களுக்கு மேலும் பல கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக மத்திய அரசின் சட்டத்தில் கடுமையான திருத்தங்கள் மேற்கொள்வது உள்ளிட்டவை குறித்து மத்திய சுகாதாரத் துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்ற உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தார்.
புகையிலை பொருட்கள் மீது நிரந்தர தடை கொண்டு வருவதற்கு சென்னை ஹை கோர்ட் மதுரை கிளை தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதே போல பிற மாநிலங்களில் உள்ள ஹைகோர்ட்டுகளும், புகையிலை மற்றும் போதை பொருள்கள் மீது தடை கொண்டு வர தொடர் நடவடிக்கை எடுத்து வந்தால் இப்போது இல்லாவிட்டாலும், விரைவில் இந்தியா முழுவதும் புகையிலை உட்பட போதைப் பொருட்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து போகும். இதற்கு நம் நாட்டு நீதித்துறை மட்டும் அல்லாமல் நாட்டை ஆள்பவர்களும் முன் வர வேண்டும். அப்போதுதான் இந்த பணியை விரைந்து முடிக்கலாம். அதை விட்டுவிட்டு அரசுக்கு வருவாய் தரும் வழியாக புகையிலை மற்றும் போதைப் பொருட்கள் தயாரிப்பை ஆட்சியாளர்கள் பார்த்தார்கள் என்றால், அது நாட்டுக்கு செய்யும் கேடு ஆகும். இப்போது சூழல் நன்கு கனிந்து வந்துள்ளது. அதனால் நீதித்துறையுடன் இணைந்து ஆட்சியாளர்கள் புகையிலைக்கு எதிராக போராடி ஒடுக்க வேண்டிய தருணம் தான் இது. இதை எவ்வித சிரமமும் இன்றி செய்து முடித்தால் வருங்கால இந்தியா வலுவான இந்தியாவாக இருக்கும்.