.png?w=480&auto=format%2Ccompress&fit=max)
இந்தியாவில் சமீபகாலமாக திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஜிம்மில் பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது, விளையாடும் போது, உட்கார்ந்திருக்கும் போது, நடனமாடிக்கொண்டிருக்கும் போது என மாரடைப்பு மரணங்கள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக இளைஞர்கள் தான் அதிகளவில் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைகின்றனர். இதற்கு மாறிவரும் வாழ்க்கை முறை, பாஸ்ட்புட் உணவு, நீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை செய்வது, தூக்கமின்மை, மனஅழுத்தம் போன்ற பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.
ஆனால் இவை அனைத்தையும் மிஞ்சும் வகையில் கடந்த சில மாதங்களாக கர்நாடகத்தில் மாரடைப்பால் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இளம்வயதினர் அதிகமாக மாரடைப்புக்கு உயிரிழந்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது. அதிலும் ஹாசன் மாவட்டத்தில் மட்டும் மாரடைப்புக்கு இதுவரை 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
ஹாசன், சாம்ராஜ்நகர், சிக்கமகளூரு மாவட்டம் உள்பட மாநிலம் முழுவதும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 45 பேர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர். அதேபோல் தாவணகெரே மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் 75-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தினமும் மாநிலத்தில் தொடர்ந்து மாரடைப்பால் மரணம் ஏற்பட்டு வருவது பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கர்நாடகத்தில் உள்ள சாம்ராஜ்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த மனோஜ் குமார் என்ற 10 வயது சிறுவன், தார்வார் மாவட்டத்தை சேர்ந்த ஜீவிதா குசாகூர் என்ற 26 வயதான இளம்பெண், ஜெயநகரை சேர்ந்த 22 வயதான அக்ஷய், ராமநகரை சேர்ந்த 27 வயதான கிரீஷ் என இளம் வயதுடையவர்கள் அடுத்தடுத்து மாரடைப்பால் மரணமடைந்து வருவதால் பொதுமக்கள் மரண பீதியில் உள்ளனர்.
கர்நாடகாவில் மற்ற மாவட்டங்களை விட ஹாசன் மாவட்டத்தில் தான் மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. இவ்வாறு மாரடைப்பால் இறந்தவர்கள் அனைவரும் இளம் வயது உடையவர்கள் மற்றும் 45 வயதுக்கு உட்பட்டவர்கள். இது நாடு முழுவதும் கடுமையான பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதுடன் இந்த மரணம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் கர்நாடக அரசு, தங்கள் மாநிலத்தில் ஏற்பட்ட மாரடைப்புகளுக்கு கொரோனா தடுப்பூசிதான் காரணமாக இருக்கும் என்று சந்தேகிப்பதாக குற்றம் சாட்டியதையடுத்து மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் எய்ம்ஸ் ஆகியவை இணைந்து ஆய்வினை மேற்கொண்டன. அதன் அடிப்படையில் கொரோனா தடுப்பூசிக்கும், திடீரென ஏற்படும் மாரடைப்புக்கும் தொடர்பு இல்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்தது.
அதனை தொடர்ந்து பெங்களூரு டாக்டர் ரவீந்திரநாத் தலைமையிலான குழு ஹாசன் மாவட்டத்தில் ஆய்வு செய்து சுகாதாரத்துறை மந்திரி தினேஷ் குண்டுராவிடம் அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.
அதில், ஹாசன் மாவட்டத்தில் கடந்த மாதத்தில் மாரடைப்பால் உயிரிழந்த 24 பேரில், 45 வயதுக்கு உட்பட்டவர்கள் 14 பேர், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் 10 பேர் என்றும், இந்த 24 பேரில் 4 பேரின் உயிரிழப்புக்கு மாரடைப்பு காரணம் அல்ல என்றும், மீதமுள்ள 20 பேர் தான் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதேபோல் ஹாசன் மாவட்டத்தில் இதற்கு முந்தைய மாதத்தில் பதிவானதை போலவே கடந்த மாதத்திலும் மாரடைப்பால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பெங்களூரு, மைசூரு, கலபுரகி ஆகிய நகரங்களில் ஆஸ்பத்திரிகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையை பார்க்கையில் மாரடைப்பு இறப்புகள் அதிகரிக்கவில்லை என்று புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.