

தமிழ்நாட்டில் சொத்து வாங்குபவர்கள் பத்திரப்பதிவு அலுவலகத்திற்குச் செல்லாமலேயே பத்திரப்பதிவு செய்யும் நடைமுறையை முழுமையாக்கும் வகையில், பதிவு செய்யப்பட்ட சொத்து ஆவணங்களை ஒரே இடத்தில் அச்சிட்டு, விரைவு அஞ்சல் மூலம் வீடுகளுக்கே அனுப்பும் புதிய திட்டத்திற்கு தமிழக அரசு நிர்வாக ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக வணிக வரி மற்றும் பதிவுத்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், பத்திரப்பதிவு திட்டத்தின் முதற்கட்டமாக, தமிழகத்தில் எங்கிருந்தும் அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளில் மனை வாங்குபவர்களின் முதல் விற்பனைப் பத்திரம் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடு வாங்குபவர்களின் முதல் விற்பனைப் பத்திரம் ஆகியவற்றுடன் தொடர்புடைய உரிமைப் பத்திரங்கள் ஒப்படைப்பு ஆவணங்களுக்கும், நேரில் ஆஜராக தேவையில்லாத பத்திரப்பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த முறையில், சொத்து வாங்குபவர்கள் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டிய அவசியமில்லை. அடையாளச் சரிபார்ப்பு, பயோமெட்ரிக் பதிவு மற்றும் பத்திரத்தைச் செயல்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் பாதுகாப்பான டிஜிட்டல் வழிமுறைகள் மூலம் மேற்கொள்ளப்படும்.
பத்திரப்பதிவு முடிந்ததும், டிஜிட்டல் கையொப்பமிடப்பட்ட ஆவணங்கள் சம்பந்தப்பட்டவர்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். இருப்பினும், பொதுமக்கள் பலர் பதிவு செய்யப்பட்ட பத்திரத்தின் அசல் காகிதப் பிரதியையும் பெற விரும்புவதால், அதனை வீடுகளுக்கே அனுப்பும் வகையில் மையப்படுத்தப்பட்ட அச்சிடும் வசதியை ஏற்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி, பதிவு செய்யப்பட்ட அனைத்து ஆவணங்களும் ஒரே மையத்தில் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய சிறப்பு காகிதத்தில் அச்சிடப்படும். இதற்குத் தேவையான பாதுகாப்புக் காகிதங்கள் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்திடமிருந்து பதிவுத்துறை நேரடியாகக் கொள்முதல் செய்யும்.
அச்சிடும் மையத்தை அமைத்து 5 ஆண்டுகளுக்கு இயக்குவதற்கான சேவை வழங்குநர், திறந்த போட்டி ஒப்பந்தப்புள்ளி மூலம் தேர்வு செய்யப்படுவார். அச்சிடும் இயந்திரங்களை நிறுவுதல், பணியாளர்களை நியமித்தல் மற்றும் அன்றாடப் பணிகளை மேற்கொள்ளுதல் ஆகியவற்றைத் தேர்வு செய்யப்படும் நிறுவனம் கவனிக்கும்.
அச்சிடப்படும் ஆவணங்கள் போலியாகத் தயாரிக்கப்படுவதை தடுக்கும் வகையில் ஹாலோகிராம், நுண்ணிய அச்சிடுதல் மற்றும் தனித்துவமான வரிசை எண்கள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெறும். மேலும், ஆவணங்களின் தரம், அச்சிடும் கால அவகாசம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் ஆகியவை கண்காணிக்கப்படும்.
எத்தனை நாட்களுக்குள் ஆவணங்கள் கிடைக்கும்?
அச்சிடப்பட்ட பத்திரங்களைப் பெற்றுக்கொண்டு, சொத்து வாங்குபவர்களின் பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு விரைவு அஞ்சல் மூலம் அனுப்புவதற்காக இந்திய அஞ்சல் துறையுடன் பதிவுத்துறை தனியாக ஒப்பந்தம் மேற்கொள்ளும். சென்னை மற்றும் அதன் அருகிலுள்ள மாவட்டங்களுக்கு 48 மணி நேரத்திற்குள் ஆவணங்களை விநியோகிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொலைதூர மாவட்டங்களுக்கு ஏற்றவாறு தனித்தனி காலக்கெடு நிர்ணயிக்கப்படும்.
இதற்கான அச்சிடும் மையத்திற்குத் தேவையான இடத்தைப் பதிவுத்துறை வாடகையின்றி வழங்கும். அச்சிடும் செலவு, பாதுகாப்புக் காகிதங்களுக்கான செலவு மற்றும் அஞ்சல் கட்டணம் ஆகியவை பத்திரப்பதிவுக் கட்டண அமைப்பின் மூலம் வசூலிக்கப்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆவணத்தையும் அச்சிடுவதற்கான சேவைக் கட்டணத்தை ஒப்பந்தப்புள்ளியில் தேர்வு செய்யப்படும் நிறுவனம் நிர்ணயிக்கும் தொகையின் அடிப்படையில் பதிவுத்துறை வழங்கும்.
மேலும், பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை முத்திரையிடப்பட்ட உறையில் விரைவு அஞ்சல் மூலம் அனுப்புவதற்கு ஏதுவாக, தமிழ்நாடு பதிவுச் சட்ட விதிகளை திருத்தவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
2026-2027ஆம் நிதியாண்டில் இந்த மையப்படுத்தப்பட்ட அச்சிடும் வசதியை அமைப்பதற்கு தமிழக அரசு நிர்வாக ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம், எங்கிருந்தும் பத்திரப்பதிவு திட்டத்தின் கீழ் பத்திரப்பதிவு செய்வதுடன், பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் காகிதப் பிரதியையும் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே பெற்றுக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.