தாண்டவம் ஆடாத ‘கத்திரி வெயில்'... ஆரவாரம் இல்லாமல் இன்றுடன் விடைபெறுகிறது

மே மாதம் 4-ந்தேதி தொடங்கிய கத்திரி வெயில் இந்தாண்டு தாண்டவம் ஆடாமல் கோடை மழையால் குளிர்ந்து சுட்டெரிக்கும் வெப்பம் என எந்த ஆரவாரமும் இல்லாமல் வழக்கம்போல இன்றுடன் விடைபெறுகிறது.
அக்னி நட்சத்திரம்
அக்னி நட்சத்திரம்
Published on

கடந்த சில ஆண்டுகளாக பருவநிலை மாற்றம் காரணமாக கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் கொளுத்த தொடங்கி விடுகிறது. முன்பெல்லாம், ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை தான் வெயிலின் தாக்கம் இருக்கும். ஆனால் பருவநிலை மாற்றம் காரணமாக மார்ச் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. அதுமட்டுமின்றி வழக்கமாக ‘அக்னி’ நட்சத்திரம் தொடங்கிய பின்னர் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

அக்னி நட்சத்திர வெயில், சித்திரை வெயில், கத்தரி வெயில், கோடை வெயில் என்ற பல்வேறு பெயர்களும் இதற்கு உண்டு. அந்த வகையில் அக்னி நட்சத்திரம் என்பது, ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் தொடங்கும் ஒரு வானியல் நிகழ்வு ஆகும்.

இது கோடைக்காலத்தின் உச்ச வெப்ப நிலையை காட்டுகிறது. தமிழ் மாதமான சித்திரை 21-ம் தேதி முதல் வைகாசி 15-ம் தேதி வரை (பொதுவாக மே மாதத்தில்) இருக்கும் காலமாகும். சித்திரை மாதத்தில் பொதுவாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றாலும், அக்னி நட்சத்திர காலத்தில் வெயிலின் உஷ்ணம் இன்னும் அதிகமாகவே காணப்படும்.

இதையும் படியுங்கள்:
மே 4 அக்னி நட்சத்திரம் ஆரம்பம்! செய்ய கூடியவை செய்யக் கூடாதவை என்னென்ன?
அக்னி நட்சத்திரம்

தமிழ் பஞ்சாங்கம் அடிப்படையில், தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 4-ந் தேதி முதல் 28-ந் தேதி வரையிலான 25 நாட்களுக்கு அக்னி நட்சத்திர காலமாக கணக்கிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு கடந்த 4-ந் தேதி தொடங்கிய கத்திரி வெயிலின் தாக்கம் முதல் வாரத்தில் வெப்பம் இயல்பைவிட அதிகரித்து காணப்பட்டாலும், அதனைத்தொடர்ந்து வந்த நாட்களில் வெயிலின் தாக்கம் சற்று குறைந்தே காணப்பட்டது. அதுமட்டுமின்றி கோடை மழை பல்வேறு மாவட்டங்களில் பெய்து வந்த காரணத்தால் வெயிலின் தாக்கம் சற்று ஆறுதல் அளித்தது என்றே சொல்லலாம். சென்னையில் அக்னி நட்சத்திர காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டாலும் நடுவில் பெய்த மழை மக்களை குளிர்வித்ததால் சற்று ஆறுதல் அடைந்தனர்.

அதுமட்டுமின்றி தென் மேற்கு பருவமழையும் முன்கூட்டியே தொடங்கியதால், தமிழ்நாட்டில் சில இடங்களில் மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களின் பல பகுதிகளில் கனமழையும் பதிவாகி வருகிறது. இதனால் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக வெப்பம் தணிந்தே காணப்படுகிறது. கோவை, நீலகிரி போன்ற மாவட்டங்களில் அதிகனமழை முதல் மிக அதிகனமழை வரை பெய்து வருகிறது.

இந்நிலையில் சில இடங்களில் பெய்து வரும் மழையின் காரணமாக கடந்த இருதினங்களாக இயல்பைவிட 1 டிகிரி முதல் 6 டிகிரி வரை வெப்பம் குறைந்தே காணப்படுகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், இந்த காலகட்டங்களில் வெயில் சுட்டெரிக்கக் கூடிய பகுதிகளான வேலூர், திருப்பத்தூரில் நேற்று இயல்பைவிட 6 டிகிரி குறைவான வெப்பமே பதிவானது. சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழையும் பெய்து மக்களை குளிர்வித்தது.

இதையும் படியுங்கள்:
சித்திரை-வைகாசியில் வெயில் வாட்டி வதைக்க காரணம் என்ன?
அக்னி நட்சத்திரம்

இந்த நிலையில் மே மாதம் 4-ந் தேதி தொடங்கிய கத்திரி வெயில் இந்தாண்டு தாண்டவம் ஆடாமல் கோடை மழையால் குளிர்ந்து எந்த ஆரவாரமும் இல்லாமல் இன்றுடன் (மே 28-ம்தேதி ) விடைபெறுகிறது. இந்தாண்டில் அதிகபட்சமாக ஈரோடு, கரூர், மதுரை, வேலூரில் 106 டிகிரி வெயில் பதிவானது. கடந்த ஆண்டில் கரூரில் 111 டிகிரி வெயில் பதிவானது உச்சபட்சமாக பார்க்கப்பட்டது. அதனுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு கத்திரி வெயில் காலத்தில் வெப்பத்தின் அளவு குறைந்தே இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com