

உலக நாடுகள் பலவற்றை எல் நினோ தாக்கம் பாதித்துள்ள பின்னணியில் பசிபிக் பெருங்கடலில் 11 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நேரத்தில் உருவான மூன்று சூறாவளிகள் தீவிரமடைந்துள்ளன.
பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்கு மேற்பரப்பு நீர் இயல்பை விட அதிகமாக வெப்பமடைவதை எல் நினோ (El Niño) என்று அழைக்கிறார்கள். பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள தீவிர வெப்ப உயர்வாலும், அதிதீவிர 'எல் நினோ' (Super El Niño) காரணியாலும் உலகளவில் இயல்பான மழைப்பொழிவு முறையில் மிகப்பெரிய சீர்குலைவு ஏற்பட்டு வருகிறது.
உலக வானிலை அமைப்பு (WMO) வெளியிட்டுள்ள புதிய தகவல்களின்படி, இந்த சூப்பர் எல் நினோ நிகழ்வு மேலும் வலுவடைந்து 2027ஆம் ஆண்டு வரை நீடிக்கக்கூடும் என்றும், இது உலகளவில் தீவிர வானிலை மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளது.
மனிதனால் ஏற்படும் பருவநிலை மாற்றங்களுடன் இந்த எல் நினோவும் இணைந்திருப்பதால், உலகம் தற்போது தீவிர வானிலையின் அபாயகரமான பகுதிக்குள் (danger zone of extreme weather) நுழைந்துள்ளதாக ஐநா சபை எச்சரித்துள்ளது.
இதனால், உலகளவில் இயல்பான மழைப்பொழிவு முறையில், மிகப்பெரிய சீர்குலைவு ஏற்படுகிறது. வறட்சி, மழைப்பொழிவு ஆகிய இரண்டும் ஒருசேர அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
உருவாகியுள்ள எல்.நினோ, தென்கிழக்கு ஆசியா (இந்தியா உட்பட), ஆஸ்திரேலியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் வறட்சியும், வெப்ப அலைகளும், தென் அமெரிக்காவின் பசிபிக் கடலோரப் பகுதிகள் (பெரு, சிலி, ஈக்வடார்), கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்காவின் தெற்குப் பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாகத் தீவிரமழை, பேரழிவையும் ஏற்படுத்துகிறது.
பசிபிக் பெருங்கடலில் நிலவும் எல் நினோ (El Niño) காரணி, 2°C-க்கும் அதிகமான வெப்ப உயர்வை எட்டி 'சூப்பர் எல் நினோ' (Super El Niño) ஆக மாறியுள்ளதால், கடலின் வெப்பம் அதிகமாக உயர்ந்து, ஒரே நேரத்தில் லோவெல் (Lowell), கரீனா (Karina) மற்றும் மாரி (Marie) ஆகிய 3 சூறாவளிகள் உருவாகியுள்ளன.
மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடலில் லோவெல், கரினா, மேரி ஆகிய மூன்று சூறாவளிகள் ஒரே நேரத்தில் பக்கத்து பக்கத்து வளிமண்டலப் பகுதிகளில் சுழன்று வருகின்றன. பசிபிக் கடலில் இப்படி ஒரே நேரத்தில் மூன்று சூறாவளிகள் உருவாவது மிகவும் அரிதான நிகழ்வாகும். இது போன்ற அரிய நிகழ்வுகள் கடுமையான எல் நினோ காலங்களில் மட்டுமே ஏற்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த 3 சூறாவளிகளில், லோவெல் அதிதீவிரமான, பேரழிவை ஏற்படுத்தும் 4-வது (Category 4)வகையை சேர்ந்தது என்றும், கரினா 3-வது வகையை சேர்ந்தது மற்றும் மேரி 2-வது வகையை சேர்ந்தவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லோவெல் அதிதீவிரமான, 4-வது (Category 4)வகையை சேர்ந்த சூறாவளி அதிதீவிரமான மற்றும் கடுமையான பேரழிவை ஏற்படுத்தக்கூடிய திறன் கொண்டது என்றும் 3-வது வகையை சேர்ந்த கரினா, பெரிய சூறாவளியாகக் (Major Hurricane) கருதப்பட்டு, அதிக சேதத்தை விளைவிக்கக்கூடியது என்றும், சூறாவளி மேரி மிதமான முதல் பலத்த சேதத்தை ஏற்படுத்தக்கூடிய காற்றழுத்த வேகத்தைக் கொண்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சஃபீர்-சிம்ப்சன் (Saffir-Simpson) அளவுகோலின்படி, வகை 4 சூறாவளிகள் மிக மோசமான உள்கட்டமைப்பு சேதங்களையும், உயிர்ச் சேதங்களையும் ஏற்படுத்தக்கூடியவை என்பதால் லோவெல் சூறாவளி இதில் மிகவும் ஆபத்தானது.
இந்த 3 சூறாவளிகளில் மிகவும் ஆபத்தான லோவெல், ஹவாய் தீவை நோக்கி நகர்ந்து வருகிறது என்றும், இது கவாய் தீவில் இருந்து சுமார் 950 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது என்றும், இதனால் தீவுப் பகுதிகளில் பலத்த காற்றும், கடல் கொந்தளிப்பும் ஏற்படலாம் என்றும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த சூறாவளி நிலைமை காரணமாக ஏற்பட்ட கனமழை மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக ஹவாய் தீவுகளுக்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த சூறாவளி ஹவாய் தீவுகளை நேரடியாகத் தாக்குமா அல்லது தீவுகளுக்கு மேற்கே விலகிச் செல்லுமா என்பதில் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. அதேசநேரம் இது நேரடியாக நிலப்பரப்பை தாக்காமல், முக்கியமாக ஹவாய் தீவுகளுக்கு மேற்கே நகரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இது பல நாடுகளையும் பாதிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதுடன், இது மணிக்கு 150 மைல் வேகத்தில் நகரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இருப்பினும், வார இறுதியில் திடீரென வடமேற்கு மற்றும் வடக்கு நோக்கித் திரும்பும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
சுமார் 1 லட்சம் மக்கள் வசிக்கும் கவாய் தீவு லோவெல் சூறாவளியால் கடுமையான பாதிப்பை எதிர்கொள்ளும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஓஹு , மௌய் , பிக் ஐலண்ட் ஆகிய தீவுகளும் இதன் தாக்கத்தை எதிர்கொள்ள நேரிடும். ஹவாயை நெருங்கி வருவதால், கடலில் பெரிய அலைகளை இந்த சூறாவளி உருவாக்கத் தொடங்கியுள்ளது.
வார இறுதியில் பலத்த காற்று மற்றும் கனமழை பெய்யக்கூடும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.