இந்தியாவின் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் திருப்பதி ஏழுமலையான் கோயிலும் ஒன்று. நாடு முழுக்க இலட்சக்கணக்கான பக்தர்கள் அனைத்து மாநிலங்களிலும் இருந்தும் திருப்பதிக்கு வருகின்றனர். வாரத்தின் அனைத்து நாட்களிலும் இங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அப்படியென்றால் தரிசனம் செய்ய எவ்வளவு நேரமாகும் என நினைத்துப் பாருங்கள். ஏழுமலையானை தரிசனம் செய்ய கூட்டத்தைப் பொறுத்து 3 நாட்கள் வரை கூட ஆகலாம்.
முன்பெல்லாம் நடைபாதையில் நடந்து செல்வோர் சற்று விரைவாக தரிசனம் பார்த்து வந்தனர். ஆனால் கொரோனா வைரஸ் பரவலுக்குப் பின் 300 ரூபாய் சிறப்பு தரிசனம் தவிர்த்து, மற்ற அனைவருமே ஒரே மாதிரியான குடோனில் தான் தரிசனத்திற்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில் வெறும் 2 மணி நேரத்தில் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய தேவஸ்தானம் மும்முரமாக செயல்பட்டு வருகிறது.
‘திருப்பதிக்கு போனால் திருப்பம் வரும்’ என்ற வாக்கியம் பக்தர்கள் மத்தியில் மிகவும் பரிட்சையமானது. அதற்கேற்ப எவ்வளவு மணி நேரமானாலும் பக்தர்கள் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் திருப்பதி ஏழமலையானை தரிசிக்க ஏஐ தொழில்நுட்ப வசதியை கொண்டு வரப்போவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதன்மூலம் இரண்டே மணி நேரத்தில் தரிசனம் செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. விரைவில் இந்த புதிய வசதி அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் அறங்காவலர் குழுத் தலைவரான பி.ஆர்.நாயுடு கூறுகையில், “திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் அனைத்து வசதிகளையும் செய்து தருகிறது. தரிசன நேரத்தைக் குறைக்க நாங்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம். தற்போது தரிசனத்தை விரைவுபடுத்த ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 1 முதல் 2 மணி நேரத்திற்குள்ளாகவே பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும். இதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தானம் மேற்கொண்டு வருகிறது.
ஸ்ரீவாணி அறக்கட்டளையின் தரிசன நேரமும் தற்போது குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி காலையில் டிக்கெட்டுகளைப் பெற்றால், மாலையில் தரிசனம் செய்ய முடியும். திருப்பதி ஏழுமலையான் தரிசனம் மற்றும் லட்டு விற்பனையில் சைபர் மோசடிகள் அதிகரித்துள்ளன. இந்தக் குற்றங்களைத் தடுக்கவும், பக்தர்கள் ஏமாறாமல் இருக்கவும் திருமலையில் சைபர் பாதுகாப்பு ஆய்வகம் அமைக்கப்பட உள்ளது. இதுதவிர கடப்பா மாவட்டத்தின் ஒண்டிமிட்டா ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோயிலில் அன்னதானம் வழங்க திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ரூ.4 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக ஏஐ தொழில்நுட்பம் அசுர வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதன் பலனாக அனைத்திலும் ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்று திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கவும் ஏஐ பயன்படுகிறது என்றால், இதன் வளர்ச்சியை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க இனி நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை என்பது பக்தர்களுக்கு வரப்பிரசாதம் தான்.