
வாகன உதிரி பாகங்கள் பெரும்பாலும் இரும்பு மற்றும் பிளாஸ்டிக் போன்ற பொருட்களால் தான் தயாரிக்கப்படுகின்றன. பாழடைந்த வாகனத்தில் இருந்து இரும்பால் ஆன பாகங்களை மறுசுழற்சி செய்யவோ அல்லது வேறு ஏதேனும் வேலைகளுக்குப் பயன்படுத்தவோ முடியும். ஆனால் பிளாஷ்டிக்கால் ஆன வாகன உதிரி பாகங்கள் வீணாகவே கிடக்கும். இதனால் சுற்றுச்சூழல் மாசுபாடு அதிகரிக்கும். இதனைக் கருத்தில் கொண்டு பிளாஷ்டிக்கிற்கு மாற்றாக வாகன உதிரி பாகங்களை எதில் செய்யலாம் என்ற ஆய்வை மேற்கொண்டு, அதில் வெற்றி கண்டுள்ளது அசாமில் உள்ள கவுஹாத்தி ஐஐடி.
இன்றைய காலகட்டத்தில் பொதுவாக பலரும் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். நாளுக்கு நாள் வாகனங்களின் தேவையும் அதிகரித்து வருவதால், வாகன உதிரி பாகங்கள் உற்பத்தியில் பிளாஷ்டிக்கைத் தவிர்க்க மூங்கில்கள் நல்ல மாற்றாக இருக்கும் என கவுஹாத்தி ஐஐடி முடிவு செய்தது. இதன்படி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு விளைவிக்காத இந்திய ரக மூங்கிலைத் தேர்வு செய்து ஆய்வு செய்தனர் ஆராய்ச்சியாளர்கள்.
கவுஹாத்தி ஐஐடி ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு முடிவுகள் தற்போது சுற்றுச்சூழலுக்கு சாதகமாக அமைந்துள்ளன. இதன்படி அதிக திறன் கொண்ட வாகன உதிரி பாகங்களை இந்திய மூங்கில் ரகத்தைக் கொண்டு உருவாக்கியுள்ளனர். இதன்மூலம் ஆட்டோமொபைல் துறையில் மூங்கிலைப் பயன்படுத்தி சாதனைப் புரிந்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.
வாகனங்களின் உட்புற வடிவமைப்பிற்கு சில வகையான பிளாஷ்டிக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. இதனை பசுமைக்கு மாற்றும் பொருட்டு, 4 வகையான இந்திய மூங்கில்களின் கலவையை எடுத்து, பெட்ரோலியம் அல்லது உயிரி அடிப்படையிலான பசைப் பொருட்களுடன் சேர்த்து வேதியியல் வினை புரிந்தனர். இந்த ஆய்வின் முடிவில் பாலிமர் போன்ற வலிமையான மூலப்பொருள் கிடைத்து. இந்த மூலப்பொருள் சுமார் 17 தரச் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது.
இந்தச் சோதனைகளின் முடிவில் அதிக வெப்பநிலைகளைத் தாக்குப்பிடித்தல், அதிக வலிமை மற்றும் குறைந்த அளவு ஈரப்பதத்தைத் தக்க வைத்தல் போன்ற பல அம்சங்களை புதிதாக தயாரிக்கப்பட்ட மூங்கில் மூலப்பொருள் தன்னகத்தே கொண்டிருப்பது நிரூபணமானது. மேலும் இதனைக் குறைந்த செலவில் தயாரிக்க முடியும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த பசுமையான மூலப்பொருளைப் பயன்படுத்தி வாகன உதிரிபாகங்களை அசாம் கவுஹாத்தி ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் தயாரித்துள்ளனர். வாகனங்களின் டோர் பேனல், டேஷ் போர்டு மற்றும் சீட் பின்புறம் என பல பாகங்களில் மூங்கில் மூலம் தயாரிக்கப்பட்ட்ட பாலிமரைப் பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.